செவ்வாய், 17 மார்ச், 2009

எம்.பிகளுக்கு கிடைக்கும் சலுகைகள்!

எம்.பி., பதவிக்கு போட்டிப்போட பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு காரணம் அவர்களுக்கு கிடைக்கின்ற சலுகைகள்தான்.

நாடு முழுவதும் 543 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் இந்த பதவிக்காக ஆர்வம் காட்டுவோர் பல ஆயிரக்கணக்கானோர்.

எம்.பி பதவி என்றால் சாதாரணம் அல்ல. புதிய எம்.பி.களுக்காக லட்சக்கணக்கில் சலுகைகள் காத்திருக்கின்றன.

மாநிலங்களவை உட்பட மொத்தம் உள்ள 790 எம்.பி.களுக்காக ஆண்டு தோறும் ரூ.64 கோடி மத்திய அரசு செலவிடுகிறது.

அனைத்து சலுகைகள் உட்பட ஒரு எம்.பி.க்கு ஆண்டு தோறும் கிடைப்பது ரூ.8.22 லட்சம் ஆகும். இதில் மாத சம்பளம் ரூ.16 ஆயிரம். 1998 வரை மாத சம்பளமாக ரூ.4 ஆயிரம் மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில் 2006 முதல் இது ரூ.16 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

எம்.பி.க்கு தினப்படி பார்லி. கூட்டம் உள்ள நாட்களில் ரூ.1000, தொகுதிக்கான படி மாதம் ரூ.20 ஆயிரம். அலுவலக படி ரூ.20 ஆயிரம் (ரூ.4000 ஸ்டேஷனரி பொருட்கள் வாங்கவும், ரூ.2 ஆயிரம் தபால் செலவுக்கும், ரூ.14 ஆயிரம் செயலாளர்களுக்கும்). அந்த வகையில் மாதம் ரூ.70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொகை கிடைக்கும்.

மேலும் பயணப்படியாக கூட்டதொடருக்கு செல்லும்போது விமானம் என்றால் ஒருவரது விமான கட்டணம், அதில் 4ல் ஒரு பங்கு கட்டணமும் உண்டு. ரயில் பயணம் என்றால், ஒரு முதல் வகுப்பு டிக்கெட்டும், ஒரு 2ம் வகுப்பு டிக்கெட்டும், சாலை வழி என்றால் கி.மீ.க்கு ரூ.13 என்ற அடிப்படையில் படி உண்டு. திரும்ப வரும்போதும் இதே கட்டணம் கிடைக்கும்.

விமான பயணத்தில் கூட்டத்தொடர் காலம் அல்லது இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் செல்ல ஒரு வருடம் 34 டிக்கெட் கிடைக்கும்.

இந்த பயணத்தில் எம்.பி.யின் மனைவி, கணவர், உதவியாளர் உடன் செல்லலாம். ரயிலில் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும், எந்த ரயிலிலும், எந்த நேரத்திலும் முதல் வகுப்பு ஏ.சி.யில் வாழ்க்கை துணையுடன் பயணம் செல்ல இலவச பாஸ் உண்டு. ரயில் பயணத்தில் ஒரு உதவியாளரை உடன் அழைத்து செல்ல 2ம் வகுப்பு ஏ.சி இலவச பாஸ் உண்டு.

குடும்பத்துடன் டெல்லியில் தங்கிட வசதி, ஆண்டு தோறும் 4 ஆயிரம் கி.லிட்டர் தண்ணீர், 50 ஆயிரம் யூனிட் மின்சாரம் இலவசமாக பயன்படுத்தலாம்.

டெல்லியில் அலுவலகத்திலும், தொகுதியில் உள்ள வீட்டிலும் தலா ஒரு தரைவழி இணைப்பு போன் வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொன்றுக்கும் 50 ஆயிரம் இலவச லோக்கல் கால்கள். 2 மொபைல் போன்கள் வைத்துக்கொள்ளலாம். மேலும் மருத்துவ உதவிகளும் ஏராளம் உண்டு.

ஒரு சபையின் காலமான 5 வருடம் எம்.பி.யாக இருந்தால் அந்த காலம் முடிந்த பின்னர் மாதம் தோறும் ரூ.8 ஆயிரம் பென்ஷன் கிடைக்கும். இது தவிர 5 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்த ஒவ்வொரு வருடத்திற்கும் ரூ.800 வீதம் கூடுதல் பென்ஷன் கிடைக்கும். 10 வருடம் எம்.பி.யாக இருந்தவருக்கு ரூ.12 ஆயிரம் பென்ஷனாக கிடைக்கும்.

இது தவிர எம்.பி. மரணமடைந்தால் அவரது குடும்பத்தினருக்கு பென்ஷனில் 50 சதவிகிதம் கிடைக்கும். முன்னாள் எம்.பி.களுக்கு இந்தியாவில் எங்கு வேண்டுமானலும், எந்த ரயிலிலும், எந்த நேரத்திலும் முதல் வகுப்பு ஏ.சி பெட்டியில் பயணம் செய்யலாம். உதவியாளர் உண்டு என்றால் இருவருக்கும் இலவச பயணம் செய்ய அனுமதியுண்டு.

தேங்க்ஸ் தஒ : nakkheeran

கருத்துகள் இல்லை: