சனி, 27 ஜூலை, 2013

ஆர்.எஸ்.எஸ்., வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சி அளிக்கிறது திக்விஜய்சிங்


ஆர்.எஸ்.எஸ். தனது உறுப்பினர்களுக்கு வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி அளித்து வருவதாகவும், அதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் திக்விஜய்சிங் கூறினார்.
திக்விஜய்சிங்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங், அவ்வப்போது சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். டெல்லியில் போலீஸ் அதிகாரி எம்.சி.சர்மாவின் உயிரை பறித்த என்கவுண்டர் சம்பவம் போலியானது என்று அவர் கூறி வந்தார்.
ஆனால், அது உண்மையானது என்றும், அவ்வழக்கில் பிடிபட்ட இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி குற்றவாளிதான் என்றும் டெல்லி கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. இதனால், திக்விஜய்சிங் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ்.
இந்நிலையில், திக்விஜய்சிங் மற்றொரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
ஆர்.எஸ்.எஸ். தனது உறுப்பினர்களுக்கு வெடிகுண்டு தயாரிப்பதற்கான பயிற்சியை அளித்து வருகிறது. கடந்த 2002-ம் ஆண்டு ஒரு கோவில் குண்டு வெடிப்பு தொடர்பாக, ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத்தைச் சேர்ந்த 6 பேர் குற்றம் சாட்டப்பட்டனர்.
அவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். சுனில் ஜோஷி, ராம்ஜி கல்சங்க்ரா ஆகிய 2 பேர் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்களில் சுனில் ஜோஷி, ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர் ஆவார். அவரை ஆர்.எஸ்.எஸ்.காரர்களே கொலை செய்து விட்டனர்.
வீடியோ ஆதாரம்
அதுமட்டுமின்றி, பிடிபட்ட 4 ஆர்.எஸ்.எஸ். மற்றும் விசுவ இந்து பரிஷத் தொண்டர்கள், தாங்கள் வெடிகுண்டு தயாரிக்க ஆர்.எஸ்.எஸ்.சால் பயிற்சி அளிக்கப்பட்டதாக வாக்குமூலம் கொடுத்தனர். அவர்கள் பேசிய வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. இந்த குற்றச்சாட்டை நான் ஏற்கனவே தெரிவித்துள்ளேன்.
உடனே ஆர்.எஸ்.எஸ். என் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தது. நான் வீடியோ ஆதாரத்தை தாக்கல் செய்தவுடன், வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டது.
இவ்வாறு திக்விஜய்சிங் கூறினார்.

கருத்துகள் இல்லை: