திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சி புதிதாய் பிறந்த மனித நேய மக்கள் கட்சி. தங்களுக்கு 6 சீட்டுக்கு ஒரு சீட் கூட குறையாமல் ஒதுக்க வேண்டும். இல்லாவிட்டால் கூட்டணியை விட்டு விலகி விடுவோம் என அக்கட்சி கூறியிருந்தது.
ஆனால் ஒரு சீட்டுக்கு மேல் ஒரு சீட் கூட ஒதுக்க முடியாது என திமுக கூறி விட்டது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக்குக்கே திமுக ஒரு சீட்தான் ஒதுக்கியுள்ளது.
மனித நேயக் கட்சி தங்களுக்கு கூடுதலாக சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த நேரத்தில் தொகுதிப் பங்கீட்டை முடித்து அதை அறிவித்தும் விட்டார் கருணாநிதி.
இதனால் மனித நேய மக்கள் கட்சி அதிர்ச்சி அடைந்தது. இதனால் அடுத்து என்ன செய்வது என்ற ஆலோசனையில் அக்கட்சித் தலைவர்கள் உள்ளனர்.
நேற்று மாலை ஐந்தரை மணிக்கு கட்சியின் நிலை குறித்து அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இரவு வரை எந்த முடிவும் எட்டப்படவில்லை.
பின்னர் இது குறித்து கட்சியின் மாநில துணை பொது செயலாளர் அன்சாரி கூறுகையில், காலையில் இருந்து எங்கள் கட்சியின் உயர்மட்ட குழுவினர் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்திவருகின்றனர்.
தி.மு.க., அ.தி.மு.க.வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் இருக்கும் மாவட்ட தலைவர்களிடமும் கட்சியின் நிலை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றார்.
இன்றைக்குள் இறுதி முடிவை எடுக்க அக்கட்சி தீர்மானித்துள்ளதாகவும் அன்சாரி தெரிவித்தார்.
மனித நேயக் கட்சி திமுக கூட்டணிக்கே ஆதரவு தெரிவிக்க வேண்டும். அங்கேயே இருக்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத், அக்கட்சியினரைக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் குறைந்தது 2 சீட்களாவது தர வேண்டும் என கோரி வருகிறதாம் மனித நேய மக்கள் கட்சி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக