திங்கள், 7 மே, 2012

ஆற்காடு: 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த கபரஸ்தான் இடம் ஆக்கிரமிப்பு! தமுமுக முயற்சியால் மீட்பு

வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் மாசாப்பேட்டை பகுதியில் முஸ்லிம்களின் அடக்கஸ்தலம் ஒன்று உள்ளது. சையத் ஷா ஹக்கானி வக்ஃபின் பராமரிப்பின் கீழ் இது உள்ளது. இந்த வக்ஃப் பரம்பரை வகையைச் சார்ந்ததாகும். சையத் ஷரீப் சாஹிப் என்பவர் இதன் பராமரிப்பாளராக உள்ளார். சுமார் 80 வயதைக் கடந்த இவர் தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தினர்கள் ஹைதராபாத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆண்டில் ஒருமுறை இப்பகுதிக்கு வந்து தமது முன்னோர்களின் அடக்கஸ்தலங்களைப் பார்த்துவிட்டு செல்வது வழக்கம்.
இந்த அடக்கஸ்தலம் 0.47 சென்ட் கொண்டதாகும். இதன் பராமரிப்பாளர்கள் ஹைதராபாத்தில் வசிப்பதாலும், சையத் ஷரீப் சாஹிப் அமெரிக்காவில் வசிப்பதையும் அறிந்து கொண்ட சிலர் இந்த இடத்தை ஆக்கிரமிக்க முயற்சித்துள்ளனர். ஷமீல் அஹமது, சாதிக் பாஷா, படேசாப் (எ) காதர் பாய், பக்ஷு (எ) கரிமுல்லா ஆகியோர் அப்பகுதியின் 18வது வார்டு அதிமுக கவுன்சிலராக இருக்கும் சுந்தரம் என்பவரின் துணையுடன் இந்த அடக்கஸ்தல இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். கடந்த 17.03.2012 அன்று ஜே.சி.பி. இயந்திரம் மூலம் சமாதிகளை இடித்து, பிளாட் போடுவதற்கு வசதியாக கபரஸ்தானை சமன் செய்துள்ளனர். தொடர்ந்து பிளாட்டுகள் போட்டு, அதில் 10 பிளாட்டுகளை விற்பனையும் செய்துள்ளனர். இந்த தகவல் அப்பகுதியில் புதிதாக துவங்கப்பட்ட தமுமுக கிளையின் நிர்வாகிகளுக்குத் தெரியவர, மாவட்ட நிர்வாகிகளின் வழிகாட்டுதலின் பேரில், பேராசிரியர் உசேன் உள்ளிட்ட பத்து கல்லூரி பேராசிரியர்கள் துணையுடன் இடத்தை மீட்கும் முயற்சியில் கிளைச் செயலாளர் எச். ஆசாத் இறங்கினார்.
ஹைதராபாத்தில் வசிக்கும் வக்ஃப் பராமரிப்பாளரின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு ஆக்கிரமிப்பு குறித்து விளக்கியுள்ளார். அவர்கள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் சையத் ஷரீப் சாஹிபிடம் விஷயத்தைக் கூறவே, அவர் அடுத்த சில நாட்களில், கபரஸ்தானை மீட்க, ஆற்காடு வந்துள்ளார். அவரிடம் தமுமுக கிளைச் செயலாளர் ஆசாத், நடந்த சம்பவங்களை விவரித்துள்ளார். இதையடுத்து அவரை அழைத்துக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அஜய் யாதவை சந்தித்து, ஆக்கிரமிப்பு குறித்து புகார் தெரிவித்துள்ளனர். அந்த இடம் வக்ஃபிற்குச் சொந்தமானது என்பதை ஆதாரங்களுடன் விளக்கியுள்ளனர்.
ஒரு அடக்கஸ்தலத்தை மீட்பதற்காக அமெரிக்காவிலிருந்து பெரியவர் சையத் ஷரீப் சாஹிப் வந்துள்ளது மாவட்ட ஆட்சியருக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சையத் ஷரீபின் புகாரை கவனமாகக் கேட்டு, உடனடியாக அந்த இடத்தை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். உடனடியாக தாசில்தாருக்கும், சர்வேயருக்கும் உத்தரவுகள் செல்லவே, அவர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்திற்கு வருகைதந்து, இடத்தை அளந்து, இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர்.
இதையடுத்து வேலூர் வக்ஃப் ஆய்வாளர் முஹம்மது இம்ரான், ஆற்காடு டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து தமுமுகவினரும் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து ஷமீல் அஹமது, சாதிக் பாஷா ஆகிய இருவரை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் காவல்துறையினர் அவர்களை சில மணி நேரங்களில் விடுவித்துவிட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டதாக பத்திரிகைச் செய்தி வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், வக்ஃபுக்குச் சொந்தமான கபரஸ்தானை மீட்பதில் கவனம் செலுத்திய மாவட்ட ஆட்சியர், இதற்கென அமெரிக்காவிலிருந்து வருகைதந்த முதியவர் சையத் ஷரீப் சாஹிபையும், வக்ஃபை மீட்கும் முயற்சியில் பங்கெடுத்த தமுமுகவினரையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த தமுமுக கிளைச் செயலாளர் ஆசாத், நூற்றுக்கும் மேற்பட்ட முன்னோர்களின் சமாதிகளை இறைவனின் அச்சம் சிறிதும் இல்லாமல், முஸ்லிம் பெயர்தாங்கிகள் இடித்து, போலி ஆவணங்கள் தயாரித்து அதனை விற்பனை செய்ய முயற்சித்துள்ளனர். இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும், ஆற்காடு வந்த பெரியவர் சையத் ஷரீப் சாஹிப் அவர்கள், சம்பவ இடத்தைப் பார்த்ததும் பெரும் கவலையடைந்தார்.
அந்த இடத்தை எப்படியும் மீட்கவேண்டும் என்பதில் நம்மைப் போலவே அவரும் அக்கறையுடன் இருந்தார். நாங்கள் மாவட்ட நிர்வாகிகளின் வழிகாட்டுதலின் பேரில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து உரிய ஆதாரங்களை சமர்ப்பித்தோம். தமுமுகவின் பெரும் முயற்சியினால் தற்போது அந்த இடம் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. ஆற்காட்டில் இ து போல் ஏராளமான வக்ஃபு சொத்துக்கள் ஆக்கிரமிப்பட்டிருந்தாலும், ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து வக்ஃபு சொத்து மீட்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும்’’ என்று கூறிய ஆசாத், குற்றவாளிகளில் ஓரிருவரை மட்டும் விசாரித்த காவல்துறை, அவர்களை சிறைக்கு அனுப்பாமல் விடுவித்துள்ளதை குறைகூறினார்.


கருத்துகள் இல்லை: