புதன், 4 ஆகஸ்ட், 2010

கஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு: மேலும் 7 பேர் மரணம்

ஸ்ரீநகர்,ஆக4:கஷ்மீரில் பல நாட்களாக தொடரும் வன்முறைக்கு இதுவரை ஓய்வு ஏற்படவில்லை.பல்வேறு இடங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மேலும் 7 பேர் நேற்றுக் கொல்லப்பட்டனர்.

கல்வீச்சில் ஏராளமான போலீசாருக்கும், துணை ராணுவப் படையினருக்கும் காயம் ஏற்பட்டது. இதற்கிடையே ஸ்ரீநகரில் வன்முறையாளர்களை கண்டால் சுட உத்தரவிட்டுள்ளதாக ஒலிபெருக்கி மூலம் போலீஸ் மக்களை அறிவித்துள்ளது.

ஸ்ரீநகர், பட்கம், பந்திபோரா, அவாதிபோரா, குல்காம், பாராமுல்லா, சோப்பூர் ஆகிய இடங்களில் ஊரடங்கு உத்தரவை மீறி போராட்டத்தில் இறங்கிய மக்கள் பாதுகாப்பு படையினர் மற்றும் துணை ராணுவப்படையினர் மீது கடுமையான கல்வீச்சில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் அரசு வாகனங்கள் மற்றும் போலீஸ் முகாம்கள் மீது தாக்குதல் நடந்தது.

மிஹ்ராஜ் அஹ்மத் லோன்(வயது 25)துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர். கமர்வாரியில் போராட்டம் நடத்தியவர்களை கலைந்துச் செல்ல போலீஸ் உத்தரவிட்டதை மறுத்ததால் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மிஹ்ராஜ் கொல்லப்பட்டுள்ளார்.

ஈத்கா மைதானத்தில் கொந்தளிப்பிலிருந்த மக்களை கலைந்து செல்ல போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அனீஸ் குர்ஷித் என்பவர் கொல்லப்பட்டார். குல்காமில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மற்றொருவர் கொல்லப்பட்டார். இவர் யார் என அடையாளம் காணப்படவில்லை. நேற்று முன் தினம் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து சிகிட்சைப் பெற்றுவந்த ரியாஸ் அஹ்மதும் நேற்று மரணமடைந்தார். போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் நேற்று மூன்றுபேருக்கு காயமேற்பட்டுள்ளது. இத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் துவங்கிய வன்முறையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

கர்ஃபாலி மொஹல்லா, ஃபதஹ்கடல் ஆகிய இடங்களில் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் எவருக்கும் பாதிப்பில்லை. குல்காமில் போலீஸ் முகாமை கொழுத்திய பொதுமக்கள் போலீஸ் அதிகாரி மீதும் தாக்குதல் நடத்தினர்.

பல இடங்களிலும் இந்தியா எதிர்ப்பு கோஷங்கள் முழங்கவே போராட்டங்கள் இரவிலும் தொடர்ந்தன. சோப்போரில் தாலுகா அலுவலகமும், பமீயில் போலீஸ் முகாமும் தீவைத்துக் கொழுத்தப்பட்டன. இதற்கிடையே கஷ்மீருக்கு கூடுதல் துணை ராணுவப்படையினரை அனுப்ப மத்திய அரசு முடிவுச்செய்துள்ளது. ஜம்முவிலிருந்த 32 கம்பெனி(3200) துணை ராணுவப்படையினரை கஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு ஏற்கனவே அனுப்பியுள்ளது மத்திய அரசு.

ஜம்மு கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கஷ்மீர் பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வுதான் தேவை என்று உமர் அப்துல்லாஹ் குறிப்பிட்டது தற்போதைய பிரச்சனைகள் வெறும் சட்ட-ஒழுங்கு பிரச்சனை இல்லை என்பதை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது. ஆனால் ராணுவத்தை அனுப்புவதற்கான தீர்மானம் கஷ்மீர் பிரச்சனையை மேலும் சிக்கலுக்குள்ளாக்கும். இன்னும் ஓரிரு தினங்களில் 19 கம்பெனி(1900) ராணுவத்தினர் கஷ்மீர் செல்வர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: