திங்கள், 21 மே, 2012

ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவுகள் ஓர் ஆய்வு




இந்திய அரசு நிர்வாகத்தை திறம்பட நிர்வகிக்கும் இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி, உள்ளிட்ட முக்கியப் பணிகளுக்கு நடைபெற்ற இறுதித் தேர்வில் 910 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஐ.ஏ.எஸ். தேர்வில் பிரதானமான எழுத்துத் தேர்வு சென்ற ஆண்டு அக்டோபர்&நவம்பர் மாதங்களில் நடைபெற்றது. நேர்முகத் மற்றும் ஆளுமைத் திறன் தேர்வு இவ்வாண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றது. வெற்றி பெற்ற 910 பேரில் பொதுப் பிரிவினர் 420 பேரும் (21 பேர் மாற்றுத் திறனாளிகள்), இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 255 பேரும் (8 பேர் மாற்றுத் திறனாளிகள்), செடியூல்டு பிரிவில் 157 பேரும் (இதில் 4பேர் மாற்றுத் திறனாளிகள்), செட்யூல்டு பழங்குடியினப் பிரிவில் 78 பேரும் தேர்வாகி உள்ளனர்.

ஐ.ஏ.எஸ். அரசு அறிவிப்பின்படி இந்திய ஆட்சிப் பணி என்ற ஐ.ஏ.எஸ். பணியிடத்திற்கு 170 இடங்கள் காலியாக உள்ளன. இதில் 85 பேர் பொதுப் பிரிவிலும், 48 பேர் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலும், 28 பேர் ஷெட்யூல்டு பிரிவிலும் ஒதுக்கப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கு 13 இடம் காலியாக உள்ளது.

ஐ.எஃப்.எஸ். இந்திய வெளியுறவுத்துறை (ஐ.எஃப்.எஸ்) துறையில் 40 இடங்கள் காலியாக உள்ளன. இதில் 23 பொதுப்பிரிவு, 9 பிற்படுத்தப்பட்டோர் பிரிவு, 5 ஷெட்யூல்டு பிரிவு, 3 பழங்குடியினர் பிரிவுக்கானது.

ஐ.பி.எஸ். இந்திய காவல் துறையில் (ஐ.பி.எஸ்.) 78 இடங்கள் பொதுப்பிரிவிலும், 37 இடங்கள் பிற்படுத்தப்பட்டோருக்கும், 21 ஷெட்யூல்டு பிரிவினருக்கும், 14 இடங்கள் ஷெட்யூல்டு பழங்குடியினருக்கும் வழங்கப்பட்டுள்ளது. குரூப் ஏ மத்திய அரசின் குரூப் பிரிவுக்கான இடங்கள் 543 காலியாக உள்ளன. அதில் 273 பொதுப் பிரிவிலும், 148 பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலும் 81 இடங்கள் ஷெட்யூல்டு பிரிவுக்கும், 41 பழங்குடியினர் பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. குரூப் பி மத்தியப் பணிகள் குரூப் பி பிரிவில் காலியாக உள்ள 98 இடங்களில் பொதுப்பிரிவில் 52 இடங்களும், பிற்படுத்தப்பட்டோருக்கான 15 இடங்களும், ஷெட்யூல்டு பிரிவினருக்கு 24 இடங்களும், பழங்குடியினருக்கு 7 இடங்களும் காலியாக இருந்தன. இதற்கான இடங்கள் தற்போதைய ஐ.ஏ.எஸ். தேர்வுகளின் மூலம் நிரப்பப்பட உள்ளன.

சாதனைப் படைக்கும் தமிழகம் அகில இந்திய அளவில் நடைபெற்ற ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 68 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதாவது 7.5 சதவீதம் பேர் மத்திய ஆட்சிப் பணிக்கு தமிழகத்தில் இருந்து தேர்வாகி உள்ளனர். குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள மாவிலாத்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி சண்முகவேலுவின் மகன் கோபால் சுந்தர்ராஜன், அகில இந்திய அளவில் 5ஆம் இடம் பெற்றுள்ளார்.

இதில் மகிழ்ச்சிக்கும் வியப்புக்கும் உரிய செய்தி என்னவெனில், தமிழகத்திலிருந்து வென்ற 68 பேரில் 20 பேர் விவசாய பட்டதாரிகள் ஆவர். இதில் பலபேர் எவ்விதப் பயிற்சி வகுப்புகளுக்கும் செல்லாமல் வெற்றி ஈட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாய்மொழி போதும் ஐ.ஏ.எஸ். என்பது அடைய முடியாதது; யாருக்கும் அவ்வளவு எளிதில் வாய்க்காது என சோர்வுற்றுக் கிடக்கும் மாணவர் சமூகத்திற்கு ஊக்கமும் உத்வேகமும் ஊட்டும் பல்வேறு செய்திகள் ஆட்சிப் பணி தேர்வில் உண்டு. ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு ஆங்கிலம் நன்றாக புலமைப் பெற்றிருக்க வேண்டும், தாய்மொழி மட்டும் போதாது என்ற கருத்து இன்றுவரை சிலரால் நம்பப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் அவரவர் தாய்மொழியில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதலாம் என்பது பல ஆண்டுகாலமாகவே பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி நேர்முகத் தேர்வையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்ட கரூர் இளைஞர் தினேஷ்குமார் 910 இடங்களில் 359வது இடத்தைப் பிடித்துள்ளார்.

நேர்முகத் தேர்வில் ஐந்து பேர் கொண்ட குழுவினர் கேட்ட பெரும்பாலான ஆங்கிலக் கேள்விகளுக்கு தமிழிலேயே பதில் அளித்துள்ளார். அங்கு மொழிப் பெயர்ப்பாளர்களும் உண்டு. கடந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த திவ்யதர்ஷினி, ஐ.ஏ.எஸ். தேர்வில் இந்தியாவிலேயே முதலிடத்தைப் பெற்றார். சட்டம் படித்த அவர் முதலிடம் பெற்றார் எனில் அதற்கு முந்தைய ஆண்டு (2010ல்) ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர் ஷா பைசல் இந்தியாவிலேயே ஐ.ஏ.எஸ். தேர்வில் முதலிடம் பெற்றார்.

இந்த ஆண்டு 30 முஸ்லிம்கள் இவ்வாண்டு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 30 பேர் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக முதல் 50 இடத்திற்குள் மூன்று முஸ்லிம்கள் தேர்வாகியுள்ளனர்.

கடந்த ஆண்டு 50 இடங்களுக்குள் தாரிக் என்பவர் மட்டுமே 35வது ரேங்க்கைப் பிடித்திருந்தார். இவ்வாண்டு சையத் ஆபித் ரஷீத்ஷா (எண் 218226) 35வது ரேங்க்கும், நூஹ் (136206) 45வது ரேங்க்கும், முஹம்மது ஷரீக் பத்ரு (051236) 48வது இடமும் பெற்றுள்ளனர். எனினும் கடந்த ஆண்டு 31 முஸ்லிம்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இவ்வாண்டு 30 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முஸ்லிம் தேர்ச்சி விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் முஸ்லிம் சமூகத்தின் ஐ.ஏ.எஸ். தேர்ச்சி விகிதத்தை கொஞ்சம் பார்ப்போம்.

இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி உள்ளிட்ட அதிகாரமிக்க பதவிகள் வழியாக நாட்டுக்கும் மக்களுக்கும் அரும் தொண்டாற்ற ஐ.ஏ.எஸ். தேர்வுகளுக்கு இளைய தலைமுறையினர் தயாராக வேண்டும்.



---அபுசாலிஹ்

கருத்துகள் இல்லை: