திங்கள், 16 ஆகஸ்ட், 2010

பாப்புலர் ஃப்ரண்டின் சுதந்திர தின அணிவகுப்பில் அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்

ஆகஸ்ட் 15, 2010 சுதந்திர தினத்தினை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மேட்டுப்பாளையத்தில் சுதந்திர தின அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கு கொள்வதற்காக திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களின் ஆரவாரங்களுக்கிடையே மேட்டுப்பாளயத்தில் உள்ள மர்ஹும் மீரன் திடலில் சரியாக 3.00 மணியளவில் பரேட் லீடர் பக்ரூதீன் தலைமையில் 1000 வீரர்கள் கொண்ட அணிவகுப்பு தொடங்கியது. பேண்ட் வாத்தியங்கள் முழங்க அணிவகுப்பு வீரர்கள் கம்பீரமாக அணிவகுத்து சென்றனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தயாவின் மாநில தலைவர் மு.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மாலை 3.55க்கு கையில் இந்திய தேசிய கொடி ஏந்திய ஆபிஸர் அணிவகுப்பு நடைபெற்றது. 3.55 மணிக்கு பேண்ட் டெமோ நிகழ்ச்சியுடன் சுதந்திர தின அணிவகுப்பு நிறைவடைந்தது.

மாலை 4.00 மணிக்கு ஒற்றுமை கீதம் முழங்க பொதுக்கூட்டம் துவங்கியது. பொதுக்கூட்டத்தின் துவக்கமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத் தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

அவரைத் தொடர்ந்து மாநில தலைவர் முஹம்மது அலி ஜின்னா அவர்கள் சுதந்திர தின உறுதிமொழி மொழிந்தார் அதனை அனைவரும் வழி மொழிந்தனர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விண் டிவி “நீதியின் குரல்” முனைவர் சி.ஆர்.பாஸ்கரண் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.

அதன் பின்னர் மாநில பொதுச் செயலாளர் ஏ. அஹமது ஃபக்ரூதீன் அவர்கள் உரையாற்றினர் அவர் தனது உரையில் "நாம் வாழக் கூடிய இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர் நமது நாட்டை ஆக்கிரமித்து வைத்த சமயத்தில் அதனை எதிர்த்து போராடி, உரை நிகழ்த்தி, ஆர்ப்பாட்டங்கள் செய்து பல்வேறு நிகழ்வுகளை ஏற்படுத்தி சுதந்திரம் கிடைக்கப்பெற்றோம். அன்று இதனை செய்தவர்கள் ஆங்கிலேயர் பார்வையில் தீவிரவாதிகளாக பார்க்கப்பட்டனர்.

இன்று அவ்வாறு சுதந்திரம் கிடைக்க பெற்ற நமது இந்தியாவில் ஆளுகை, ஆட்சி, நீதி, கடமை என்ற பெயர்களில் அநியாயங்களும், ஊழலும் நிகழக்கூடிய சமயங்களில் அதனை சுட்டிக்காட்டி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துபவர்கள் அனைவரும் இவர்களின் பார்வையில் தீவிரவாதிகளாக பார்க்கப்படுகின்றனர்.

அதனிலும் முதன்மையாக இருப்பவர்கள் என்ற பெருமை பாப்புலர் ஃப்ரண்டுக்�கே உரித்தாகும். இந்த ரீதியில்தான் அண்மையில் பல சம்பவங்கள் நமக்கு எதிராக நடைபெற்று கொண்டிருக்கின்றன. இவை அனைத்திற்கும் பின்பு இருப்பது ஒரே சதிதான். அது ஃபாஸிசத்தால் உருவாக்கபட்டதேயாகும்.

அதனால் தான் அண்மையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆகஸ்ட் 9 அன்று இந்தியா அளவில் 'Save India Day' என்ற ஒரு பிரச்சாரத்தை கையிலெடுத்தது. அது “ஃபாஸிசத்தை எதிர்ப்போம், தீவிரவாதத்தை வேரருப்போம்" என கூறி இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளையும் அதற்கு பின்னால் இருக்கும் ஹிந்துத்துவ சதியை மக்களுக்கு தெரியும் வகையிலும் பிரச்சாரத்தை மேற்கொண்டோம்.

குண்டு வைத்தவனையெல்லாம் வீதியில் உலாவவிட்டு விட்டு இதனை கண்டிக்கக்கூடிய பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் மீது 153A சட்டத்தின் கீழ் தேசத்தில் அமைதியை குலைக்கிறார்கள் என்ற வழக்கை போடுகிறார்கள் என்றால் இவர்களை இயக்கும் அதிகாரத்தினர் யார்? என்ற கேள்வி எழுகிறது." என்று பேசினார்.

பின்னர் உரையாற்றிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலாளர் ஓ.எம்.ஏ.ஸலாம் அவர்கள் தனது உரையில் "நாட்டின் சுதந்திரத்தை காப்பதில் நமது உறுதிப்பாட்டை புதுப்பித்துக் கொள்வதற்கு சரியான நாள் இந்த சுதந்திர தின நன்னாள்.
நாம், இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் பிரிட்டிஷ் காலனி ஆதீக்க சக்திகளுக்கு எதிராக முன்பு போராடினோம். ஆனால் இன்று நம் தேசம் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது.

வெளியிலிருந்து அமெரிக்கா தலைமையிலான காலனி ஆதிக்க சக்திகளாலும் உள் நாட்டில் ஹிந்துத்துவ சக்திகளாலும் நாடு அச்சறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறது. முஸ்லிம்களும் தலித்துகளும் அச்சத்தினாலும் அடக்குமுறையாலும் தங்கள் அடையாளத்தை தொலைத்தும் வாழ்ந்து வருகின்றனர். அதிகார வர்கத்தினர் வேண்டுமென்றே இவர்களை நசுக்கி வருகின்றனர். அதிகாரத்தை விட்டும் இவர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

முஸ்லிம்களை வலிமைப்படுத்தும் முயற்சிகள் அரசாங்கத்திற்கு கவலையளிக்கிறது. பாப்புலர் பிரண்டிண் சுதந்திர கொண்டாட்டத்தை நடத்துவதை கூட தடுத்து நிறுத்த சில சக்திகள் முயற்சித்து வருகின்றது.

சமுதாயத்தை வலிமைப்படுத்தி இந்திய அரசியலின் மைய நீரோட்டத்தில் சங்கமிக்கச் செய்வதில் நாம் உறுதியுடன் உள்ளோம்.” என்று கூறினார்.

அதனை தொடர்ந்து நம் நாடு சுதந்திரமடைவதற்காக போராடிய சுதந்திர போராட்ட தியாகிகளான திரு.மாரியப்ப தேவர், ஜனாப். தஸ்தகீர் மற்றும் திரு. ஆறுமுகம் பிள்ளை ஆகியோர்களை கவுரவிக்கும் வண்ணம் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

வின் டிவி “நீதியின் குரல்” முனைவரான திரு. சி.ஆர்.பாஸ்கரன் அவர்களுக்கு மாநில தலைவர் முஹம்மது அலி ஜின்னாவும், மூத்த வழக்கறிஞர் மற்றும் தேசிய மனித உரிமை இயக்கங்களின் கூட்டமைப்பு (NCHRO) தலைவரான பவானி பா.மோகன் அவர்களுக்கு மாநில பொதுச் செயலாளர் அஹமது ஃபக்ரூதீனும் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கினார்கள். அதனை தொடர்ந்து வின் டிவி திரு சி.ஆர்.பாஸ்கரன் சிறப்புரையாற்றினார்கள்.

முடிவில் 5.45க்கு பாப்புலர் ஃப்ரண்டிண் கோவை வடக்கு மாவட்ட தலைவர் ஏ.எஸ்.ஷபிக் அவர்கள் நன்றி கூறினார்.மாலை 5.50க்கு தேசிய கீதம் இசைக்க நிகழ்ச்சி நிறைவுற்றது அதனைத் தொடர்ந்து நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

கருத்துகள் இல்லை: