வியாழன், 31 மே, 2012

நெல்லிக்குப்பத்தில் இஸ்லாமிய ஐக்கிய மஜ்லிஸ் திறப்பு விழா - மமக பொதுச்செயலாளர் சிறப்புரை

நெல்லிக்குப்பத்தில் 24-05-2012 வியாழன் அன்று காலை 9 மணியளவில் நெல்லிக்குப்பம் இஸ்லாமிய ஐக்கிய மஜ்லிஸ் திறப்பு விழா மெளலானா அப்துல் கறீம் வீதி ஜூம்மா பள்ளிவாசல் வளாகத்தில் சகோதரர் V.M.ஷேக்தாவுத் (தமுமுக மாவட்ட செயலாளர், தலைவர் இஸ்லாமிய ஐக்கிய மஜ்லிஸ்) அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக மனித நேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் சகோதரர் M .தமிமுன் அன்சாரி MBA அவர்களும், மாநில ஜமாதுல் உலமா சபை தலைவரும், லால்பேட்டை JMA அரபிக்கல்லூரி பேராசிரியர் A.E.M அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.

மமக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்கள் தனது சிறப்புரையில் இஸ்லாமிய ஐக்கிய மஜ்லிஸ் துவங்கியதற்கு தனது உளமார வாழ்த்துக்களை தெரிவித்து ஷஹீத் பழனிபாபா அவர்கள் கன்னியாகுமரியில் ஆரம்பித்த ஐக்கிய மஜ்லிஸை நினைவு கூர்ந்தார். பின்பு இஸ்லாமிய ஐக்கிய மஜ்லிஸ் பணிகள் அதன் செயல்பாடுகள் எப்படி அமைய வேண்டும் என உரை நிகழ்த்தினார்.
இந்தோனிசியாவிற்க்கு அடுத்து இந்தியாவில்தான் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்றார்கள். இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரில் நாம்தான் பெரும்பான்மையினர்.  இந்திய முஸ்லிம்களாக வாழ நாம் பெருமைப்பட வேண்டும். காரணம் ஒரு இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமியனாக வாழ்வதை விட ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் நாம் வாழும் போது நமது மார்க்கம் அடுத்தவர்களும் அறிந்துகொள்ள வாய்ப்பு உள்ளன எனவும் ஒரு சில மதவாத சக்திகள்தான் இங்கு குழப்பம் விளைவிக்கின்றன, எல்லா இந்து சகோதரர்களும் அல்ல ஆகையால்தான் தேர்தல்களத்தில் மதவாத சக்திகள் இங்கு வெற்றி பெறுவது இல்லை, அதே சமயத்தில் நமக்குள் இருக்கும் பிரிவினை மிக முக்கிய காரணம்.
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு ஸஹாபி பள்ளியில் இருந்து வெளியில் செல்லும் போது அவர் முதுகில் ஒரு அம்பு இருந்தது அதை கண்ட நபி(ஸல்) அவர்கள் அந்த ஸஹாபியை அழைத்து கூர்மை உள்ள அந்த அம்பு யார் மீதாவது காயம் ஏற்ப்படுத்திவிடப் போகின்றது அதை முழுமையாக மூடி எடுத்து செல்லுங்கள் என்று கூறினார்கள். ஒரு சகோதரனின் உடலில் காயம் ஏற்படுத்துவதை அவர்கள் விரும்பவில்லை, திருக்குரானில் உள்ள ஒற்றுமை எனும் கயிற்றை பற்றி பிடியுங்கள் என்ற வாசகத்தினை அனைத்து தலைவர்களும் சொல்லி இன்று நாம் பல பிரிவுகளாக பிரிந்து ஒற்றுமை இல்லா சமுகமாக உள்ளோம், இப்படிப்பட்ட சூழலில் இங்கு இஸ்லாமிய ஐக்கிய மஜ்லிஸ் ஆரம்பித்துள்ளது வரவேற்க்கத்தக்கது, எனக்கு முன் பேசிய மாநில ஜமாதுல் உலமா சபை தலைவர் ஹஜ்ரத் அவர்கள் இன்று நமது சமுகத்தில் சில படிக்கும் பெண்கள் நிலை குறித்தும் அவர்கள் மார்க்கத்தை விட்டு வெளியே செல்வது பற்றியும் தனது கவலையையும், ஆதங்கத்தையும் தெரிவித்தார்கள்,
இது நாம் சிந்திக்க வேண்டிய முக்கிய செய்தி முன்பு எங்களது கடற்கரை பகுதியில் சுபுஹீ தொழுகைக்கு பின்பு நமது சிறுவர், சிறுமியர் பெருமளவில் மதரஸாவுக்கு செல்லும் அழகான காட்சி இப்போது அதிகமாக இல்லை. இதே நிலைதான் இன்று தமிழகம் முழுவதும் ஆகையினால் உங்கள் பிள்ளைகளை மதரஸாவுக்கு அனுப்புங்கள், திருக்குரான், ஹதிஸ்களை மனம் செய்து வளரும் தலைமுறைக்கு மார்க்கத்தை முழுமையாக எத்திவையுங்கள், மார்க்க கல்வியுடன் கூடிய உலகக்கல்வி அவசியம். இஸ்லாமிய ஐக்கிய மஜ்லிஸ் மூலமாக பெண்களுக்கு வாரம் தோரும் மார்க்க பயான் நடத்துங்கள், இந்த ஊரில் அதிக அளவில் இஸ்லாமியர்கள் இருக்கின்றீர்கள் (அல்ஹம்துலில்லாஹ்). பெண்களுக்காக ஒரு கல்லூரி நிறுவ முயற்சி எடுங்கள். என் ஊர் தோப்புத்துறை அங்கு சுன்னத் ஜமாத் பள்ளியிலும் பெண்கள் ஜும்மாவிற்க்கு பள்ளிக்கு தொழ வருகின்றார்கள், இங்கு பெண்களை பள்ளியினுள் தொழ அனுமதி செய்யுங்கள் (குறிப்பு: இந்த நிகழ்ச்சி சுன்னத் ஜமாத் பள்ளிவாளகத்தில் நடைப்பெற்றது, நெல்லிக்குப்பத்தில் உள்ள ஏழு (7) சுன்னத் ஜமாத் ஜும்மா பள்ளியில் பெண்கள் தொழ அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது)
இன்று தமுமுக போன்ற சமுதாய அமைப்புகளிடம் 1100க்கு அதிகமான மதிப்பெண் பெற்ற ஏராளமான மாணவ,மாணவியர் உதவி கோரி வருகின்றனர் பொருளாதார நெருக்கடியினால் அனைவருக்கும் முழுமையாக உதவமுடிவதில்லை என்பதுதான் எதார்த்த உண்மை, நாடார் சமூகத்தில் தலைவர் காமராஜர் வகுத்த முறை பின்பற்றி அந்த சமூகத்தில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவியர் உதவி கோரினால் அவர்களால் அதை முழுமைப்படுத்த முடிகின்றது. இது பாராட்டுதலுக்குறியது,
இங்கே எத்தனை பேர் ஜகாத்தினை சரியாக கொடுக்கின்றீர்கள், நாம் ஆயிரம் அல்லது இரண்டாயிரத்தை சில்லரையாக மாற்றி அதை பிச்சைகாரர்களுக்கு போட்டுவிட்டால் அது ஜகாத் என்று பெரும்பான்மையானவர்கள் நினைக்கின்றார்கள். அது ஜகாத் அல்ல, ஜகாத்தினை மார்க்கம் காட்டிய வழியில் முழுமையாக கொடுங்கள்.
மேலும் வெளிநாடுகளில் தன் கணவன் அல்லது சகோதரன் பாலைவன வெயிலில் கஷ்டப்பட்டு உழைத்து அனுப்பும் பனத்தினை எத்தனை பேர் சரிவர ஒழுங்காக பராமரிக்கின்றீர்கள், முன்பு பக்கத்து வீட்டிற்கு ஒரு புடவை வந்தால் அதன் ஓரத்தை வெட்டி கடிதம் மூலம் வெளிநாட்டிற்க்கு அனுப்புவார்கள், தன் கணவர் அல்லது சகோதரன் வாங்கும் சம்பளம் என்ன அவரால் இயலுமா என சில பெண்கள் சிந்திப்பது இல்லை, வெளிநாடுகளிள் பெரும்பாலும் நம் சமூகம் கஷ்டப்படுகின்றது, பெற்றொர் மவுத்தாகிவிட்டால் அவர்களின் ஜனாஸாவை கூட காண முடியாத அவலம், ஒருவேலை வெளிநாடுகளுக்கு செல்லவேண்டும் என்றால் நன்றாக படித்து குடும்பத்துடன் செல்லுங்கள்,
நாம் அனைவரும் நபிவழியில் நடந்து நேர்வழி பெற வல்ல இறைவன் அருள்புரிவானாக ஆமின். இவ்வாறு மாநில பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்கள் சிறப்புறையாற்றினார்கள்.
இந்த நிகழ்சிக்கு அனைத்து ஜமாத்தார்களும், இஸ்லாமிய நகரமன்ற உறுப்பினர்களும், திரளான பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டனர், இணையதளம் வழியாக நிகழ்ச்சி நேரலை செய்யப்பட்டது.
மாநில ஜமாத்துல் உலமா சபை தலைவர் மெளலானா மெளலவி AME அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத் அவர்கள் மமக மாநில பொதுச்செயலாளர் அவர்களின் வெற்றிக்காக தான் தூவா செய்ததாக தனது உரையில் குறிப்பிட்டதும்,சுன்னத் ஜமாத்தார்கள், தவ்ஹீத் சிந்தனையாளர்கள் சார்பில் மமக பொதுச்செயலாளர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதும், தமுமுகவில் தான் செய்த சேவைகளை பார்த்துதான் தனக்கு இஸ்லாமிய ஐக்கிய மஜ்லிஸ் தலைவர் பொறுப்பு வழங்கியதாகவும், அனைத்து சகோதர சகோதரிகளாலும் தமுமுக அங்கிகரிக்கபட்டுவிட்டதாக தமுமுக கடலூர் மாவட்ட செயலாளரும், நெல்லிக்குப்பம் இஸ்லாமிய ஐக்கிய மஜ்லிஸ் தலைவருமாகிய VM ஷேக்தாவுத் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டதும் இன்ஷா அல்லாஹ் சமுதாயம் ஒரு சிறந்த தலைமையின் கீழ் எதிர்கலாத்தை நோக்கி ஒற்றுமையுடன் வீறு நடைபோடுவதின் வெளிப்பாடாகவே நிகழ்ச்சி அமைந்திருந்தது
புதன், 30 மே, 2012

பெண்களே உஷார்!


ட்பு வட்டங்களுக்குத் தளமாக இருக்கும் ஃபேஸ்புக், சில நேரங்களில் தப்பு வட்டங்களுக் கான களமாகி விடுகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் சேலத்தைச் சேர்ந்த லலிதாவும் கன்னியாகுமரியை சேர்ந்த மேரியும் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). பேஸ்புக் மூலமாக அறிமுகம் ஆன நண்பர்களிடம் தங்களையே இழந்து நிற்கி றார்கள் இருவரும்!
கடந்த 24-ம் தேதி வேலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வந்து புகார் கொடுத்தவர்கள் சார்பில் பேசினார் வழக்கறிஞர் மணிகண்டன். ''லலிதா, மேரி இருவரும் தோழிகள், சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். இருவரும் ஃபேஸ்புக்கில் இருக்கின்றனர். ஃபேஸ்புக் மூலமாக லலிதாவுக்கு வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ் பழக்கமானார். சதீஷின் நண்பர் ஆனந்தபாபுவும் லலிதாவிடம் அறிமுகமாக, மேரியும் அவர்களின் நட்பு வட்டத்தில் சேர்ந்துள்ளார்.
அடுத்து செல்போன் பேச்சாக இவர் கள் நட்பு வளர்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து, ஜனவரி மாதத்தில் ஒரு நாள் லலிதாவையும் மேரியையும் பார்க்க ராணிப்பேட்டை நண்பர்கள் காரில் சென்னைக்கு வந்தனர். இருவரையும் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் தங்கக் கோயிலுக்குக் கூட்டிச் செல்வதாக அழைத்துப் போனார்கள். ஆனால் அவர்கள், ராணிப்பேட்டையில் இருக்கும் ஒரு ஹோட்டலுக்கு அழைத்துப் போயி ருக்கிறார்கள். அங்கே ஆனந்த பாபு - மேரி ஓர் அறையிலும், லலிதா - சதீஷ் ஓர் அறையிலும் தங்கி இருக்கின்றனர். காதலிப்பதாகவும் உருக்கமான வார்த்தைகளால் சொல்லி இருக்கிறார்கள். தங்களை நிச்சயமாகத் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எண்ணி, இருவரும் அவர்களிடம் ஏமாந்து போய் இருக்கின்றனர். பிறகு, 'எப்போது திருமணம்?’ என்று பெண்கள் இருவரும் நச்சரித்திருக்கிறார்கள்.
'உங்களிடம் நாங்கள் டைம் பாஸ்க்குத்தான் பழகினோம். உங்களை எங்களால் திருமணம் செய்ய முடியாது. மீறி ஏதாவது பிரச்னை செய்ய நினைத்தால், உங்களின் அந்தரங்கப் புகைப்படங்கள் எங்களிடம் இருக்கிறது, அதை ஃபேஸ்புக்கில் போட்டுவிடுவோம்’ என்று மிரட்டி இருக்கிறார்கள்.
அவர்களின் நண்பர்களான திலீப், லூயிஸ், ஆனந்த நித்தியானந்தம் ஆகியோரும் இந்தப் பெண் களை மிரட்டவே, தாங்கள் ஏமாற்றப்பட்டதாக வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்துள் ளார்கள். இப்போது ஆனந்த், சதீஷ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்'' என்றார் கொந்தளிப்பாக.
வேலூர் காவல் துறையினரிடம் விசாரித் தோம். ''சதீஷ் மிகவும் டிப்டாப்பாக இருப்பான். பெண்களை ஏமாற்றுவது சதீஷ§க்கும் அவனது நண்பன் ஆனந்த பாபுவுக்கும் கை வந்த கலை. ஏற்கெனவே சென்னையைச் சேர்ந்த  விஜயலட்சுமியை ஃபேஸ்புக் மூலம் தொடர்புகொண்டு, சதீஷ் ஏமாற்றி உள்ளான். 'உன்னுடைய ஆபாசப் படம் என்னிடம் இருக்கிறது. இரண்டு லட்சம் தர வேண்டும்’ என்று மிரட்டி, 50,000 ரூபாய் வாங்கியுள்ளான். மேலும் மிரட்டவே, விழுப்புரம் மாவட்டத்தில் அந்தப் பெண் புகார் கொடுத்துள்ளார். இதுபோன்று நிறையப் பெண்களை ஏமாற்றி இருக்கிறார்கள். எங்களின் கணிப்புப்படி 15-க்கும் மேற்பட்ட பெண்கள் ஏமாந்திருப்பதாகத் தெரிகிறது'' என்று சொன்னார்கள்.
இந்த விவகாரம் குறித்துப் பேசும் வேலூர் மாவட்டத்தில் யாஸ்காம் இன்டர்நெட் சென்டர் நடத்திவரும் ஆஸாம் இர்பான், ''பெண்கள் ஃபேஸ்புக்கில் எந்தக் காரணம்கொண்டும் யாருக்கும் தொலைபேசி எண்ணைத் தரக்கூடாது. நன்கு அறிமுகமான நபர்களை மட்டுமே தங்களுடைய நண்பர்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தனது புகைப்படங்களையோ அல்லது குடும்பத்தாரின் புகைப்படங்களையோ ஃபேஸ்புக்கில் வெளியிடக்கூடாது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் சாட் செய்யாதீர்கள்'' என்று ஆலோசனைகள் சொன்னார்.
பெண்களே உஷார்!
- கே.ஏ.சசிகுமார்
ஜூனியர் விகடனில் இருந்து... 

புதன், 23 மே, 2012

கோவையில்அழகிய கடன் IAS அகாடமி: ஊக்குவிப்பு முகாம்

அழகிய கடன் IAS அகாடமி
நமது சமுதாயம் கல்வி மற்றும் பொருளாதாரம் உள்பட அனைத்துத் துறைகளிலும் பின் தங்கிய நிலையில் உள்ளது. இதனை மாற்றி முஸ்லிம் சமுதாயம் கல்வி, பொருளாதாரம் மற்றும் கண்ணியத்தில் மேம்படவும் இறையச்சம் உள்ள முஸ்லிம்கள் அதிகார மையத்தில் அமர்ந்து அனைத்துத் துறைகளையும் இயக்கும் உயர் பதவி தான் IAS.

நமது முஸ்லிம் மாணவர்களுக்கு இதைப் பற்றி முழுமையான விழிப்புணர்வூட்டி,  IASக்கு தகுதியான மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலவசமாக செய்து பயிற்சி கொடுப்பதற்காக தொடங்கப்பட்டதுதான் அழகிய கடன்  IAS அகாடமி.

இளைஞர்களை இறையச்சம் மற்றும் தக்வாவுடன் சமுதாய உணர்வூட்டி பக்குவப்படுத்தி இஸ்லாத்திற்கும் இந்தியாவிற்கும் விசுவாசமான  IAS  அதிகாரியாக உருவாக்குவதே அழகிய கடன் IAS அகாடமியின் நோக்கமாகும்.
கோவையில்...
இதனைப் பற்றி கோவை மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் பொருட்டு 18.3 .2012 அன்று கரும்புக்கடை மஸ்ஜிதுல் இஹ்சான் பள்ளிவாசலில் வைத்து முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை மக்கா மஸ்ஜித் இமாம் மௌலவி ஷம்சுத்தீன் காசிமி கலந்து கொண்டு  IAS குறித்த விழிப்புணர்வு ஊட்டினார். இறுதியில் இதன் பணிகளை செவ்வனே செய்து முடிக்க கோவை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஆலிம்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், மருத்துவர், வழக்கறிஞர், தொழிலதிபர்கள், பத்திரிகை ஆசிரியர், கல்லூரி மாணவர்கள் கொண்ட 20 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. கரும்புக்கடை மஸ்ஜிதுல் இஹ்சான் இமாம் மௌலவி. இஸ்மாயில் இம்தாதி ஒருங்கிணைப்பாளராகவும் பள்ளி ஆசிரியர் ஜனாப்.நியமத்துல்லாஹ் உதவி ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
கோவை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு
இக்குழுவானது பல்வேறு அமர்வுகளில் ஆலோசனை செய்து 15 .4 .2012 அன்று IAS ஊக்குவிப்பு முகாம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஜுமுஅ தொழுகைக்குப் பின் அனைத்து பள்ளிகளிலும் அறிவிப்பு செய்யப்பட்டது. நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. கோவை மட்டுமல்லாமல் பொள்ளாச்சி, உடுமலை, நீலகிரி, பாலக்காடு போன்ற பகுதிகளிலும் செய்தி சமர்ப்பிக்கப்பட்டது.


IAS ஊக்குவிப்பு முகாம்
15 .4 .2012  ஞாயிறு அன்று பூமார்க்கட் ஹைதர் அலி திப்பு சுல்தான் மஸ்ஜித் (லங்கார்கானா) ஈத்கா மைதானத்தில் iAS ஊக்குவிப்பு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஒருங்கிணைப்பாளர் மௌலவி.முஹம்மது இஸ்மாயில் இம்தாதி தலைமை தாங்கினார். ஆரம்பமாக தாஜுல் இஸ்லாம் மஸ்ஜித் இமாம் மௌலவி. அப்துர் ரஹ்மான் ஜலாலி M .A . திருமறை வசங்களை ஓதினார். ஆங்கிலப் பேராசிரியர் ஜனாப்.பீர் பாஷா M .A ., M .Ed ., PGDTE . அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தமிழாசிரியர் அன்வர் பாட்ஷா  M .A ., M .Ed ., M .Phil . கோவை மாவட்டத்தில் இதுவரை நடந்த பணிகளைப் பட்டியலிட்டார்.

மௌலவி.முஹம்மது இஸ்மாயில் இம்தாதி தனது தலைமையுரையில் "இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை குறித்தும் சச்சார் கமிட்டியின் பரிந்துரை குறித்தும் IAS படிப்பதற்கான அவசியத்தையும் எடுத்துரைத்தார். இட ஒதுக்கீட்டை நிறைவு செய்யும் நிலையில் கூட நம் முஸ்லிம்கள் இல்லையே என்ற வருத்தத்தை பதிவு செய்தார்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பங்கு பெற்ற IAS அகாடமியின் ஒருங்கிணைப்பாளரும் சென்னை மக்கா மஸ்ஜித் இமாம் மௌலவி ஷம்சுத்தீன் காசிமி அவர்கள் மாணவர்களுக்கு உற்சாகம் தருகின்ற வகையிலே உரையாற்றினார். இளைஞர்களின் நிலை, சமுதாய அக்கறை, IAS படிப்பதன் அவசியம் என மாணவர்களை ஊக்குவித்தார். ஜனாப். நசீம் IAS அவர்கள் வீடியோ கான்பாரன்ஸ் மூலமாக மாணவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கினார். மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.
உதவி  ஒருங்கிணைப்பாளர் பள்ளி ஆசிரியர் ஜனாப்.நியமத்துல்லாஹ்  M .A ., M .Ed  அவர்கள் நன்றி நவில கூட்டம் இனிதே நிறைவடைந்தது. நிகழ்ச்சியை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளி ஆசிரியர் ஜனாப்.சலீம் M .Sc ., B .Ed ., PGDSA .,வழிநடத்தினார்.

மாணவர்கள் மீண்டும் தொடர்பு கொள்ள வசதியாக கார்டு கொடுக்கப்பட்டது. பவர் பாயின்ட் மூலமாக விளக்கப்பட்டது.

நிகழ்வில் சுமார் 300 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்...
 
thanks :  http://www.islamicvision.info/2012/04/ias.html#more

திங்கள், 21 மே, 2012

இஸ்லாமியர் இட ஒதுக்கீடு - உணரப்படாத உண்மைகள்

இஸ்லாமியர் இட ஒதுக் கீடு என்பது பல வகையான பரிமா ணங்களைக கடந்து வந்துள் ளது. 1927 முதல் 1947 வரை இஸ்லாமியர்கள் சென்னை மாகாணத்தில் 16 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை பெற்று வந்தனர்.
1947ம் வருடத்தில் ஓமந்தூர் ராமசாமியால் இந்த சதவிகிதம் 7 ஆக குறைக்கப்பட்டது. இந்த 7 சதவிகித இட ஒதுக்கீடு 1954ம் ஆண்டுவரை முஸ்லிம்களால் பெறப்பட்டது. 1954ம் ஆண்டு காமராஜர் முதல்வராக இருந்த போது இந்த 7 சதவிகித இட ஒதுக் கீட்டையும் தேவை இல்லை என நீக்கினார்."மத ரீதியான இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது'' என்று காமராஜர் முடிவு செய்து, முஸ்லிம் இட ஒதுக் கீட்டை முழுமையாக ரத்து செய்த பிறகு, முஸ்லிம்கள் அரசியல் ரீதி யாக காங்கிரஸ் கட்சியை வெறுக் கத் தொடங்கினார்கள். அந்த நேரத்தில்தான் "காமராஜர் தள்ளு படி செய்த இட ஒதுக்கீட்டை நாங் கள் பெற்றுத் தருவோம்'' என்று கூறிய தி.மு.க.வை முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக ஆதரித்து வெற்றி அடைய வைத்தனர்.
மாநிலக் கட்சியாக முதன் முதலில் உருவெடுத்த தி.மு.க.வால் முஸ்லிம் இட ஒதுக்கீட்டை உட னடியாக செயல்படுத்த முடியாமல் போனது. பின்னர் 1973ல் கருணா நிதி தலைமையிலான திமுக அரசு! இஸ்லாமியர்களை அப்போது இருந்த 31 சதவிகித பிற்படுத்தப் பட்டோர் இட ஒதுக்கீட்டில் இடம் பெற வைத்தது.
அதன் பிறகும் இஸ்லாமியர்கள் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து தனி இட ஒதுக்கீட்டிற்காக போராடி வந்தனர்.
"மற்ற இந்து சமுதாயங்களோடு போட்டியிட்டு வாய்ப்புகளைப் பெறுவதில் எங்கள் சமூகம் கஷ் டப்படுவதால் தனி இட ஒதுக் கீடே எங்களுக்கு பயனளிக்கும்" என்ற அவர்களின் வாதம் சரியான முறையில் ஆட்சியாளர்களால் உணரப்படவில்லை.
பின்னர், 2008ஆம் ஆண்டில் தான் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு இஸ்லாமியர்களுக்கு தனியாக 3.5 சதவிகித இட ஒதுக் கீட்டை அளித்தது!
ஆனாலும், ஒதுக்கப்படும் பணி யிடங்களை நிரப்புவதில் ஏற்படும் குறைகள் பற்றியும், சதவிகித இட ஒதுக்கீடு மிகவும் குறைவாக உள்ளது என்பதைப் பற்றியும் முஸ்லிம்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்து கோரிக்கைகளைத் தொடர்ந்து எழுப்பியவண்ணம் உள்ளனர்.
நீதிபதி ராஜேந்திர சச்சார், நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆகியோர் தெளி வாக உரைத்திட்ட பிறகும் முஸ்லிம்களுக்கு சரியான முறையில் மத்திய, மாநில அரசுகளால் இட ஒதுக் கீடு அளிக்கப்படாமல் இருப்பது சமூக நீதிக்கு முற்றும் எதிரானது.
சமீபத்தில், காங்கிரஸ் கட்சியின் மூத்த அமைச்சர் சல்மான் குர்ஷித் ஒன்பது சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்க முடிவெடுத்து விட்டதா கக் கூறியுள்ளது வரவேற்கத்தக்க ஒன்று.
எதிர் கட்சிகளின் எதிர்ப்புகளை வென்று 9 சதவிகித இடஒதுக் கீட்டை இஸ்லாமியர்களுக்கு கொடுத்துவிட்டால் காங்கிரஸ் கட்சி சமூகநீதி வரலாற்றில் மிகப் பெரிய முக்கியத்துவம் பெரும் என்பது உறுதி!

- தஞ்சை வெங்கட்ராஜ்

source: http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=19763:2012-05-15-05-50-27&catid=1472:2012&Itemid=715
ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவுகள் ஓர் ஆய்வு
இந்திய அரசு நிர்வாகத்தை திறம்பட நிர்வகிக்கும் இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி, உள்ளிட்ட முக்கியப் பணிகளுக்கு நடைபெற்ற இறுதித் தேர்வில் 910 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஐ.ஏ.எஸ். தேர்வில் பிரதானமான எழுத்துத் தேர்வு சென்ற ஆண்டு அக்டோபர்&நவம்பர் மாதங்களில் நடைபெற்றது. நேர்முகத் மற்றும் ஆளுமைத் திறன் தேர்வு இவ்வாண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றது. வெற்றி பெற்ற 910 பேரில் பொதுப் பிரிவினர் 420 பேரும் (21 பேர் மாற்றுத் திறனாளிகள்), இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 255 பேரும் (8 பேர் மாற்றுத் திறனாளிகள்), செடியூல்டு பிரிவில் 157 பேரும் (இதில் 4பேர் மாற்றுத் திறனாளிகள்), செட்யூல்டு பழங்குடியினப் பிரிவில் 78 பேரும் தேர்வாகி உள்ளனர்.

ஐ.ஏ.எஸ். அரசு அறிவிப்பின்படி இந்திய ஆட்சிப் பணி என்ற ஐ.ஏ.எஸ். பணியிடத்திற்கு 170 இடங்கள் காலியாக உள்ளன. இதில் 85 பேர் பொதுப் பிரிவிலும், 48 பேர் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலும், 28 பேர் ஷெட்யூல்டு பிரிவிலும் ஒதுக்கப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கு 13 இடம் காலியாக உள்ளது.

ஐ.எஃப்.எஸ். இந்திய வெளியுறவுத்துறை (ஐ.எஃப்.எஸ்) துறையில் 40 இடங்கள் காலியாக உள்ளன. இதில் 23 பொதுப்பிரிவு, 9 பிற்படுத்தப்பட்டோர் பிரிவு, 5 ஷெட்யூல்டு பிரிவு, 3 பழங்குடியினர் பிரிவுக்கானது.

ஐ.பி.எஸ். இந்திய காவல் துறையில் (ஐ.பி.எஸ்.) 78 இடங்கள் பொதுப்பிரிவிலும், 37 இடங்கள் பிற்படுத்தப்பட்டோருக்கும், 21 ஷெட்யூல்டு பிரிவினருக்கும், 14 இடங்கள் ஷெட்யூல்டு பழங்குடியினருக்கும் வழங்கப்பட்டுள்ளது. குரூப் ஏ மத்திய அரசின் குரூப் பிரிவுக்கான இடங்கள் 543 காலியாக உள்ளன. அதில் 273 பொதுப் பிரிவிலும், 148 பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலும் 81 இடங்கள் ஷெட்யூல்டு பிரிவுக்கும், 41 பழங்குடியினர் பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. குரூப் பி மத்தியப் பணிகள் குரூப் பி பிரிவில் காலியாக உள்ள 98 இடங்களில் பொதுப்பிரிவில் 52 இடங்களும், பிற்படுத்தப்பட்டோருக்கான 15 இடங்களும், ஷெட்யூல்டு பிரிவினருக்கு 24 இடங்களும், பழங்குடியினருக்கு 7 இடங்களும் காலியாக இருந்தன. இதற்கான இடங்கள் தற்போதைய ஐ.ஏ.எஸ். தேர்வுகளின் மூலம் நிரப்பப்பட உள்ளன.

சாதனைப் படைக்கும் தமிழகம் அகில இந்திய அளவில் நடைபெற்ற ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 68 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதாவது 7.5 சதவீதம் பேர் மத்திய ஆட்சிப் பணிக்கு தமிழகத்தில் இருந்து தேர்வாகி உள்ளனர். குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள மாவிலாத்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி சண்முகவேலுவின் மகன் கோபால் சுந்தர்ராஜன், அகில இந்திய அளவில் 5ஆம் இடம் பெற்றுள்ளார்.

இதில் மகிழ்ச்சிக்கும் வியப்புக்கும் உரிய செய்தி என்னவெனில், தமிழகத்திலிருந்து வென்ற 68 பேரில் 20 பேர் விவசாய பட்டதாரிகள் ஆவர். இதில் பலபேர் எவ்விதப் பயிற்சி வகுப்புகளுக்கும் செல்லாமல் வெற்றி ஈட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாய்மொழி போதும் ஐ.ஏ.எஸ். என்பது அடைய முடியாதது; யாருக்கும் அவ்வளவு எளிதில் வாய்க்காது என சோர்வுற்றுக் கிடக்கும் மாணவர் சமூகத்திற்கு ஊக்கமும் உத்வேகமும் ஊட்டும் பல்வேறு செய்திகள் ஆட்சிப் பணி தேர்வில் உண்டு. ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு ஆங்கிலம் நன்றாக புலமைப் பெற்றிருக்க வேண்டும், தாய்மொழி மட்டும் போதாது என்ற கருத்து இன்றுவரை சிலரால் நம்பப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் அவரவர் தாய்மொழியில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதலாம் என்பது பல ஆண்டுகாலமாகவே பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி நேர்முகத் தேர்வையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்ட கரூர் இளைஞர் தினேஷ்குமார் 910 இடங்களில் 359வது இடத்தைப் பிடித்துள்ளார்.

நேர்முகத் தேர்வில் ஐந்து பேர் கொண்ட குழுவினர் கேட்ட பெரும்பாலான ஆங்கிலக் கேள்விகளுக்கு தமிழிலேயே பதில் அளித்துள்ளார். அங்கு மொழிப் பெயர்ப்பாளர்களும் உண்டு. கடந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த திவ்யதர்ஷினி, ஐ.ஏ.எஸ். தேர்வில் இந்தியாவிலேயே முதலிடத்தைப் பெற்றார். சட்டம் படித்த அவர் முதலிடம் பெற்றார் எனில் அதற்கு முந்தைய ஆண்டு (2010ல்) ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர் ஷா பைசல் இந்தியாவிலேயே ஐ.ஏ.எஸ். தேர்வில் முதலிடம் பெற்றார்.

இந்த ஆண்டு 30 முஸ்லிம்கள் இவ்வாண்டு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 30 பேர் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக முதல் 50 இடத்திற்குள் மூன்று முஸ்லிம்கள் தேர்வாகியுள்ளனர்.

கடந்த ஆண்டு 50 இடங்களுக்குள் தாரிக் என்பவர் மட்டுமே 35வது ரேங்க்கைப் பிடித்திருந்தார். இவ்வாண்டு சையத் ஆபித் ரஷீத்ஷா (எண் 218226) 35வது ரேங்க்கும், நூஹ் (136206) 45வது ரேங்க்கும், முஹம்மது ஷரீக் பத்ரு (051236) 48வது இடமும் பெற்றுள்ளனர். எனினும் கடந்த ஆண்டு 31 முஸ்லிம்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இவ்வாண்டு 30 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முஸ்லிம் தேர்ச்சி விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் முஸ்லிம் சமூகத்தின் ஐ.ஏ.எஸ். தேர்ச்சி விகிதத்தை கொஞ்சம் பார்ப்போம்.

இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி உள்ளிட்ட அதிகாரமிக்க பதவிகள் வழியாக நாட்டுக்கும் மக்களுக்கும் அரும் தொண்டாற்ற ஐ.ஏ.எஸ். தேர்வுகளுக்கு இளைய தலைமுறையினர் தயாராக வேண்டும்.---அபுசாலிஹ்

ஞாயிறு, 20 மே, 2012

கூத்தாநல்லூர் குலுங்கியது. புதிய சரித்திரத்தை தொடங்கியது மாணவர் இந்தியா!!

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் மே 17 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பு அமைப்பான மாணவர் இந்தியாவின் முதல் மாவட்ட மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருக்கிறது
மாலை 4 மணி முதலே மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. கல்வி வழிகாட்டி கருத்தரங்கம், மருத்துவ பரிசோதனை அரங்கம், இனப்படுகொலைக்கு எதிரான புகைப்பட கண்காட்சி, கல்வி நிறுவனங்களின் அரங்குகள், புத்தக அரங்குகள் என பன்முக தன்மையோடு மாநாடு களைகட்டியது. ஆரம்பத்தில் உள்ளூர் மக்களும், மாணவ மாணவிகளும் அரங்குகளை நிறைத்தனர். 6 மணி நெருங்கியதும் அந்த மாநாட்டு விதி மக்கள் நெருக்கடியால் திணறியது. மக்ரிப் தொழுகைக்குப்பிறகு மாவட்டத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து எழுச்சி மிகு முழக்கங்களோடு வாகனங்களில் அமர்ந்தபடியே மாணவர் பட்டாளம் கூத்தாநல்லூரை முற்றுகையிட்டது.
7 மணிக்கெல்லாம் மாநாட்டின் 2 ஆம் நிகழ்வு தொடங்கியது. மாநாட்டிற்கு மமக மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகிக்க மாணவர் இந்தியாவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர். சர்வத் கான் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.
மூத்த தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், தமுமுக-மமக தலைவர் மௌலவி J.S. ரிபாயி, மமக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி, இணை பொதுச்செயலாளர் S.S. ஹாரூன் ரஷீது, வழக்கறிகர் சரவண பாண்டியன், பேரா. J. ஹாஜா கனி, மதுக்கூர் ராவுத்தர், தர்மபுரி சாதிக், நாசிகுலம் தாஜுதீன், வழக்கறிஞர் பிரபுதாஸ் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்கள்.
பெண்கள் பகுதியில் 500 க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்களின் பெற்றோரோடு வருகை தந்து கல்வி குறித்த தங்கள் ஐயங்களை கேட்டறிந்ததோடு மாநாட்டு நிகழ்ச்சிகளிலும் அமர்ந்து தங்கள் பங்களிப்பை உறுதிபடுத்தினர். மேலும் மாணவர் இந்தியாவின் சார்பில் மாணவிகளுக்கென தனியாக கல்வி வழிகாட்டி கருத்தரங்குகளை இனிவரும் காலங்களில் நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
மாணவர்கள் மருத்துவ ஆய்வரங்கிற்கு சென்று இரத்த தானம் செய்தனர். ஒரு கட்டத்தில் இரத்தத்தை சேமிக்க வசதி இல்லை என்று கூறி டாக்டர்கள் மறுத்ததால் ஏராளமான மாணவர்கள் இரத்தம் கொடுக்காமலேயே திரும்பினர்.
கல்வி நிறுவனங்களின் அரங்குகளில் +2 மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்து பரபரப்பாக இருந்தனர். புத்தக அரங்குகளில் பல ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் சில மணி நேரங்களில் விற்று தீர்ந்தன. இது அங்கு வருகை தந்திருந்த பொது அறிவு தாகத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது.
இரவு 11.30 அளவில் மாநாடு நிறைவு பெற்றது. சரியான மாணவர் இயக்கம் தங்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியில் மாணவ மாணவிகளும்,பெற்றோர்களும் உற்சாக வெள்ளத்தில் திரும்பினர்.
மாநாட்டு மேடைக்கு ஷஹீது கூத்தாநல்லூர் நூர்முஹம்மது அவர்களின் பெயர் சூட்டப்பட்டது. கொடிகள், தோரணங்கள், ஊரங்கு மின் விளக்குகள், திப்பு சுல்தான், வி.பி.சிங், அம்பேத்கர், மாவீரன் ஹேமந்த் கர்கரே ஆகியோரின் பெயரால் வரவேற்பு வளைவுகள் என மாணவர் இந்தியாவின் முதல் அத்தியாயம் வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.
இனி மாவட்டம்தோறும் மாநாடுகள், கல்லூரிகள் தோறும் அமைப்புகள் என புயல்போல புறப்பட இருக்கிறது மாணவர் இந்தியா..