வியாழன், 5 ஆகஸ்ட், 2010

இஸ்ரேல் எல்லையில் அத்துமீறினால் பதிலடிக் கொடுப்போம்- லெபனான்

பெய்ரூட்,ஆக5:இஸ்ரேல் மீண்டும் லெபனான் எல்லைப் பகுதியில் அத்துமீறினால் பதிலடிக் கொடுக்க லெபனான் ராணுவம் தயார் நிலையில் உள்ளது.

தெற்கு லெபனானின் எல்லையில் இஸ்ரேல் ராணுவத்தை மீண்டும் அனுப்பியுள்ளதாக வந்த தகவலுக்கிடையேதான் லெபனானின் இவ்வறிவிப்பு.

நேற்று முன் தினம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மூன்று லெபனான் நாட்டவர்களும், ஒரு பத்திரிகையாளரும் கொல்லப்பட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து லெபனான் நடத்திய பதிலடித் தாக்குதலில் ஒரு மூத்த இஸ்ரேலிய ராணுவ அதிகாரி கொல்லப்பட்டார்.

மீண்டும் எல்லையில் இஸ்ரேல் அத்துமீறினால் எங்களின் பதில் சமாதானமாக இருக்காது என லெபனானின் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

லெபனான் எல்லைக்குட்பட்ட பகுதியிலிலுள்ள ஒரு மரத்தை பிடுங்கி எறிய இஸ்ரேல் ராணுவம் மீண்டும் முயற்சி மேற்கொண்டுள்ளதாக செய்தி உண்டு. இதன் காரணமாகத்தான் நேற்று முன் தினம் இரு நாட்டு ராணுவத்தினருக்கிடையே மோதல் வெடித்தது.

லெபனானின் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள மரம் அப்பகுதியிலுள்ளவற்றை பார்ப்பதற்கு தடையாக உள்ளது எனக்கூறித்தான் இஸ்ரேல் அம்மரத்தை பிடுங்க முயற்சிச்செய்தது.

அதேவேளையில் லெபனானின் போராளி இயக்கமான ஹிஸ்புல்லாஹ் லெபனான் ராணுவத்தினருக்கு பரிபூரண ஆதரவைத் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீண்டும் எல்லையில் அத்துமீறினால் நாங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம் என ஹிஸ்புல்லாஹ்வின் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். லெபனான் ராணுவத்தினருக்கு எதிராக உயரும் கையை வெட்டிமாற்றுவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாதும் இஸ்ரேலின் அத்துமீறலை கண்டித்துள்ளார். லெபனானின் எல்லையில் அத்துமீறுவது இஸ்ரேல் அரசின் நிராசையின் அடையாளம் எனவும், அதற்கெதிராக சர்வதேச சமூகம் எதிர்ப்புத் தெரிவிக்கவேண்டும் எனவும் நிஜாத், லெபனான் அதிபர் மைக்கேல் சுலைமானுடனான டெலிபோன் உரையாடலில் தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: