திங்கள், 30 ஆகஸ்ட், 2010

நியூயார்க்கில் கத்தி குத்துப்பட்ட முஸ்லிம் வாகன ஓட்டுநருக்கு ஆதரவாக பிரமுகர்கள்

வாஷிங்டன்,ஆக29:மதம் என்ன? என்பதைக் கேட்டறிந்துவிட்டு முஸ்லிம் என்பது உறுதியானவுடன் வாகன ஓட்டுநர் ஒருவரை கத்தியால் குத்திக் காயத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் ஓட்டுநருக்கு ஆதரவாக பிரமுகர்கள் களமிறங்கியுள்ளனர்.

பங்களாதேஷைச் சார்ந்த அஹ்மத் ஷெரீஃப் (வயது43) என்பவர்தான் கத்திக்குத்துப்பட்ட வாகன ஓட்டுநராவார்.

இச்சம்பவம் நடைபெற்றவுடனேயே மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க் ஷெரீஃபையும் அவருடைய குடும்பத்தினரையு அழைத்து நலம் விசாரித்துள்ளார். எல்லா உதவியையும் வாக்களித்த மேயர், ஷெரீஃபிற்கும், குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதனை ஷெரீஃப் கூறியுள்ளார்.

இத்தகைய நிகழ்வுகள் தாக்குதல்களை அதிகரிக்கவே உதவும் என வாகன ஓட்டுநர்கள் அமைப்பின் தலைவர் பைரவி தேசாய் தெரிவித்துள்ளனர். முஸ்லிம் சமுதாயத்தை அச்சுறுத்தவே இத்தாக்குதலை நடத்தியவர்கள் முயற்சிக்கிறார்கள் எனவும், இதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்போம் எனவும் இஸ்லாமிக் கல்சுரல் செண்டர் இமாம் ஷம்ஸி அலி தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஷெரீஃபின் காரில் ஏறிய மைக்கேல் என்ரைட் என்பவர் ஷெரீஃபிடம் முஸ்லிமா? நோன்பாளியா? எனக் கேட்டுவிட்டு கத்தியால் குத்தியுள்ளார். இவரை போலீஸ் கைதுச் செய்துள்ளது.

2001 செப்டம்பர் 11 தாக்குதலில் தகர்ந்துபோன உலகவர்த்தக மையம் அமைந்திருந்த இடத்தில் மஸ்ஜித் நிர்மாணிப்பதற்கான பணிகள் நடந்துவருகையில் அமெரிக்காவில் முஸ்லிம் விரோத மனப்பாண்மை அதிகரித்துள்ளது. ஆனால், நியூயார்க் மேயர், கவர்னர், அதிபர் ஒபாமா ஆகியோர் மஸ்ஜித் நிர்மாணத்திற்கு பரிபூரண ஆதரவை தெரிவித்துள்ளனர்.

எட்டுலட்சம் முஸ்லிம்கள் நியூயார்க்கில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: