செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

அரசுத்துறை நிறுவனங்களில் சிறுபான்மையினர் கணக்கெடுப்பு: மத்திய அரசு பரிசீலனை

புதுடெல்லி,ஆக2:அரசுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் சிறுபான்மையினரை கணக்கெடுப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியின் போது மத்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இதைத் தெரிவித்தார்.

இந்தியாவில் சிறுபான்மையினராகக் கருதப்படும் முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், புத்தமதத்தைச் சேர்ந்தோர், பார்சிஸ் ஆகியோருக்கு அரசுத் துறை நிறுவனங்களில் போதிய வாய்ப்பளிக்கப்படுவதில்லை என்ற பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 20 முஸ்லிம் எம்.பி.க்கள், சிறுபான்மை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்தித்து அரசுத் துறை நிறுவனங்களில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுவதாகப் புகார் தெரிவித்தனர்.

மேலும் அரசுத் துறை நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு உரிய வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து சல்மான் குர்ஷித்திடம் பிடிஐ செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சல்மான் குர்ஷித்,"எம்.பி.க்களின் கோரிக்கையில் எவ்விதத் தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை" என்றார்.

"அதேசமயம் அரசுப் பணிகளில் சிறுபான்மையினர் புறக்கணிப்படுகிறார்கள் என்பதை ஏற்க முடியாது. கடந்த சில ஆண்டுகளாக அரசுப் பணிகளில் சேரும் சிறுபான்மையினர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த நிதி ஆண்டில் மட்டும் அரசுத் துறைகளில் 9.5 சதவீதம் சிறுபான்மையினர் பணியில் சேர்ந்துள்ளனர்.இதை 15 சதவீதமாக உயர்த்துவதே அரசின் நோக்கம் என்றார்" சல்மான் குர்ஷித்.

"அரசு நிறுவனங்களில் பணிபுரியும் சிறுபான்மையினரை கணக்கெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதை அரசு கவனத்தில் கொண்டு பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்" என்றும் அவர் தெரிவித்தார்.

நீங்கள் ஆதரிக்கிறீர்களா? அரசு நிறுவனங்களில் பணிபுரியும் சிறுபான்மையினரை கணக்கெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை உங்கள் அமைச்சகம் ஆதரிக்கிறதா என்று கேட்டதற்கு,"முதலில் அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.பின்னர்தான் அதை ஆதரிப்பதா, கூடாதா என்பதை முடிவு செய்ய முடியும்" என்றார்.

பல மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு அரசு வங்கிகளில் கடன் கிடைப்பது கடினமாக உள்ளதாக சிறுபான்மையினருக்கான தேசிய கமிஷன் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதே என்று கேட்டதற்கு, "இது எனது கவனத்துக்கு வந்துள்ளது.இதுகுறித்து நிதி அமைச்சரிடம் விவாதிக்கவுள்ளேன்" என்றார் சல்மான் குர்ஷித்.

கருத்துகள் இல்லை: