வியாழன், 26 மார்ச், 2009

அரசியல் சுழற்சிகளை எதிர்கொள்வோம்... ம.ம.க அறிவிப்பு.

அரசியல் சுழற்சிகளை எதிர்கொள்வோம்...


கடந்த மார்ச் 20 அன்று சவூதி தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் தாயகத்திலிருந்தபடியே ம.ம.க. துணைப் பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி தொலைபேசியில் உரையாற்றினார். அவரது உரையிலிருந்து...


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடை யோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் தொடங்குகிறேன். பாசத்திற்குரிய மனிதநேய சொந்தங்களே... அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)


தேசத்தின் எல்லைக் கோடுகள் பிரிந்தாலும், உணர்வுகளால் தாய் மண்ணோடு ஒன்றி வாழும் உங்களிடம் அலைபேசியில் விஞ்ஞான தொழில்நுட்பத்தின் உதவியில் பேசுவதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


இன்று வெள்ளிக்கிழமை. அரபு நாடுகள் எங்கும் விடுமுறை தினம். வாரம் முழுக்க உழைத்துவிட்டு இந்த ஒருநாள்தான் ஓய்வையும், மகிழ்ச்சியையும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கிறது. உங்களில் பலர், பலர் என்று சொல்வதை விட அனைவருமே இந்தியாவில் உள்ள உங்கள் பெற்றோரோடு, மனைவியோடு பிள்ளைகளோடு, உடன் பிறப்புகளோடு தொலைபேசியில் பேசி மகிழ்ந்திருப்பீர்கள். அவர்களது கரங்களைத் தொட்டுப் பிடித்து நெஞ்சார கட்டி மகிழ முடியாத வருத்தம் இருந்தாலும், குரலையாவது கேட்டு மகிழ முடிகிறதே என்ற ஒரு சிறு மகிழ்ச்சியில் இன்று திளைப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும், நன்றாகவே புரியும்.


காரணம் எனது குடும்பத்திலும் பெரும்பாலான ஆண்கள் வெளிநாடுகளில் வாழ்வதால் அதன் வலியை என்னால் உணர முடியும். இன்று ஜும்ஆ தொழுகையில் நீங்கள் உங்கள் உறவினர்களை சந்தித்திருப்பீர்கள். ஊர் செய்திகளை பரிமாறிக் கொண்டிருப்பீர்கள். நன்றாக மதியம் உறங்குவீர்கள். இப்படி வெள்ளிக்கிழமை விடுமுறையை நீங்கள் அனுபவிக்கும் இத்தருணத்தில், சமுதாய உணர்வோடு தாய்நாட்டின் மீதான நேசத்தோடு ஓரிடத்தில் எமது உரையை கேட்பதற்காக கூடியிருக்கிறீர்கள் என்றால், அதுதான் நமது கொள்கை உணர்வு. உணர்வு மட்டுமல்லாமல் நம்மை இணைக்கும் உறவும் அதுதான் என்றால் அது மிகையாகாது.


அன்பார்ந்த சொந்தங்களே... நமது தாய்க்கழகம் தமுமுக கடந்த 14 ஆண்டு காலமாக நம்மை பக்குவப் படுத்தி, அரசியல் எனும் பெருநதியில் நீச்சலடிக்க அனுப்பி வைத்திருக்கிறது. அது சாதாரண நீச்சல் அல்ல... எதிர்நீச் சல்.... அந்த எதிர்நீச்சலில் எப்படி நீந்தப் போகிறோம், எதையெல்லாம் எதிர்கொள்ளப் போகிறோம். அரசியல் சுழற்சிகளையும், சூழ்ச்சிகளையும் எப்படி தாக்குப்பிடிக் கப் போகிறோம் என்பதை நீங்களெல்லாம் கடல்தாண்டி கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள்.


குப்பைகள் நிறைந்து, முடை நாற்றமடிக்கும் அரசிய­ல் இறையருளால், ஈமானிய உறுதியோடு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் நாங்கள் களமிறங்கி யுள்ளோம். இன்று மனிதநேய மக்கள் கட்சி தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலங்களில் மாபெரும் சக்தியாக உரு வெடுத்துள்ளது. (அல்ஹம்துலில்லாஹ்...)


கூட்டணியில் நாம் இடம்பெற்றால் ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் 25 ஆயிரம் முதல் 3 லட்சம் வரை கூடுதல் வாக்குகளைப் பெற்று யாரும் வெற்றிபெற முடியும். சில தொகுதிகளில் 25 ஆயிரம், சில தொகுதி களில் 50 ஆயிரம், சில தொகுதிகளில் 75 ஆயிரம், சில தொகுதிகளில் 1 லட்சம் என நமது வாக்குகள் பரவிக் கிடக்கிறது. எட்டு தொகுதிகளில் இரண்டு லட்சம் தொடங்கி மூன்று லட்சம் வாக்குகள் வரை கொட்டிக் கிடக்கிறது.


இந்த வாக்கு வங்கியை முஸ்லிம்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் மற்ற கட்சிகள் ஆசை வார்த்தைகளை வீசியே அறுவடை செய்து கொண்டார்கள். நமது தோளில் ஏறி ஆட்சியைப் பிடித்தார்கள். அமைச்சர் பதவிகளை அடைந்தார்கள்.


நாமோ வாக்களித்தவுடன், வழக்கம் போல் நமது வேலையைப் பார்க்க போய்விட்டோம். இனி அது நடக்காது. பிறருக்காக தேர்தல் வேலைகளைப் பார்த்தோம். சொந்த காசை செலவழித்தோம். சுவர்களில் விளம்பரங் களை செய்வதற்காக சண்டை போட்டோம். வீட்டு வேலைகளை போட்டு விட்டு வெயி­ல் திரிந்தோம். வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தோம். தேர்தல் நாளன்று அடிதடிகளையும், வழக்குகளையும் எதிர்கொண்டோம்.


ஆனால், அதிகாரத்தை மட்டும் அடையாமல், அமைதியாக ஓரங்கட்டப்பட்டோம். அந்த பைத்தியக்காரத்தனத்திலிருந்து இப்போது விடுபட்டிருக்கிறோம்.


எங்களுக்கும் அரசியல் மரியாதை தேவை என எழுந்துவிட்டோம். எட்டு தொகுதிகளில் ஆறு தொகுதி களை அடையாளம் காட்டி, குறைந்தது மூன்று அல்லது இரண்டு தொகுதிகளாவது தாருங்கள் என கேட்கிறோம், அடம்பிடிக்கிறோம்.


இதை நமது கட்சியினரும், சமுதாய மக்களும், பிற இன மக்களும் வரவேற்கிறார்கள், பாராட்டுகிறார்கள். உறுதியாக நில்லுங்கள் என ஆதரவு தருகிறார்கள். நாம் நிலைகுலைய மாட்டோம். வஞ்சக சதிக்கு ப­யாக மாட்டோம்.


நாம் உறங்கும்போது மட்டுமே, நமது நெற்றியில் துப்பாக்கிகளை நீட்ட முடியும். அரசியலில் தூங்கும் போது கூட கால்களை ஆட்டிக் கொண்டே தூங்கினால் தான், பாதுகாப்பாகத் தூங்க முடியும். இல்லையென்றால், இறந்துவிட்டான் என்று கூறி அடக்கம் செய்து விடுவார் கள். அவ்வளவு மோசமானது அரசியல். அதுவும் தமிழக அரசியல் மிக மோசமானது.


எனவே நாம் ஒரு தொகுதியை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்த­ல் ஏற்பதாக இல்லை. இன்னும் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளோம். பொறுமை இழக்க மாட்டோம். வேறு வழியில்லை எனில், எதிர் வீட்டுக்காரரோடு பேசுவோம். அதுவும் திருப்தியில்லையெனில், தனித்துப் போட்டியிடுவோம். தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளில் நமது முழு ஒத்துழைப்பையும் காட்டும் வகையில் போட்டியிடுவோம்.


இதனால் நமக்கு இழப்பு வரும். ஆனால், நமது பலத்தை உணராமல் நம்மை மதிக்காதவர்களுக்குத்தான் 15 தொகுதிகளிலாவது பேரிழப்பு ஏற்படும் என்பதை எதிர்காலம் உணர்த்தப் போகிறது.


நாம் இப்போது வெற்றி பெறாவிட்டாலும், வாக்குகளை பிரிப்போம். அது எதிர்காலத்திற்கு உதவும். நமது பேரம் பேசும் வ­மை கூடும். காரணம் நமது கட்சி பொதுவானது. முஸ்லிம்களின் பின்புலத்தில் இயங்கினாலும், அது அனைத்து மத,இனி சாதி மக்களின் ஆதரவைப் பெற்றது. அனைவருக்கும் தொண்டாற்றக் கூடியது.


நமது தாய்க்கழகத்தின் சேவைகளால் ஈர்க்கப்பட்ட அனைத்து மத மக்களும் நமக்கு வாக்களிப்பார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. எனவே அன்பார்ந்த சொந்தங்களே... நம்பிக்கைதான் வாழ்க்கை. அந்த நம்பிக் கையோடு எங்களுக்காக பிரார்த்தியுங்கள். தாயகத்தில் உள்ள உங்களின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இந்த நம்பிக்கையை, செய்தியை தெரிவியுங்கள்.


அங்கே பணியாற்றிக் கொண்டிருக்கும், அல்லும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கும் சகோதர அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் நமது உறுதியை செய்தியைச் சொல்லுங்கள். அவர்களோடும் நட்பு பாராட்டுங்கள் என்று கூறி, நாடு விட்டு நாடு வாழும் நமக்கிடையே இந்த உரையாற்றும் வாய்ப்பைத் தந்த இறைவனுக்கு நன்றி கூறி நிறைவு செய்கிறேன். நன்றி

கருத்துகள் இல்லை: