செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

ஃபிடல் காஸ்ட்ரோவின் எச்சரிக்கை

ஆக,10:நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கடுமையான நோய்களுடன் போராடுவதற்கு கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ பொது வாழ்க்கையிலிருந்து விலகியபொழுது மீண்டும் அவர் திரும்பிவருது கடினம் என்றே பலரும் கருதியிருந்தனர். அரை நூற்றாண்டிற்கு முன்பு அமெரிக்காவின் மூக்கிற்கு கீழே ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்திற்கு துணிச்சல் மிக்க படையை உருவாக்கிய காஸ்ட்ரோ பின்னர் ஒருபோதும் தனது முடிவில் எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்கவில்லை.

அதனால்தான், பலகாலமாக அமெரிக்க ஆட்சியாளர்களுக்கும், சி.ஐ.ஏவுக்கும் கண்ணில் விரல்விட்டு ஆட்டிக்கொண்டிருந்தார் இந்த தீரமிக்க புரட்சியாளர்.

உலக சமூகத்தை அதிர்ச்சியடையச் செய்யும் வகையில் காஸ்ட்ரோ மீண்டும் பொதுவாழ்க்கைக்கு திரும்பியுள்ளார். வயது அவருடைய புரட்சியின் வீரியத்தை சற்றும் குறைத்திடவில்லை.

நேற்று முன் தினம் கியூபா பாராளுமன்றத்தில் அவர் நடத்திய உரையினை உலக முழுவதுமுள்ள ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகள் ஆவேசத்துடன் கேட்டனர். இன்றைய சிக்கல்கள் மிகுந்த உலக சூழலில் காஸ்ட்ரோவின் வார்த்தைகளுக்கு மிக்க மதிப்புள்ளது.

ஈரானுக்கெதிராக அமெரிக்க நடத்திவரும் பொருளாதார தடைகளும், ராணுவ முன்னேற்பாடுகளும் ஈரானை தோல்வி அடையச்செய்யாது, மாறாக அமெரிக்காவின் வீழ்ச்சிக்கு இது வழிவகுக்கும் என காஸ்ட்ரோ எச்சரிக்கை விடுத்தார்.

அமைதியான முறையில் அத்தியாவசிய தேவைகளுக்காக அணுசக்தியை மேம்படுத்த ஈரான் நடத்திவரும் முயற்சிகளுக்கு தடைப்போடுவது என்ற பெயரில் உலகில் மீண்டும் ஒரு அணு ஆயுத போருக்கு வழிவகுக்கத்தான் அமெரிக்காவும்,இஸ்ரேலும் சேர்ந்து முயல்வதாக காஸ்ட்ரோ சுட்டிக்காட்டினார்.

அத்தகையதொரு போர் ஈரானோடு மட்டும் ஒதுங்கிவிடாது. மாறாக, அப்போர் மேற்காசியாவிலும், பின்னர் ஐரோப்பாவிலும் பரவும். அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும்.

தற்போதைய உலக கட்டமைப்பு முற்றிலும் வீழ்ச்சியை சந்திக்கும் வகையிலான சூழலுக்கு இத்தகைய பைத்தியக்காரத்தனமான கொள்கைகள் தள்ளும் என உலகத்திற்கு காஸ்ட்ரோ எச்சரிக்கை விடுத்தார்.

காஸ்ட்ரோவின் எச்சரிக்கை அமெரிக்கா அதிபர் ஒபாமாவை குறிவைத்து விடுக்கபட்டதாகும். உலகை அழிவுக்குக் கொண்டுசெல்லும் முயற்சிகளிலிருந்து விடுபடவேண்டும் என காஸ்ட்ரோ ஒபாமாவை வலியுறுத்தினார்.

அமெரிக்காவின் கடந்த கால நிலைப்பாடுகளும், ஈராக்கிலும், ஆஃப்கானிலும் இன்னும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் இன்றுவரை நடத்திவரும் ஆக்கிரமிப்பு போர்களின் வரலாற்றை உற்றுநோக்கினால் அந்த நாடு ஒருபோதும் நேரான வழியில் செல்லமுடியாது என்பதை உறுதிச்செய்ய இயலும்.

ஆனால் ஏகாதிபத்தியம் சுயமாக தோண்டிய குழியிலிருந்து எளிதாக கரையேற முடியாது. இந்த அனுபவங்களை முன்னிறுத்தி, உலகில் மீண்டும் ஒரு அணு ஆயுத போர் நடக்க வழி வகுக்காதீர்கள் என்ற காஸ்ட்ரோவின் எச்சரிக்கை முற்றிலும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். அதுதான் தற்காலத்தில் அமைதியை விரும்புவோரின் குரலாகும்.

விமர்சகன்

கருத்துகள் இல்லை: