புதன், 11 ஆகஸ்ட், 2010

கோயம்புத்தூர் வழக்கைவிட அதிக சித்திரவதைகளை தாங்கவேண்டி வரும்: அப்துல் நாஸர் மஃதனி

கொல்லம்,ஆக11:கோயம்புத்தூர் சிறையில் அனுபவித்ததை விட அதிகமான சித்திரவதைகளை கர்நாடகா சிறையில் அனுபவிக்க வேண்டிவரும் என பி.டி.பியின் தலைவர் அப்துல்நாஸர் மஃதனி தெரிவித்தார்.

கோயம்புத்தூர் வழக்கைவிட கொடூரமானது பெங்களூர் வழக்கு. கோயம்புத்தூர் வழக்கில் கைதுச்செய்யப்பட்ட பிறகே ஆதாரங்களை திரட்டினர். ஆனால் இவ்வழக்கில் அதற்கு நேர் மாறாக நடைபெறுகிறது.

மஃதனியின் வசிப்பிடமான அன்வாருச்சேரியில் வைத்து நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

"நீதிமன்றத்தையும்,சட்டத்தையும் மதிப்பதால் கைது செய்வதில் ஒத்துழைப்பேன். முன் ஜாமீன் கிடைக்காதவாறு திட்டமிட்டு இவ்வழக்கில் என்னை உட்படுத்தியுள்ளனர். இதன் பின்னணியில் ஐ.பி.யும் பாஜக அரசும் செயல்படுகிறது.எனக்கெதிராக சதித்திட்டம் தீட்டியவர்களைப் பற்றி பெங்களூரிலிருந்து திரும்பிவர முடிந்தால் கூறுவேன்.என்னுடன் தொடர்புடைய பிரச்சனையை மதரீதியாக ஆதாயம் தேட பா.ஜ.க முயல்கிறது.

அன்வாருச்சேரி பயங்கரவாத மையம் அல்ல.இங்கு அகடாமிக் கல்வியை கற்றுக்கொடுக்கும் 10 ஆசிரியர்களில் 9 பேர் ஹிந்துக்களாவர். அன்வாருச்சேரியை நோக்கி பாஜக பேரணி நடத்தினால் அதனை தடுப்பதற்கு இங்குள்ள ஹிந்துமதத்தைச் சார்ந்த பெண்கள் முன்னணியில் நிற்பர். என்னுடன் தொடர்புடைய வழக்கில் பதில் கூறாத பிரபல அரசியல் கட்சிகளின் மீது எனக்கு வருத்தம் இல்லை.

சுப்ரீம் கோர்ட்டிலிருந்து ஜாமீன் கிடைக்க வாய்ப்பிருந்தும் கைதுச் செய்வதற்கான முயற்சி நடப்பதால் இனி சுப்ரீம் கோர்ட்டை அணுகமாட்டேன். ரமலான் மாதத்தில் என்னை கைது செய்வதன் மூலம் நோன்பு நோற்கும் என்னை நேசிப்பவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்த முயல்கிறார்கள்.

எனக்கெதிரான வழக்கு பா.ஜ.கவின் மதரீதியான நிலைப்பாடல்ல என்றுக்கூறிய பிரகாஷ் காரட்டின் பதில் புதியதாக நான் கேட்கிறேன். இதனைக் குறித்து அறிய வேண்டியுள்ளது" என பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் சிரித்தவாறு பதில் கூறினார் அப்துல் நாஸர் மஃதனி.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: