திங்கள், 23 ஆகஸ்ட், 2010

ஓட்டு: கோவா கிருஸ்துவ தலைர்களுக்கு பாஜக வலைவீச்சு

Arti Mehra
பனாஜி,ஆக23:கோவா மாநில சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் வெற்றிபெற கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் ஆதரவு முக்கியம் என்பதால் அந்த மதத் தலைவர்களுடன் பேசுவது என்று பாரதிய ஜனதா தலைமை முடிவு செய்திருக்கிறது.

இதற்கான முதல் கட்டப் பேச்சுகளை மேற்கொள்ளும் பொறுப்பு கட்சியின் தேசியச் செயலரும் டெல்லி மாநகரின் முன்னாள் மேயருமான ஆர்த்தி மெஹ்ராவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
இதற்காக பனாஜி வந்துள்ள ஆரத்தி மெஹ்ரா,கத்தோலிக்க மதத் தலைவர்களிடம் இது குறித்து முதலில் குறிப்பிட்டபோது அவர்களும் பேசுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் திங்கள்கிழமை பேச வரலாம் என்று அனுமதி அளித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.தேவைப்பட்டால் தலைமை மறை மாவட்ட ஆயரையும் சந்திக்க கோவா மாநில பாஜக தலைவர்கள் தயார் என்றும் கத்தோலிக்கத் தலைமை விரும்பினால் கட்சியின் அகில இந்தியத் தலைவர் நிதின் கட்காரியும் கோவா வந்து பேச்சில் கலந்து கொள்வார் என்றும் தெரிவித்தார்.

கோவாவைப் பொறுத்தவரையில் பாஜக அணிக்கு இன்னமும் 4% முதல் 7% வரையிலான வாக்குகள் கூடுதலாகக் கிடைத்தால் ஆட்சியைப் பிடித்துவிட முடியும்.கிறிஸ்தவர்களிடம் காங்கிரஸ் கட்சி செய்யும் பிரசாரம் காரணமாகவே பாஜகவை நெருங்க கிறிஸ்தவர்கள் அஞ்சுகிறார்கள் என்பதால் அவர்களிடமே நேரடியாகப் பேசுவது என்ற முடிவை கட்சித் தலைமை எடுத்திருப்பதாக ஆரத்தி தெரிவித்தார்.

கோவாவில் ஊழல் அதிகரித்துவிட்டது.இந்த அரசியல் ஊழல் காரணமாக மாநிலத்தின் வளர்ச்சி வெகுவாக பாதித்து வருகிறது. தங்களுடைய அரசை அகற்றும் வலிமை பாஜகவுக்கு இல்லை என்பதாலேயே காங்கிரஸார் இறுமாப்போடு செயல்படுகின்றனர்.இந்த ஊழல் விவகாரங்கள் மாநில மக்களை அதிலும் குறிப்பாக கிறிஸ்தவர்களை மிகவும் மனம் நோகச் செய்துள்ளது.எனவே பாரதிய ஜனதா என்பது அரசியல் கட்சிதானே தவிர அது மதவெறிக் கட்சி அல்ல,நாட்டின் வளர்ச்சியும் பாதுகாப்பும்தான் அதன் குறிக்கோளே தவிர எந்த சிறுபான்மை இனத்துக்கும் அது எதிரியல்ல என்று கிறிஸ்தவர்களுக்கு நம்பிக்கை ஊட்டவே இந்த முயற்சியைத் தாங்கள் மேற்கொண்டிருப்பதாக ஆர்த்தி மெஹ்ரா தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: