ஈரோடு, மார்ச்.23- பாராளுமன்ற தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் இந்திய மற்றும் தமிழக அரசியல் நிலவரம் குறித்த கலந்துரையாடல் கூட்டம் ஈரோடு பவானி மெயின் ரோட்டில் உள்ள கே.கே.எஸ்.கே.மகாலில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
6 தொகுதிகளில் போட்டி
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதை சேவையாக கொண்டு மனித நேய மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி ஒன்றை தொடங்கியுள்ளோம். இது ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, தலித் மக்களுக்காக தொடங்கப்பட்டதாகும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி தி.மு.க கூட்டணியுடன் போட்டியிட முடிவு செய்துள்ளது.
இதற்காக உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அப்போது மத்திய சென்னை, வேலூர், தஞ்சை, திருச்சி, ராமநாதபுரம், மயிலாடுதுறை ஆகிய 6 தொகுதிகளை கேட்டுள்ளோம். இந்த தொகுதிகளில் கணிசமானதை ஒதுக்குவார்கள் என்று நம்புகிறோம். அல்லது தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு எம்.எச்.ஜவாஹிருல்லா கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக