புதன், 25 மார்ச், 2009

நாடு NRI க்களுக்கு என்ன செய்தது?

நம்நாட்டு அன்னியச் செலாவணி இருப்பை கணிசமான அளவில் உயர்த்தியதில் NRI க்களின் பங்கு முக்கிய இடத்தை வகிக்கிறது.

எந்த ஒரு நாட்டிற்கும் சர்வதேச வர்த்தகத்தில் அன்னியச் செலாவணிக் கையிருப்பு முக்கியப் பங்காற்றுகிறது. போக்ரான் அணுகுண்டு சோதனையால் கடுப்படைந்த அமெரிக்கா நம்நாட்டின் மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்த போதும் நமது பொருளாதாரம் சீர்குழையாமல் காத்ததும் NRI க்களே!

அரசியல்வாதிகளின் நாற்காலிச் சண்டைகள், கட்சித்தாவல், ஆட்சிக் கவிழ்ப்பு போன்ற எதைப் பற்றியும் கவலைப்படாமல் கடமையே கண்ணென பணியாற்றி குருவி சேர்ப்பது போல் சிறுகச்சிறுக பணம் சேர்த்தாலும், NRI க்களின் சேமிப்புக்களுக்கு இருந்த மவுசு வங்கிகளிடம் வெகுவாகக் குறைந்து விட்டது.

மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் NRI க்கள் வங்கிகள் மூலம் அனுப்பும் பணத்தை வங்கிக்கணக்கிலிருந்து எடுப்பதற்கும் வரி விதித்து மக்களின் கடும் அதிருப்திக்கு ஆளானார். நாட்டின் பொருளாதாரத்தில் பெரும்பங்கு வகிக்கும் NRI க்களில் ஓரிருவரை ஆண்டுக்கு ஒருமுறை டெல்லியில் விழா நடத்தி ஜனாதிபதி கையால் விருது வழங்குவதோடு சரி.

கோடிக்கணக்கான NRI க்களின் அவலங்களைக் கண்டு கொள்வதே இல்லை. வெளிநாட்டு இந்திய தூதரகங்களில் இந்தியர்களுக்குக் கிடைக்கும் மரியாதையே தனி.

துபாய் போன்ற பெருநகரங்களில் தூதரகச் சேவைகளுக்காக வெயிலில் காத்திருப்பவர்களைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கும். இவையெல்லாம் ஒருபுறமிருக்க, நம்நாட்டுப் பணமதிப்பு உயரும்போதும் நிச்சயமாக NRI க்கள் சந்தோசப்படமாட்டார்கள். பணமதிப்பு உயர்ந்தாலும் விலைவாசியும் சேர்ந்து உயர்வதால் அனுப்பும் பணத்தின் மதிப்பு NRI க்களைப் பொருத்த மட்டில் யாருக்கோ செல்கிறது.

இந்தியப் பணம் ஆயிரம் ரூபாய் அனுப்ப வேண்டுமென்றால் 80 UAE திர்ஹம் கொடுத்தால் போதும்! ஆனால் தற்போது 95 திர்ஹம் வரை கொடுக்க வேண்டும். ஆயிரத்திற்கு ஐந்து திர்ஹம் என்றால் இருபதாயிரம் அனுப்பும் ஒருவர் மாதத்திற்கு நூறு திர்ஹம் (சுமார் ஆயிரத்து 1200 ரூபாய்) இழப்பு!மட்டுமின்றி, UAE ஐப் பொருத்தவரை ரூம் வாடகை, பேச்சிலருக்கான கெடுபிடிகள் ஆகியக் காரணங்களால் ஏற்கனவே சாமான்ய NRI க்கள் மனஉளைச்சலில் நொந்து போயுள்ளார்கள்.

இந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளுக்கு ஏற்றுமதிக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் சுமார் 25% விலை உயர்வு எதிர்பார்க்கப் படுகிறது.

வெளிநாட்டில்தான் கஷ்டப்படுகிறோம். ஓராண்டுக்கு அல்லது ஈராண்டுக்கு ஒருமுறை கிடைக்கும் விடுமுறையில் ஊர் சென்று வரலாம் என்று கிளம்பினால் ஏர்போர்ட்டிலிருந்து சுங்கத் துறையினரின் கெடுபிடி, உபரி லக்கேஜ் கட்டணம் முதல் டாக்சி டிரைவர்கள் வரை எல்லோரையும் சமாளித்து ஊர்வந்து சேர்ந்தால் குடும்பப் பிரச்சினைகளும் இருந்தால் அவற்றையும் சமாளித்து விடுமுறை முடித்து மீண்டும் பணிக்குத் திரும்புவதை நினைக்கும் போது NRI களின் நிலை ராணுவ வீரர்களின் நிலையை விடக் கொடுமையானது!

இப்படியாக உள்நாட்டு பணமதிப்பு உயர்வு, விலைவாசி உயர்வு, ஏர்போர்ட் கெடுபிடிகள் எனப் பல்வேறு சுமைகளோடு, குடும்பச் சுமையையும் சுமந்து கொண்டிருக்கும் பெரும்பாலான வெளிநாட்டு இந்தியர்களை நினைவுகூற சர்வதேச NRI க்கள் தினம் ஒன்றை அறிவித்து அவர்களுடன் குடும்பத்தினர் ஒருநாள் மட்டும் இலவசமாக தொலைதொடர்பு கொள்ள இந்தியப் பேரரசு உதவலாமே! நாட்டிற்கு NRI க்கள் செய்ததைச் சொல்லிவிட்டேன்! இப்பொழுது சொல்லுங்கள் நாடு NRI களுக்கு என்ன செய்ததென்று?

எழுதியவர்: அதிரைக்காரன்

கருத்துகள் இல்லை: