புதன், 11 மார்ச், 2009

மதானியுடன் மல்லு கட்டும் இ.கம்யூ.,

திருவனந்தபுரம் : கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான மதானிக்காக வக்காலத்து வாங்கிய கம்யூனிஸ்ட் கட்சி, அவரது ஆதரவு பெற்ற வேட்பாளரை ஆதரிக்க மறுத்துள்ளது.

கோவை குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவர் மதானி. கேரளாவில் இவர், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவராக உள்ளார். மலப்புரம் மாவட்டம் பொன்னானி தொகுதியில் முஸ்லிம்கள் அதிகம் உள்ளனர். எனவே, அந்த தொகுதியில் மதானி ஆதரவு பெற்ற ஹூசைன் ரந்தானி போட்டியிட திட்டமிட்டுள்ளார். ஆனால், அவரை ஆதரிக்கப் போவதில்லையென இந்திய கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது.




பொன்னானி தொகுதியில், ஒவ்வொரு முறையும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் தான் போட்டியிடுவது வழக்கம். ஆனால், இதுவரை அங்கு இந்த கட்சி வெற்றி பெற்றதில்லை. இருப்பினும், மதானி ஆதரவாளரை ஆதரிக்க மறுக்கிறது இந்திய கம்யூனிஸ்ட்."மதானி கட்சிக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பொதுவான ஒரு சுயேச்சை வேட்பாளரை இங்கு போட்டியிடச் செய்யலாம்' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரான வைக்கம் விஸ்வன் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த யோசனையை மதானி மறுத்து விட்டார். "அவர்கள் யாரை வேண்டுமானாலும் இத்தொகுதியில் வேட்பாளரை நிறுத்திக் கொள்ளட்டும். ஆனால், நாங்கள் எங்கள் கட்சி சார்பில் ஒருவரை நிறுத்தத்தான் போகிறோம்' என மதானி உறுதியாகக் கூறியுள்ளார்."இடதுசாரி ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்காத மதானி கட்சி, நமது கூட்டணி விவகாரத்தில் தலையிடுவதைக் கண்டிக்கிறோம்' என இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பரதன், டில்லியில் நடந்த கட்சிக் கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மதானி சிறையில் இருந்த போது அவருக்கு ஆதரவாகப் பேசி, முஸ்லிம் ஓட்டுகளை காங்கிரசிடமிருந்து பிரித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தற்போது மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளரை ஆதரிக்க மறுப்பதால், அத்தொகுதியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நன்றி : தினமலர்

கருத்துகள் இல்லை: