மதுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 மே, 2012

மதுரையில் காவல்துறையை கண்டித்து தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்.

பாரதீய ஜனதா கட்சியின் மாநாட்டிற்காக, அத்வானி மதுரை வருகையை முன்னிட்டு, அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை, மிரட்டி, துன்புறுத்தும் மதுரை மாநகர காவல் துறையை கண்டித்து, தமுமுக சார்பில் நெல்பேட்டை அருகில் ஆர்ப்பாட்டம் 9.5.2012 இல் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, காவல்துறை அனுமதி மறுத்து தடை விதித்தால், தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் M.H. சிக்கந்தர் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் V.M. அப்துல் ரஃபி, மாநகர தலைவர் S. ஷேக் இப்ராஹீம், மாநகர செயலாளர் PM ஷேக் அஹமத் அப்துல்லாஹ், மாநகர பொருளாளர் A. முஹம்மது ஸாலிஹ், மாவட்ட துணை செயலாளர் K. அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 120 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.



திங்கள், 30 ஆகஸ்ட், 2010

மதுரையில் சாகடித்த ஆடு மாடுகளை அறுக்கும் முயற்சி முறியடிப்பு- தமுமுக போராட்ட அறிவிப்பு வெற்றி

மதுரையில் புதிதாக மின்சார முறையில் ஆடு மாடுகளை அறுக்கும் நவீன ஆடு அறுக்கும் தொட்டி சில நாட்களுக்கு முன் திறக்கப்பட்டது. இந்த நவீன ஆடு தொட்டியில் ஆடுகளுக்கு மின் அதிர்ச்சி அளித்து அவை பாதி உயிரை இழந்த நிலையில் அறுக்கும் முறை பின்பற்றப்பட்டு வந்தது. இது மதுரை வாழ் முஸ்லிம்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மதுரை மாநகராட்சி சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த நவீன ஆடு அறுக்கும் தொட்டி மதுரை அனுப்பானடியில் திறக்கப்பட்டது. இந்த ஆடு தொட்டியில் எவ்வாறு பிராணிகள் அறுக்கப்படுகின்றன என்பதை காண்பதற்காக மதுரை ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள், 50 உலமாக்கள் நேரடியாக சென்று மாநகராட்சியின் அனுமதி பெற்று நேரில் பார்வையிட்டனர். அப்போது மின் அதிர்ச்சி கொடுக்கப்பட்ட ஆடு வாயில் நுரை தள்ளி மயங்கியது. அதை அறுத்தபோது அதிலிருந்த இரத்தம் வெளிவரவில்லை. இச்செய்தி மதுரையில் முஸ்லிம்களிடையே பரவி பெரும் கொந்தளிப்பபை ஏற்படுத்தியது.

மதுரை நவீன ஆடு தொட்டியில் பிராணிகளை அறுக்கும் முறை இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு முரணானது என்பது வெளிப்படையாக தெரிய வந்தது. பிராணியை அறுக்கும் போது அதன் உடலில் உள்ள அனைத்து ரத்தமும் வெளியேற வேண்டும். ஆனால் மின் அதிர்ச்சி கொடுத்து பிராணி மயங்கிய நிலையில் அறுக்கும் போது ரத்தம் வெளியேறத நிலையில் அதனை ஹலால் முறை அறுப்பு என்று சொல்ல இயலாது. இச்சூழலில் மதுரை நவீன ஆடு தொட்டியில் ஹலால் முறையில் தான் ஆடு அறுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆகஸ்ட் 27 ஜும்ஆ தொழுகைக்கு பிறகு மதுரை மாநகராட்சி மேயர் வீட்டை முற்றுகையிடுவது என்று அறிவிக்கப்பட்டது.


ம.ம.க அமைப்புச் செயலாளர் மதுரை கௌஸ் உரையாற்றுகிறார்.


முற்றுகைப் போராட்டத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வந்த வேளையில் மதுரை மாநகர காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளை வெள்ளிக்கிழமை காலை பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர். தமுமுக மதுரை மாவட்ட தலைவர் கே. முஹம்மது கவுஸ் தலைமையில் தமுமுகவினர் பேச்சு வார்த்தையில் பங்குக் கொண்டனர்.இதில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் மதுரை மைதீன், பொருளாளர் எம்.ஹெச். சிக்கந்தர், தமுமுக மாவட்ட குழு உறுப்பினர்கள் அஜ்மீர், அப்பாஸ் உள்ளிட்டோரும் பங்குக் கொண்டனர். தமுமுகவின் கோரிக்கையை ஏற்பதாகவும் போராட்டத்தை கைவிடுமாறு அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால் இது குறித்த அரசு உத்தரவை எழுத்துப்பூர்வமாக தராத வரையில் போராட்டத்தை நிறுத்த போவதில்லை என்று தமுமுக நிர்வாகிகள் உறுதியாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மதுரை அனுப்பனடி நவீன ஆடு தொட்டியில் ஹலால் முறையில் ஆடுகள் அறுக்கப்படும் என்ற உத்தரவை சுற்றறிக்கையாக வெளியிட்டு அதன் பிரதியை தமுமுக நிர்வாகிகளிடம் அளித்தனர்;.

 மதுரை டவுன் ஹாஜி உரையாற்றுகிறார்.

மதுரை மாநகராட்சி மேயர் வீட்டை முற்றுகையிட மதுரை காஜிமார் தெரு பள்ளிவாசலில் இருந்து ஜும்ஆ தொழுகைக்கு பிறகு ஊர்வலமாக புறப்பட பெரும் மக்கள் திரள் கூடிவிட்டது. போராட்டம் தொடங்குவதற்கு முன்பு மாநகராட்சி ஹலால் முறையிpல் இனி ஆடுகளை ஆறுப்போம் என்று உத்தரவு பிறப்பித்த சுற்றறிக்கை அளிக்கப்பட்டதால் திரண்டிருந்த மக்களிடையே மதுரை மாநகர அரசு காஜியார் காஜா முயினுத்தீன் மற்றும் மதுரை மாவட்ட தமுமுக தலைவர் கே. முஹம்மது கவுஸ் ஆகியோர் விபரங்களை எடுத்துக் கூறினர். கோரிக்கை வெற்றிப் பெற்றதால் போராட்டம் கைவிடப்பட்டது.


சனி, 10 ஜூலை, 2010

மதுரை மாநகரில் முஸ்லிம்கள் மீது தொடர்ந்து பொய் வழக்கு போடும் காவல்துறையை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டம்


மதுரை மாநகரில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த அப்பாவி இளைஞர்கள் மீது காவல்துறை போட்டுக் கொண்டிருக்கும் அப்பட்டமான பொய் வழக்குகளுக்கு ஒரு அளவே இல்லாமல் எல்லை மீறி சென்று கொண்டிருக்கின்றது.
மதுரை மாநகர் செல்லூரில் கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உடன் பிறந்த சகோதரர்களான 3 முஸ்லிம் இளைஞர்கள் மீது ஐ.பி.சி 302 செக்ஷனில் மதுரை மாநகர காவல்துறை பொய்வழக்கு பதிவு செய்தது.

அதனைத் தொடர்ந்து முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கக்கூடிய நெல்பேட்டை பகுதியில் முஸ்லிம் இளைஞர்கள் மீது தொடர்ந்து பொய்வழக்கு போட்டுக் கொண்டிருக்கின்றது.

கடந்த 5.7.10 அன்று தென்காசி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தங்களுடைய வழக்கு வாயிதாவில் ஆஜராகிவிட்டு, காலை உணவு சாப்பிடுவதற்காக நெல்பேட்டை காயிதேமில்லத் பகுதியில் உள்ள ஒரு முஸ்லிம் ஹோட்டலுக்கு வந்த அந்த இளைஞர்கள் மீது மதுரை டவுன் காவல்துறை உதவி ஆணையாளர் வெள்ளைத்துரை மற்றும் விளக்குத்தூண் சிறப்பு சார்பு ஆய்வாளர் முத்துகுமார் ஆகியோர் பொய் வழக்கு புனைந்துள்ளனர்.

முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டிய மதுரை மாநகர் காவல்துறை ஒரு சார்பு தன்மையுடனும் பாரபட்சமாகவும் நடந்து முஸ்லிம்களின் அன்றாட வாழ்க்கைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றது. காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகளால் ஒவ்வொரு நாளையும் மதுரை வாழ் முஸ்லிம்கள் பாதுகாப்பு உணர்வற்று ஒருவித பயத்துடனேயே கழித்து வருகின்றார்கள்.

முஸ்லிம்கள் மீது மதுரை மாநகர காவல்துறை தொடர்ந்து புனைந்து வரும் பொய் வழ்க்கிற்கெதிராக போராட, சமுதாய நலனில் அக்கறையுள்ள முஸ்லிம் பெரியவர்கள், முஸ்லிம் இயக்கங்கள் ஆகியவை ஒன்றிணைந்து "முஸ்லிம்கள்
மீதான பொய் வழக்கிற்கெதிரான கூட்டமைப்பு" என்ற ஒரு பொதுவான கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,ஜம்இய்யிதுல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்(JAQH), சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா(SDPI), இந்திய தவ்ஹீத் ஜமாத், மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம், NCHRO, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில், நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்(NWF) ஆகியவை இக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

இக்கூட்டமைப்பின் சார்பாக ஏ.சி. வெள்ளைத்துரை மற்றும் விளக்குத்தூண் ஸ்பெஷல் எஸ்.ஐ. முத்துக்குமார் மற்றும் உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும்,மேற்படி பொய் வழக்கை வாபஸ் பெறுமாறும் கோரி இன்று (9/7/10) வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு நெல்பேட்டை அண்ணாசிலை அருகில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.முஹம்மது நஸ்ருதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் திரளாக கலந்து கொண்டனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகின்ற 12/7/2010 திங்கட்கிழமை அன்று தென்மண்டல ஐ.ஜி மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோரை சந்தித்து மனு அளிப்பது எனவும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.முஹம்மது நஸ்ருதீன் தெரிவித்தார்.

வியாழன், 9 ஜூலை, 2009

மதுரை தமுமுக அலுவலகத்தில் தீ விபத்து



மதுரை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அலுவலகம் மதுரை தெற்கு வாசலில் உள்ளது. இந்த அலுவலகத்தில் இன்று முற்பகல் சரியாக 3.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

இறைவனின் கிருபையால் இந்த தீ விபத்தில் எவ்வித அசம்பாவித சம்பவங்கள் ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்டதும் உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தரப்பட்டது. உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொது மக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் உடனே தீ அணைக்கப் பட்டது.

தமுமுக அலுவலகம் அருகே உள்ள கோழிக் கடையில் உள்ள ஒரு மின் இயந்திர கோளாறு காரணமாக மின் கசிவு ஏற்பட்டு இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

எனினும் மாவட்ட நிர்வாகிகள் சீனி, முகம்மது இப்னு, முபாரக் ஆகியோர் உடனே காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.

இச்சம்பவம் மதுரை தெற்குவாசல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.