திங்கள், 30 ஆகஸ்ட், 2010

மதுரையில் சாகடித்த ஆடு மாடுகளை அறுக்கும் முயற்சி முறியடிப்பு- தமுமுக போராட்ட அறிவிப்பு வெற்றி

மதுரையில் புதிதாக மின்சார முறையில் ஆடு மாடுகளை அறுக்கும் நவீன ஆடு அறுக்கும் தொட்டி சில நாட்களுக்கு முன் திறக்கப்பட்டது. இந்த நவீன ஆடு தொட்டியில் ஆடுகளுக்கு மின் அதிர்ச்சி அளித்து அவை பாதி உயிரை இழந்த நிலையில் அறுக்கும் முறை பின்பற்றப்பட்டு வந்தது. இது மதுரை வாழ் முஸ்லிம்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மதுரை மாநகராட்சி சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த நவீன ஆடு அறுக்கும் தொட்டி மதுரை அனுப்பானடியில் திறக்கப்பட்டது. இந்த ஆடு தொட்டியில் எவ்வாறு பிராணிகள் அறுக்கப்படுகின்றன என்பதை காண்பதற்காக மதுரை ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள், 50 உலமாக்கள் நேரடியாக சென்று மாநகராட்சியின் அனுமதி பெற்று நேரில் பார்வையிட்டனர். அப்போது மின் அதிர்ச்சி கொடுக்கப்பட்ட ஆடு வாயில் நுரை தள்ளி மயங்கியது. அதை அறுத்தபோது அதிலிருந்த இரத்தம் வெளிவரவில்லை. இச்செய்தி மதுரையில் முஸ்லிம்களிடையே பரவி பெரும் கொந்தளிப்பபை ஏற்படுத்தியது.

மதுரை நவீன ஆடு தொட்டியில் பிராணிகளை அறுக்கும் முறை இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு முரணானது என்பது வெளிப்படையாக தெரிய வந்தது. பிராணியை அறுக்கும் போது அதன் உடலில் உள்ள அனைத்து ரத்தமும் வெளியேற வேண்டும். ஆனால் மின் அதிர்ச்சி கொடுத்து பிராணி மயங்கிய நிலையில் அறுக்கும் போது ரத்தம் வெளியேறத நிலையில் அதனை ஹலால் முறை அறுப்பு என்று சொல்ல இயலாது. இச்சூழலில் மதுரை நவீன ஆடு தொட்டியில் ஹலால் முறையில் தான் ஆடு அறுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆகஸ்ட் 27 ஜும்ஆ தொழுகைக்கு பிறகு மதுரை மாநகராட்சி மேயர் வீட்டை முற்றுகையிடுவது என்று அறிவிக்கப்பட்டது.


ம.ம.க அமைப்புச் செயலாளர் மதுரை கௌஸ் உரையாற்றுகிறார்.


முற்றுகைப் போராட்டத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வந்த வேளையில் மதுரை மாநகர காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளை வெள்ளிக்கிழமை காலை பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர். தமுமுக மதுரை மாவட்ட தலைவர் கே. முஹம்மது கவுஸ் தலைமையில் தமுமுகவினர் பேச்சு வார்த்தையில் பங்குக் கொண்டனர்.இதில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் மதுரை மைதீன், பொருளாளர் எம்.ஹெச். சிக்கந்தர், தமுமுக மாவட்ட குழு உறுப்பினர்கள் அஜ்மீர், அப்பாஸ் உள்ளிட்டோரும் பங்குக் கொண்டனர். தமுமுகவின் கோரிக்கையை ஏற்பதாகவும் போராட்டத்தை கைவிடுமாறு அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால் இது குறித்த அரசு உத்தரவை எழுத்துப்பூர்வமாக தராத வரையில் போராட்டத்தை நிறுத்த போவதில்லை என்று தமுமுக நிர்வாகிகள் உறுதியாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மதுரை அனுப்பனடி நவீன ஆடு தொட்டியில் ஹலால் முறையில் ஆடுகள் அறுக்கப்படும் என்ற உத்தரவை சுற்றறிக்கையாக வெளியிட்டு அதன் பிரதியை தமுமுக நிர்வாகிகளிடம் அளித்தனர்;.

 மதுரை டவுன் ஹாஜி உரையாற்றுகிறார்.

மதுரை மாநகராட்சி மேயர் வீட்டை முற்றுகையிட மதுரை காஜிமார் தெரு பள்ளிவாசலில் இருந்து ஜும்ஆ தொழுகைக்கு பிறகு ஊர்வலமாக புறப்பட பெரும் மக்கள் திரள் கூடிவிட்டது. போராட்டம் தொடங்குவதற்கு முன்பு மாநகராட்சி ஹலால் முறையிpல் இனி ஆடுகளை ஆறுப்போம் என்று உத்தரவு பிறப்பித்த சுற்றறிக்கை அளிக்கப்பட்டதால் திரண்டிருந்த மக்களிடையே மதுரை மாநகர அரசு காஜியார் காஜா முயினுத்தீன் மற்றும் மதுரை மாவட்ட தமுமுக தலைவர் கே. முஹம்மது கவுஸ் ஆகியோர் விபரங்களை எடுத்துக் கூறினர். கோரிக்கை வெற்றிப் பெற்றதால் போராட்டம் கைவிடப்பட்டது.


கருத்துகள் இல்லை: