ஞாயிறு, 29 மார்ச், 2009

சிறுத்தையை விட சிறுமையடைந்த முஸ்லிம்லீக்!


பாரம்பரிய வரலாறு கொண்டதும், ஜின்னா- காயிதே மில்லத், போன்ற மதிப்புக்குரியவர்களால் வளர்க்கப்பட்டதுமான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எனும் தாய்ச்சபை ஒரு காலத்தில் நாடாளுமன்றத்தில் பலமான அணியாகவும், சென்னை மாகாணத்தில் பலமுள்ள எதிர்கட்சியாகவும் இருந்த வரலாறு உண்டு. அத்தகைய சிறப்புடைய தாய்ச்சபை பின்னால்வந்த தலைவர்களின் சுயநல முடிவுகளால், பிறையை கொடியில் வைத்திருப்பதற்கு ஏற்றவாறு 'வளர்பிறை'யாக இல்லாமல் 'தேய்பிறை' யாக மாறி நிற்கிறது.

இப்படி கரையும் ஐஸ் கட்டியாக தாய்ச்சபை மாறியதற்கு காரணம் 'கொடுத்தவரைக்கும் லாபம்' என்று அரசியல் கட்சிகளிடம் அடமானம் ஆனதும்,உரிய நேரத்தில் தைரியமான முடிவுகள் எடுக்கதவரியதும்தான். உதிரிக்கட்சிகள் கூட எங்களுக்கு ஐந்து சீட்டு வேண்டும் என்று அடம்பிடிக்கும் நிலையில் மறுபடியும் தி.மு.க. ஒதுக்கிய [பிச்சை போட்டது மாதிரி போட்ட] ஒரு சீட்டை 'மனநிறைவோடு' பெற்று வந்துள்ளது தாய்ச்சபை. வட மாவட்டங்களில் குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் வாக்கு வங்கியுடைய சிறுத்தைகளுக்கு இரு தொகுதிகள்; தமிழகத்தில் முப்பது மாவட்டங்களில் கணிசமான வாக்குகளை கொண்டுள்ள முஸ்லீம் சமுதாய கட்சியான லீக்கு ஒரு இடம். இதுதான் கலைஞரின் நெஞ்சுக்கு நீதி!

ஒரு தொகுதி ஒதுக்கியவுடன் தூக்கிவீசிவிட்டு சீறும் வேங்கையென தாய்ச்சபை வெளியேறி தனித்து போட்டி என அறிவித்து இருக்குமானால், தாய்ச்சபையின் மானமும் காக்கப்பட்டிருக்கும் அதோடு முஸ்லிம்கள் போடுவதை பொறுக்குபவர்களல்ல என்பதை அரசியல் கட்சிகளும் உணர்ந்திருக்கும். என்ன செய்ய! பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது கேரளாவில் காங்கிரசுடன் உள்ள உறவை முறிக்கவேண்டும் என்று பிரதான தலைவர்கள் மற்றும் முஸ்லிம்களின் உணர்வுகளை புறந்தள்ளி காங்கிரஸ் உறவை தொடர்ந்தது தாய்ச்சபை. அதேபோல் இன்று கிள்ளுக்கீரையாக கருணாநிதி கருதியபோதும், தூக்கி போட்ட ஒரு எலும்பை கவ்விக்கிக்கொண்டு வாலாட்டுவதுதான் கடமை என தாய்ச்சபை கருதிவிட்டது போலும்.

சரி! வாங்கிய இந்த ஒரு சீட்டிலாவது தனி சின்னத்தில் நின்று வென்று தனித்தன்மையை நிலை நாட்டுவார்களா? அல்லது கடந்த முறை போன்று தி.மு.க. உறுப்பினராக பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தது போன்று இந்த முறையும் தி.மு.க. உறுப்பினராக நாடாளுமன்றம் செல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!

thanks to : முகவை எஸ்.அப்பாஸ்

கருத்துகள் இல்லை: