திங்கள், 16 மார்ச், 2009

திமுகவுடன் மனித நேய கட்சி இன்று பேச்சு.

சென்னை: திமுகவுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்திவிட்டு கூட்டணி குறித்து இறுதி முடிவு செய்வோம். நாங்கள் திமுகவுடன் இருக்கத் தான் விரும்புகிறோம். ஆனால், எங்களுக்கு நியாயமான இடப் பங்கீடு தேவை. ஒரு சீட் தந்து ஏமாற்றும் திட்டத்துக்கு எல்லாம் அடிபணிய மாட்டோம் என்று மனித நேய மக்கள் கட்சி கூறியுள்ளது.

தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் கட்சியான மனித நேய மக்கள் கட்சியின் தேர்தல் நிலை விளக்கப் பொதுக்கூட்டம் மண்ணடியில் நடந்தது.

இதில் பேசிய கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி,

முஸ்லிம்களை இனி யாரும் ஏமாற்ற முடியாது. ஒரு சீட் கலாசாரம் எல்லாம் முடிந்துவிட்டது. தமிழகத்தில் 75 லட்சம் முஸ்லிம்கள் உள்ளனர். அவர்களுக்கு உரிய அரசியல் பங்கு இதுவரை தரப்படவில்லை. வரும் லோக்சபாத் தேர்தலில் அது சரி செய்யப்பட வேண்டும்.

முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக, தேமுதிக ஆகியவை எங்களுக்கு கூட்டணி அழைப்பு விடுத்துள்ளன. தமிழகத்தில் திமுக, அதிமுக உள்பட எந்தக் கட்சியும் இனி எங்களைத் தவிர்த்துவிட்டு, அரசியல் செய்ய முடியாது.

திமுகவுடன் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். செவ்வாய்க்கிழமை நிர்வாகக் குழு கூடி, கூட்டணி குறித்து இறுதி முடிவு செய்யப்படும். நாங்கள் திமுகவுடன் இருக்கத் தான் விரும்புகிறோம். ஆனால், எங்களுக்கு நியாயமான பங்கீடு தேவை.

ஒரு சீட் தந்து ஏமாற்றும் வேலைக்கு எல்லாம் அடிபணிய மாட்டோம். எங்களின் அரசியல் வியூகம் பின்னர் வேறு மாதிரியாக இருக்கும் என்றார்.

இதற்கியையே லோக்சபா தேர்தல், அதி்ல் முஸ்லிம்களின் பங்கு, அமைக்க வேண்டிய கூட்டணி ஆகியவை குறித்து சென்னையில் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் இஸ்லாமிய கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகளின் கூட்டம் நடந்தது.

அதில் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் ஹாருண் ரஷீத், முஸ்லிம் லீக் சார்பில் அப்துல்லா, ஜமாத் உலாமாக்கள் தலைவர் தர்வீஸ் ரஷாதி, மக்கள் ஜனநாயக கட்சி, சமூக நீதி அறக்கட்டளை, இந்திய தேசிய மக்கள் கட்சி, மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் உள்பட பல அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பல பிரிவாகப் பிரிந்து கிடக்கும் இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து இணைந்து செயல்படுவது, தேர்தலில் முஸ்லிம்களுக்கு அதிக சீட்டுகள் ஒதுக்கும் அணியுடன் கூட்டணி அமைப்பது என்று அதில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: