திங்கள், 16 மார்ச், 2009

தமிழ் அழிந்து வருகிறது: கவிக்கோ அப்துல்ரகுமான்

வெளிநாட்ட்டில் வாழும் தமிழர்கள் தமிழை வாழவைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில்தான் தமிழ்மொழி அழிந்து வருகிறது என்று கவிக்கோ அப்துல்ரகுமான் கூறியுள்ளார்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அயல்நாட்டு தமிழ்க் கல்வித்துறை மற்றும் சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய மலேசியத் தமிழாசிரியர்களுக்கான செம் மொழித் தமிழ்ப் பயிற்சி, பணிப்பட்டறை நிறைவு விழா நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய கவிக்கோ அப்துல்ரகுமான்,

தமிழர்களாகிய நாம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு வாழ வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். தமிழகத்தில்தான் தமிழ்மொழி அழிந்து வருகிறது. வளைகுடாவுக்குச் சென்ற தமிழர்களும், இலங்கைக்குச்சென்ற தமிழர்களும் தமிழை வாழவைத்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழ் மொழியின் சிறப்புக்களை, தமிழ் மொழி இலங்கியங்களின் சிறப்புக்களையும் சீனர்களுக்கும், மலேசிய மக்களுக்கும் எடுத்துச்சொல்ல வேண்டிய கடமை மலேசிய தமிழர்களுக்கு உள்ளது.

தமிழர்கள் பண்பாட்டில் மட்டுமல்ல கலைச்சொற்கள் உருவாக்கத்திலும் சிறந்தவர்கள். உலகில் இன்று 70க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் வசிக்கிறார்கள். இது நமக்கு பெருமை. உலகில் தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி என்பதற்கான சான்றுகள் உள்ளன. மொழிக்கான நோபல் பரிசு கிடைக்கச்செய்வது மலேசிய தமிழர்களிடம்தான் உள்ளது. எனவே, மொழி மற்றும் மனிதன் தோன்றியதற்கான கூறுகளை ஆராய்ந்து வெளிப்படுத்துங்கள் என்றார்.

இதில் எண்பேராயம் உறுப்பினர் சிலம்பொலி செல்லப்பன், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் ராஜேந்திரன், மலேசிய இந்திய ஆய்வியல்துறைத் தலைவர் குமரன், பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) கார்த்திகேயன் உள்பட மலேசிய தமிழ் ஆசிரியர்கள் 60 பேர், பல்கலைக்கழக பேராசிரியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை: