ஜூன் மாதம் 11ஆம் தேதி ராஜெளரி காடல் எனும் இடத்தில் சிறப்பு வகுப்பை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த டூ்ஃபல் முகமது மாட்டூ என்ற 17 வயது இளைஞர் மத்திய கூடுதல் காவல் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். இந்த கொலை காஷ்மீர் மக்களிடையே பெரும் சினத்தை மூட்டியது. காவல் துறையினர் நடத்திய கண்ணீர் புகைக் குண்டுத் தாக்கியே மாட்டூ உயரிழந்ததாகக் காவல் துறையினர் கூறுகின்றனர். ஆனால், அவர் துப்பாக்கிச் சூட்டில் பலியானதாக மருத்துவ அறிக்கை உறுதி செய்தது. அன்று துவங்கிய போராட்டங்கள் இன்றுவரை, ஊரடங்கு உத்தரவுகளுக்குக் கூட கட்டுப்படாமல் தொடர்கின்றது.
காஷ்மீரிலிருந்து மத்திய கூடுதல் காவற்படைகள் வெளியேற வேண்டும் என்று கோரி மாணவர்களும், இளைஞர்களும் ஒவ்வொரு நாளும் வீதிக்கு வந்து நடத்தும் போராட்டங்களும், அவர்களைக் கலைக்க காவல் துறையினர் முற்படும்போது போராட்டக்காரர்கள் காவலர்கள் மீது கல்வீசுவதும், அவர்களை நோக்கி காவல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதும் வழமையாகிவிட்டது.
தங்களை கலைக்க வரும் காவல் படையினர் மீது போராட்டக்காரர்கள் கல் வீசுவது இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகளிலும் புதிதல்லவே. கற்களை வீசி தங்களைத் தாக்கும் போராட்டக்காரர்களை, அவர்கள் வீசிய கற்களை எடுத்தே காவல் படையினரும் திருப்பி வீசுத் தாக்குவதை நாம் தொலைக்காட்சிச் செய்திகளில் அடிக்கடி கண்டுவருகிறோம். கல் வீச்சை தாங்க முடியாத பட்சத்தில் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசிவதும், போராட்டக்காரர்களைக் கலைப்பதற்கென்றே தயாரிக்கப்பட்டுள்ள நீர் பீச்சி வாகனங்களைக் கொண்டு வந்து பயன்படுத்துவதும் உலகெங்கும் நடத்தப்படுகிறது. நேற்று கூட தலைநகர் புதுடெல்லியில் பாரதிய ஜனதா கட்சியினர் நடத்திய ஒரு போராட்டத்தில் கலந்துகொண்டவர்களைக் கலைக்க தண்ணீரை பீச்சியடிக்கும் வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழிமுறைகளை ஏன் கையாளவில்லை என்ற கேள்விக்கு ஜம்மு-காஷ்மீர் அரசிடமிருந்தோ மத்திய அரசிடமிருந்தே எந்தப் பதிலும் இல்லை.
காஷ்மீர் கலவரத்தில் ஈடுபடுவோரை தடுத்து நிறுத்த முற்படும் காவல் படையினர் தலைக்குப் பாதுகாப்பு கவசம், உடலிற்கும், கால்களுக்கும் கூட பாதுகாப்புக் கவச உடைகளைத் தரித்தே உள்ளனர். இது எல்லா படத்திலும் தெரிகிறது. ஆனால், இப்படி எந்தப் பாதுகாப்பும் அற்ற நிலையில் தங்களை நோக்கி கல் வீசுவோர் மீது காவல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துகிறார்கள் என்றால், அது திட்டமிட்டு நடத்தப்படுவதாகவே தெரிகிறது.
கலவரத்தைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றாலும், காலிற்குக் கீழ்தான் சுட வேண்டும் என்ற முக்கியமான விதிமுறை கடைபிடிக்கப்படாதது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.
இப்படிக் கல்வீச்சில் ஈடுபடுகிறவர்கள் காசை வாங்கி்க் கொண்டு கல் வீச்சில் ஈடுபடுகிறார்கள் என்று உள்துறைச் செயலர் கோபால கிருஷ்ண பிள்ளை கூறியிருந்தார். அவர் கூறியதை நம்புவதற்குத்தான் ஒருவருமில்லை.
“நான் மருத்துவராகப் பணியாற்றிவருபவன், எனது நண்பர்கள் பலரும் படித்தவர்களே, சிலர் பொறியாளர்கள், சிலர் வணிகக் கல்வி பயின்றவர்கள். ஆனால் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து சென்றுதான் போலிசார் மீதும், சிஆர்பிஎஃப் மீதும் கல் வீசினோம். ரூபாய் 200 அல்லது 300 வாங்கிக்கொண்டுதான் நாங்கள் துப்பாக்கிக் குண்டுகளை எதிர்நோக்கிச் செல்கிறோம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அதெல்லாம் வெறும் கதை. நீதியை நிலைநாட்ட இதுவே எங்களது கருவி” என்று கல்லைக் காட்டியுள்ளார் மருத்துவர் ஒருவர் (இந்தியன் எக்ஸ்பிரஸ், ஆகஸ்ட் 01, 2010).
இந்தக் கலவரங்கள் பயங்கரவாத இயக்கமான லஸ்கர் இ தயீபா தூண்டிதலால் நடைபெறுகின்றன என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் கூறினார். அதுவும் உண்மையல்ல என்பதை அங்கிருந்து செய்திகளை அளித்துக் கொண்டிருக்கும் பத்திரிக்கையாளர்களின் விரிவான கட்டுரைகளும், அவர்கள் எடுத்தனுப்பும் பேட்டிகளும் புலப்படுத்துகின்றன.
மத்திய கூடுதல் காவற்படைகள், இராணுவம் ஆகியவற்றின் வளையத்திற்குள் வைத்து தாங்கள் ஆளப்படுவதை இதுநாள்வரை சகித்துக்கொண்டிருந்த காஷ்மீரிகள், காவல் படைகளின் கண்காணிப்பின் கீழ் இதற்கு மேலும் வாழ விரும்பவில்லை என்றும், அன்றாட வாழ்வின் ஒவ்வொரு திருப்பத்திலும் சோதனைக்குட்படுத்தப்பட்டு வாழ்ந்துவரும் வாழ்க்கையின் மீது ஏற்பட்ட வெறுப்பின் காரணமாகவே போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்றும், தாங்கள் வாக்களித்து அமைத்த மாநில அரசு இருந்தும் எந்த முன்னேற்றமும் இல்லாத ஒரு சூழலும், கல்வி, வேலை வாய்ப்பின்மையும் ஒன்று சேர்ந்த ஒரு பொருளாதார, அடக்குமுறை சூழலையும் எதிர்த்தே இந்தப் போராட்டம் பிறந்துள்ளதே தவிர, அந்நிய தூண்டுதல் காரணமில்லை என்கின்றனர்.
இதனை காஷ்மீர் தலைவர்கள் சிலரின் பேட்டிகளும் மெய்ப்பிக்கின்றன.
காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வுகாண பேச்சுவார்த்தையை துவக்குங்கள் என்கிறார் தாரிகாமி. யாருடன் பேசுவது? அவரே கூறுகிறார்: “ஹூரியத் அமைப்புகளின் தலைவர்கள், இளைஞர்கள், அரசியல் கட்சிகள் என்று தாங்களெல்லாம் காஷ்மீரின் ஒரு அங்கம் என்று கருதும் அனைவருடன் பேசுங்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கூறினேன்” (இந்தியன் எக்ஸ்பிரஸ், ஆகஸ்ட் 01, 2010).
வடக்கு காஷ்மீரின் ஹண்ட்வாரா பகுதியிலுள்ள லாங்கேட் தொகுதியில் இருந்து சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றப் பொறியாளர் இரஷீத், “காஷ்மீரிகள் பாகிஸ்தானுடன் இணைய விரும்பவில்லை என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன். அவர்கள் இந்தியாவிலிருந்து பிரிந்து செல்லவும் விரும்பவில்லை, ஏனென்றால் அவர்களால் தனித்து வாழ்ந்திட முடியாது என்பது தெரியும். இந்தியாவுடன்தான் இருக்க விரும்புகிறார்கள், ஆனால், அந்த இந்தியா அவர்களை துப்பாக்கி முனையில் நடத்துகிறது. தனது மூளையை டெல்லி சரியாகப் பயன்படுத்தினால் பிரச்சனைக்கு படிப்படியாகத் தீர்வு காணலாம். காஷ்மீர் மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தும் முதல் முயற்சியாகப் பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையை வேகமாகக் குறைக்க வேண்டும், தீவிரவாதத்தில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும், காஷ்மீரில் நடைமுறையில் உள்ள ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் (Armed Forces Special Powers Act - AFSPA) திரும்பப் பெறவேண்டும்” என்று கூறியுள்ளார் (அதே நாளிதழில்).
அங்குள்ள கிராமத்தினர் கூறுவது இன்னும் கவலையளிக்கக் கூடியது: “இராணுவம் எங்களை கூலி கொடுக்காமல் வேலை வாங்கியது. தீவிரவாதிகளுடன் மோதல் ஏற்படும்போது எங்களை கவசமாக பயன்படுத்தியது. எங்களது இளைஞர்கள் மீது லேசான சந்தேகம் ஏற்ப்பட்டாலும் அவர்களை சுட்டுக் கொன்றது” இப்படி கூறுவோர் எல்லா கிராமத்திலும் உள்ளனர் என்றும் கூறியுள்ளார் இரஷீத். இந்திய இராணுவத்தின் அத்துமீறலிற்கு எதிராக 24 வழக்குகளைத் தொடுத்துள்ளவர் இந்த பொறியாளர்.
ஆக, காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காணாமல், அங்குள்ள மக்களை ஆயுதப் படைகளின் துப்பாக்கி முனையில் வைத்துக் கொண்டு, அவர்கள் எதிர்த்து எழும்போதெல்லாம் ஒடுக்குமுறையை ஏவிவிடுவது என்பது மிக மிகப் பாதகமான அணுகுமுறையாகும். இப்படிப்பட்ட அணுகுமுறையை நாங்கள் சகித்துக்கொள்ள முடியாது என்பதுதான் இன்றைக்கு காஷ்மீரில் ஏற்பட்டுள்ள எழுச்சி.
ஆனால், துரதிருஷ்டவசமாகவோ அல்லது திட்டமிட்டோ மத்திய அரசு இதனை புரிந்துகொள்ளாமல் நடந்துகொள்வதாகவே தெரிகிறது. கலவரம் செய்வோரை ஒடுக்க மத்திய கூடுதல் காவற்படையின் மேலும் 19 கம்பெனிகளை அங்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.
இதனை நன்குணர்ந்தவராக நேற்று சிவகங்கையில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி.பர்தன் கூறினார்: “காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண அனைத்துக் கட்சிகளுடனும் பேசுமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறோம். காஷ்மீர் பிரச்சனைக்கு இறுதித் தீர்வு அம்மாநிலத்திற்கு முழு சுயாட்சி வழங்குவதேயாகும். ஆனால் இறுதித் தீர்வு என்று வரும்போது, காஷ்மீர் ஒரு பகுதி பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ளது. எனவே பேச்சுவார்த்தை நடத்தும்போது அது பாகிஸ்தானையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
சரியான அந்த இலக்கை நோக்கி தனது பார்வையைத் திருப்புமா மத்திய அரசு?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக