சனி, 27 ஜூலை, 2013

ஆர்.எஸ்.எஸ்., வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சி அளிக்கிறது திக்விஜய்சிங்


ஆர்.எஸ்.எஸ். தனது உறுப்பினர்களுக்கு வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி அளித்து வருவதாகவும், அதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் திக்விஜய்சிங் கூறினார்.
திக்விஜய்சிங்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங், அவ்வப்போது சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். டெல்லியில் போலீஸ் அதிகாரி எம்.சி.சர்மாவின் உயிரை பறித்த என்கவுண்டர் சம்பவம் போலியானது என்று அவர் கூறி வந்தார்.
ஆனால், அது உண்மையானது என்றும், அவ்வழக்கில் பிடிபட்ட இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி குற்றவாளிதான் என்றும் டெல்லி கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. இதனால், திக்விஜய்சிங் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ்.
இந்நிலையில், திக்விஜய்சிங் மற்றொரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
ஆர்.எஸ்.எஸ். தனது உறுப்பினர்களுக்கு வெடிகுண்டு தயாரிப்பதற்கான பயிற்சியை அளித்து வருகிறது. கடந்த 2002-ம் ஆண்டு ஒரு கோவில் குண்டு வெடிப்பு தொடர்பாக, ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத்தைச் சேர்ந்த 6 பேர் குற்றம் சாட்டப்பட்டனர்.
அவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். சுனில் ஜோஷி, ராம்ஜி கல்சங்க்ரா ஆகிய 2 பேர் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்களில் சுனில் ஜோஷி, ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர் ஆவார். அவரை ஆர்.எஸ்.எஸ்.காரர்களே கொலை செய்து விட்டனர்.
வீடியோ ஆதாரம்
அதுமட்டுமின்றி, பிடிபட்ட 4 ஆர்.எஸ்.எஸ். மற்றும் விசுவ இந்து பரிஷத் தொண்டர்கள், தாங்கள் வெடிகுண்டு தயாரிக்க ஆர்.எஸ்.எஸ்.சால் பயிற்சி அளிக்கப்பட்டதாக வாக்குமூலம் கொடுத்தனர். அவர்கள் பேசிய வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. இந்த குற்றச்சாட்டை நான் ஏற்கனவே தெரிவித்துள்ளேன்.
உடனே ஆர்.எஸ்.எஸ். என் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தது. நான் வீடியோ ஆதாரத்தை தாக்கல் செய்தவுடன், வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டது.
இவ்வாறு திக்விஜய்சிங் கூறினார்.

புதன், 24 ஜூலை, 2013

தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் 23.07.2013 அன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு


பா.ஜ.க. பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் கொலைக்கு மதசாயம் பூச முயல்வதை வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழக பா.ஜ.க.வின் பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் அவர்கள் சேலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டதை கடுமையாக கண்டிக்கிறோம். இது போன்ற கொடிய நிகழ்வுகள் அமைதிப் பூங்காவான தமிழகத்திற்கு ஏற்புடையதல்ல. அதே நேரத்தில் இந்த க் கொலையின் பின்னணி பற்றி முறையாக புலனாய்வு வெளிவருவதற்கு முன்பாகவே பா.ஜ.க. பிரமுகர் கொலை என்றாலே அதை முஸ்லிம்கள் தான் செய்திருப்பார்கள் என்ற கோணத்தில் ஊதி பெரிதாக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இதற்கு முன்பும் பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதையும் அறிய முடிகிறது. அது போன்று இந்தப் படுகொலையையும் நியாய உணர்வோடும் நடுநிலையோடும் அரசும் காவல்துறையும் அணுக வேண்டும் என்று கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்துத்துவா சக்திகளும் சமூக விரோதிகளும் இணைந்து இந்து முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குலைத்து விடுவார்களோ என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது.

எனவே, தமிழக முதல்வர் அவர்கள் இந்தக் கொலை விவகாரத்தில் உண்மைக் குற்றவாளியைக் கண்டறிய தமிழக காவல்துறைக்கு உரிய அறிவுரை வழங்கி நீதியை நிலைநாட்ட வேண்டும் என இந்தக் கூட்டமைப்பு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

இந்தப் படுகொலை குறித்து விசாரிப்பதற்கு தமிழக முதல்வர் சிறப்புப் புலனாய்விற்கு உத்தரவிட்டதை வரவேற்கின்றோம். மேலும், முஸ்லிம் சமுதாயத்தின் வழிபாட்டுத் தலங்களும் வணிக நிறுவனங்களும் அப்பாவி முஸ்லிம்களும் தாக்கப்பட்டு வருகிறார்கள். எனவே, தமிழக முதல்வர் அவர்கள் தமிழக முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்க இந்தக் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.

சனி, 6 ஜூலை, 2013

பெங்களுரு குண்டு வெடிப்பு: கர்நாடக முதலமைச்சரிடம் தமிழக முஸ்லிம் கூட்டமைப்பினர் கோரிக்கை மனு. அப்பாவிகள் தண்டிக்கப்பட கூடாது என்பதில் முதலமைச்சர் உறுதி

கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களுருவில் கடந்த ஏப்ரல் 17 அன்று மல்லேஸ்வரத்தில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு முன்பு குண்டு வெடித்தது. கர்நாடகத்தில் மே 5ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பு நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குண்டுவெடிப்பில் 16 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த 13 அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைதுச் செய்யப்பட்டனர். கைதுச் செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் மிக கடுமையாக சித்ரவதைச் செய்யப்பட்ட செய்திகளும் வந்தன. இந்த பின்னணியில் பெங்களுருவில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழகத்தில் நடைபெற்ற கைதுகள் குறித்து கர்நாடக முதலமைச்சர் சீத்தாராமைய்யாவை சந்தித்து முறையிட தமிழ்நாடு அனைத்து முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு முடிவுச் செய்தது. கர்நாடக முதலமைச்சரை சந்திப்பதற்கான முயற்சியை எடுக்கும் பொறுப்பு மனிதநேய மக்கள் கட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.
மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ. அஸ்லம் பாஷா எடுத்துக் கொண்ட முயற்சிகளின் வாயிலாக கர்நாடக சட்டமன்றத்தின் மேலவை உறுப்பினர் நஸீர் அஹ்மது வழியாக கர்நாடக முதலமைச்சரை சந்திப்பதற்கான அனுமதிப் பெறப்பட்டது.

கடந்த சூலை 4ம் தேதி மாலை 6 மணிக்கு கர்நாடக முதலமைச்சரின் அதிகாரப்பூர்வமான இல்லமான கிருஷ்ணாவில் முதலமைச்சரை சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கப்பட்டது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ, மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ. அஸ்லம் பாஷா, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே. முஹம்மது ஹனிபா, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பாக எ.எஸ். இஸ்மாயீல், சோசியல் டிமோகிரடிக் பார்டி ஆப் இந்தியா சார்பாக மவ்லவி தெஹ்லான பாகவி, இந்தியன் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக எஸ்.எம். பாக்கர், ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் சார்பாக ஷப்பீர் அஹ்மது, வெல்பேர் பார்டி ஆப் இந்தியா சார்பாக எஸ்.என். சிச்கந்தர், தாருல் இஸ்லாம் அறக்கட்டளை சார்பாக எம். குலாம் முஹம்மது, ஜம்யிய்யத்துல் உலமா சார்பாக மவ்லவி மன்சூர் காஷிபி, மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் சார்பாக அ.ச. உமர் பாரூக், இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம் சார்பாக மவ்லவி தர்வேஷ் ரஷாதி ஆகியோர் அடங்கிய பிரதிநிதிகள் குழு கர்நாடக முதலமைச்சரை சந்திக்க மாலை 5 மணியளவில் முதல்வர் இல்லத்திற்கு வந்தார்கள். தமிழக முஸ்லிம் பிரதிநிதிகளை நஸீர் அஹ்மது எம்.எல்.சி. தலைமையில் கர்நாடக காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவின் பல்வேறு பொறுப்பாளர்கள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

கர்நாடக முதலமைச்சரின் கூட்ட அரங்கில் சிறுபான்மை மக்களின் விவகாரங்கள் தொடர்பான கலந்தாலோசனை கூட்டத்தின் ஒரு பகுதியாக தமிழக முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளுடான சந்திப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் கர்நாடக முதலமைச்சர் சீத்தராமைய்யா, கர்நாடக மாநில அமைச்சர்கள் கமருஸ் ஸமான் மற்றும் ஹாரீஸ், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜாபர் ஷரீப் மற்றும் சி.எம். இப்ராஹீம், கர்நாடகத்தின் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள், சிறுபான்மை துறை செயலாளர் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்குக் கொண்டார்கள்.
சந்திப்பின் தொடக்கத்தில் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாவை முதலமைச்சருக்கு அறிமுகப்படுத்திய முன்னாள் மத்திய அமைச்சர் சி.எம். இப்ராஹீம் தமிழகத்தில் இருந்து இரண்டு முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் வந்துள்ளார்கள். அவர்களுடன் தமிழக முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களும் வந்துள்ளார்கள். முதலில் அவர்களது கருத்தைக் கேட்கலாமே என்று முதலமைச்சரிடம் தெரித்தார். இதனைத் தொடர்ந்து கர்நாடக முதலமைச்சர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாவிடம் பேசும்படி கேட்டுக் கொண்டார்.

பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா முதலில் தன்னுடன் வந்த கூட்டமைப்பின் பல்வேறு தலைவர்களை கர்நாடக முதலமைச்சருக்கு அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் பேசுகையில் தமிழகத்தில் உள்ள முக்கிய முஸ்லிம் சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் சார்பாக மிக முக்கிய கோரிக்கையை உங்களிடம் முன்வைப்பதற்காக நாங்கள் வந்துள்ளோம். கர்நாடகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் வேளையில் ஏப்ரல் 17ல் பெங்களுரு மல்லேஸ்வரத்தில் பா.ஜ.க. அலுவலகத்திற்கு முன்பு நடைபெற்ற குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த 13 அப்பாவி முஸ்லிம்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளார்கள். எங்களுடைய விசாரணையில் கைதுச் செய்யப்பட்ட தமிழக முஸ்லிம் இளைஞர்களுக்கும் இந்த குண்டுவெடிப்பிற்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. கைதுச் செய்யப்பட்ட இளைஞர்களை இந்த வழக்கை விசாரிக்கும் பெங்களுரூ காவல்துறையின் குற்றப் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் மிக மோசமான சித்ரவதைக்கு இலக்காகியுள்ளார்கள். ஒரே நேரத்தில் மலமும் விந்தும் வெளிவரும் வகையில் பம்பாய் கட்டு பாணியில் முஸ்லிம் இளைஞர்களை சித்ரவதைச் செய்து அவர்களிடம் கட்டாய வாக்குமூலம் வாங்கியுள்ளார்கள் என்பதை நான் நேரடியாகவே அறிந்தேன். இந்த குண்டு வெடிப்பை உண்டாக்கிய செல்போனின் சிம்கார்டு கர்நாடக கேரளா எல்லை பகுதியைச் சேர்ந்த ஒரு ஆர்.எஸ்.எஸ். தலைவருக்குச் சொந்தமானது. ஆனால் அவர் தனது செல்பேசி தொலைந்துப் போனதாக கூட புகார் தெரிவிக்காத நிலையில் அவரை இந்த வழக்கில் பெங்களுரூ காவல்துறை விசாரிக்கவேயில்லை. மேலும் இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பா.ஜ.க. அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவுகளையும் முறையாக விசாரிக்கவில்லை. இது தொடர்பாக விரிவாக எங்கள் கோரிக்கை மனுவில் அளித்துள்ளோம். எனவே இந்த வழக்கின் விசாரணையை தேசீய புலனாய்வு முகமை (என்ஐஏ)விடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் எங்கள் இளைஞர்களை காட்டுமிராண்டித்தனமாக விசாரித்த பெங்களுரூ நகர குற்றப் பிரிவு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தான் இந்த அத்துமீறல்கள் முடிவுக்கு வந்ததாகவும் பேராசிரியர் குறிப்பி்ட்டார்.

அடுத்து பேசிய மு. குலாம் முஹம்மது தற்போது இந்த வழக்கு இரு மாநிலங்கள் தொடர்புடையதாக காட்டப்பட்டுள்ளதால் இதனை தேசீய புலனாய்வு முகமைக்கு மாற்ற வேண்டும். அதற்கான அதிகாரமும் மாநில அரசுக்கு உண்டு என்று கூறினார். மேலும் கைதுச் செய்யப்பட்ட தமிழக இளைஞர்களின் வீடுகளுக்கு வந்த பெங்களுரூ காவல்துறையினர் அங்கு சந்தேகத்திற்கிடமான பொருளை வைத்துவிட்டு அங்கிருந்து எடுக்கப்பட்டது போல் நாடகம் ஆடினார்கள். இதனைத் தடுத்த ஒரு வயதான பெண்மணிக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த முதலமைச்சர் சீத்தராமைய்யா முஸ்லிம் தலைவர்களிடமிருந்து மனுவை பெற்றுக் கொண்டார். ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த பா.ஜ.க. ஆட்சியின் போது முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட பல தவறுகளை குறுகிய காலத்தில் உங்கள் ஆட்சி சரி செய்துள்ளது. இதே போல் இந்த பிரச்னையிலும் நீதி வேண்டும் என்று பேராசிரியர் ஜவாஹிருல்லா குறிப்பிட்ட போது அப்பாவிகள் யாரும் தண்டிக்கப்பட கூடாது என்றும் இது தொடர்பாக உரிய விசாரனை செய்து நீதிக்கு வழி வகுப்பதாக முதலமைச்சர் சீத்தாராமய்யா குறிப்பிட்டார்.

கர்நாடக முதலமைச்சர் சீத்தராமைய்யா மிக சகஜமாக அனைத்து தலைவர்களிடமும் கைக்குலுக்கி அனுப்பி வைத்தார்.

____________________________________________
கர்நாடகத்தில் முஸ்லிம் மணமகளுக்கு ரூ50 ஆயிரம் அரசு நிதி உதவி
கர்நாடக முதலமைச்சருடான கூட்டம் தொடங்குவதற்கு முன்பு முதலமைச்சரின் கூட்ட அறைக்கு செல்லும் முன் வழியில் பேராசிரியர் ஜவாஹிருல்லாவை பார்த்த முன்னாள் மத்திய அமைச்சர் சி.எம். இப்ராஹீம் மிகவும் மகிழ்ச்சி அடைந்து பெயர் சொல்லி அழைத்து கட்டி தழுவி ஆலிங்கானம் செய்தார். கூட்டம் தொடங்குவதற்கு முன்பு பேராசிரியர் ஜவாஹிருல்லா, அஸ்லம் பாஷா எம்.எல்.ஏ. மற்றும் முஸ்லிம் கூட்டமைப்பு தலைவர்களிடம் பேசிக் கொண்டிருந்தனர். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்த பிறகு சிறுபான்மை முஸ்லிம்களுக்கு பல நன்மைகளைச் செய்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர். மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தண்டனை முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் சீத்தராமைய்யா முதல் வேலையாக நீக்கினார். பள்ளிவாசல்கள் கட்டுவதற்கும் கப்ருஸ்தான் பராமரிப்பிற்கும் ரூ300 கோடியை கர்நாடக அரசு ஒதுக்கியிருப்பதாகவும் முஸ்லிம் பெண்களுக்கான திருமண உதவி ரூ 50000 அளிப்பதாகவும் மொத்தத்தில் சிறுபான்மை மக்களுக்கு ஆதரவளிக்கும் அரசாக சீ்த்தாராமைய்யா தலைமையிலான அரசு செயல்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்


படங்கள்: அபூபக்கர்
http://tmmk.in/index.php?option=com_content&view=article&id=3412:2013-07-05-15-57-28&catid=58:2009-10-11-12-42-41