செவ்வாய், 10 மார்ச், 2009

த.மு.மு.க. கொடியை இறக்கி ஆபாசமாக பேசியவர் கைது

மணமேல்குடி, மார்ச்.10 - கோட்டைப்பட்டிணத்தில் த.மு.மு.க. கொடியை இறக்கி ஆபாசமாக பேசியதாக மீனவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கொடி இறக்கம்

கோட்டைப்பட்டிணம் சதாம் நகரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினரால் கொடிக்கம்பம் நிறுவப்பட்டுள்ளது. இதில் அக்கட்சியின் கொடி ஏற்றப்பட்டு பறந்து கொண்டிருந்தது. நேற்று ராம் நகரை சேர்ந்த மீனவர் மாரி (வயது 28) அந்த கொடியை கீழே இறக்கி விட்டு கட்சி நிர்வாகிகளை ஆபாசமாக திட்டினார்.

இது குறித்து த.மு.மு.க. துணை தலைவர் நபீன் என்பவர் கோட்டைப்பட்டிணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாரியை கைது செய்து அறந்தாங்கி கோர்ட்டில் ஆஜர் படுத்தினார். மாஜிஸ்திரேட்டு வழக்கை விசாரித்து மாரியை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

த.மு.மு.க. கொடி இறக்கப் பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அங்கு இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. உடனே சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மோதல் ஏற்படாமல் தடுத்தார்.

கருத்துகள் இல்லை: