திங்கள், 2 ஆகஸ்ட், 2010

கஷ்மீர் பற்றி எரிகிறது:மேலும் 8 பேர் மரணம்

ஸ்ரீநகர்/புதுடெல்லி,ஆக1:போராட்டம் வலுவடைந்துள்ள கஷ்மீரில் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டிலும், குண்டுவெடிப்பிலும் ஒரு பெண் உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர். இத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. சனிக்கிழமை போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். இதனைக் கண்டித்து பாம்போரில் தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நயீம் அஹ்மத் ஷாவும், ரயீசும் மரணமடைந்தனர். இன்னொரு இடத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பதினேழு வயது அஃப்ரோஸ் என்ற பெண் கொல்லப்பட்டாள்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பிரதேச காவல்நிலையத்தை போராட்டக்காரர்கள் தீவைத்தனர். தொடர்ந்து குண்டுவெடிப்பும் நிகழ்ந்தது. இதில் ஐந்துபேர் கொல்லப்பட்டு ஏராளமானோருக்கு காயமும் ஏற்பட்டது.

போலீஸ் ஸ்டேசனில் பாதுகாத்து வைத்திருந்த வெடிப்பொருள் வெடித்ததில்தான் விபத்து ஏற்பட்டதாக போலீஸ் தெரிவிக்கிறது.

போராட்டக்காரர்களால் தீவைத்துக் கொழுத்தப்பட்ட போலீஸ் ஸ்டேசனிலிருந்த போலீஸ்காரர்களை ராணுவம் வந்து காப்பாற்றிய பின்னரே கடுமையான குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் தடைகளை ஏற்படுத்தினர். கலந்தர், கட்லபல், பர்சு, ப்ரஸ்தாபால், ஆகிய இடங்களிலும் பொதுமக்கள் சாலையை மறித்தனர்.

ஒரு தாசில்தாரின் வீடும், அலுவலகமும் தீவைத்துக் கொழுத்தப்பட்டது. ஒரு போலீசு வாகனம் தீவைத்துக் கொழுத்தப்பட்டு ஏராளமான வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

அனந்த்நாக், ஸ்ரீநகர், பாரமுல்லா, குல்கம், புட்கம், பந்திப்போரா, கண்டேர்பால், ஷோபியான், புல்வாமா ஆகிய 9 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குப்வாரா மாவட்டத்தில் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை போலீஸ் பொதுமக்களை நோக்கி துப்பாக்கி குண்டுமழை பொழிந்ததில் இரண்டுபேர் கொல்லப்பட்டிருந்தனர். தெற்கு கஷ்மீரில் அமர்கட், கக்போரா உள்ளிட்ட பகுதிகளில் போராட்டக்காரர்கள் போலீசாருடன் மோதினர். பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியை தழுவியதால் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக போலீஸ் செய்தித்தொடர்பாளர் தெரிவிக்கிறார்.

இதற்கிடையே ஜம்மு கஷ்மீர் விவகாரத்தை பிரதமர் அலுவலகம் நேரிடையாக கையாள வேண்டும் என ஜம்மு-கஷ்மீர் நேசனல் பேந்தர்ஸ் பார்டி வலியுறுத்தியுள்ளது.

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய் செய்ததுபோல் கஷ்மீர் விவகாரத்தை மன்மோகன்சிங் நேரிடையாக கையாள வேண்டும் என்பது அக்கட்சியின் கோரிக்கையாகும்.

கஷ்மீரில் நிலைமை மோசமடைந்துள்ளதைத் தொடர்ந்து பிரதமர் தலைமையில் பாதுகாப்பிற்கான அமைச்சரவை மீண்டும் கூடி நிலைமைகளை விவாதித்தது. ஒரு மாதத்திற்கிடையே இது இரண்டாவது முறையாக பாதுகாப்பிற்கான அமைச்சரவை கூடியுள்ளது.

கஷ்மீரிலிருந்து வந்துள்ள உளவுத்துறை தகவல்களையும், அரசியல் கட்சிகளின் கோரிக்கையையும் இக்கூட்டம் விவாதித்தது. கஷ்மீர் அமைப்புகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்ற கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ்வின் கோரிக்கையையும் அமைச்சரவை விவாதித்தது.

வேலைவாய்ப்பில்லாமலிருக்கும் பழைய போராளிகள்தான் போலீசார் மீது கல்லெறிவதாக உளவுத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்,பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். கஷ்மீர் சூழலை குறித்து கூட்டத்தில் விவரித்தார் உள்துறை அமைச்சர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: