புதன், 18 மார்ச், 2009

முஸ்லீம் பயங்கரவாதிகள் உருவாக்கப்படுவது இப்படித்தானே

ஐதராபாத்தைச் சேர்ந்த இப்ராஹிம் அலி ஜுனாயத், 26 வயதான யுனானி மருத்துவர். கடந்த 2007ஆம் ஆண்டு மே மற்றும் ஆகஸ்டு மாதங்களில் ஐதராபாத்தின் மெக்கா மசூதியிலும், லும்பினி பூங்காவிலும் நடந்த குண்டுவெடிப்புகளில் இவரைத் தொடர்புபடுத்தி, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு ஐந்து மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டார்.

அப்போது மாணவராக இருந்த இவரைப் பிடித்துச் சென்ற போலீசார், சட்டவிரோதமாக அடைத்து வைத்ததுடன், வெடிகுண்டு வைத்ததாக ஒப்புக்கொள்ளும்படி, தொடந்து 5 நாட்களுக்குச் சித்திரவதை செய்துள்ளனர். கடந்த டிசம்பர் 30, 2008 அன்று, மாவட்ட கீழமை நீதிமன்றம், நிரபராதி எனக் கூறி இவரை விடுவித்துள்ளது. இதையடுத்து தனக்கு 20 லட்ச ரூபாய் நட்ட ஈடு வழங்க வேண்டும் என ஜுனாயத் வழக்குத் தொடர்ந்துள்ளார். போலீசாரின் சித்திரவதைக்குள்ளான கொடுமையான அந்த ஐந்து நாட்களைப் பற்றி அவர் கூறுகிறார்:


""அன்று செப்டம்பர் 3, 2007. நானும், நிஜாமியா அரசுக் கல்லூரி மற்றும் பொது மருத்துவமனையைச் சேர்ந்த மற்ற மாணவர்களும், புது டில்லிக்கு ஒரு கல்விச்சுற்றுலா சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தோம். செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இறங்கிய நாங்கள், பழைய ஐதராபாத்தின் யாகுத்புராவிலிருந்த எங்களது கல்லூரி விடுதிக்கு உள்ளூர் ரயிலின் மூலம் வந்து சேர்ந்தோம்.

அங்கு சென்றவுடன் எனது சகோதரனைப் பொதுத் தொலைபேசி மூலமாக அழைத்து, நான் வந்து சேர்ந்துவிட்டதைத் தெரிவித்தேன். பேசி முடித்துவிட்டு வெளியே வந்த மறுகணமே, சாதாரண உடையிலிருந்த நான்கு போலீசார் என்னைப் பிடித்து மூட்டையாகக் கட்டி ஒரு சுமோ காரில் ஏற்றினார்கள். அப்போது காலை 11 மணி.


விக்டரி விளையாட்டு மைதானம் வரை அந்த வாகனம் விரைந்து சென்றது. அதற்குப் பிறகு என் கண்கள் கட்டப்பட்டன. பிறகு, ஒரு மணி நேரம் எங்கேயும் நிற்காமல் வாகனம் சென்றது. வண்டியின் ஓட்டுனர் வாய்தவறிக் கூறியதிலிருந்து நான் காந்திப்பேட்டையில் (25 கி.மீ தொலைவில்) இருப்பதை உணர்ந்தேன். நான் ஒரு அறைக்குக் கொண்டு செல்லப்பட்டு உள்ளாடைகளுடன் தரையில் தள்ளப்பட்டேன். என்னைப் போன்றே இன்னும் சிலரையும் அங்கே அடைத்து வைத்திருந்ததை அவர்களது அலறலிலிருந்து என்னால் உணரமுடிந்தது. என்னுடைய பணப்பை, அடையாள அட்டை, டெலிபோன் டைரி ஆகியவற்றைப் போலீசார் பறித்துக் கொண்டனர்.


எனது கைகள் பின்னால் கட்டப்பட்டன. நான் குற்றமற்றவன் என்றும், என் மீது இரக்கம் காட்டும்படியும் நான் கெஞ்சியபோதும் கூட, என் மீது மூன்று பேர் பாய்ந்தனர். குப்புறத்தள்ளி, இருவர் எனது கால்களை அழுத்திப் பிடித்து அமர்ந்துகொள்ள ஒருவர் எனது தோள் மீது ஏறி நின்றார். ஒருவர் எனது பாதங்களை தோல் பெல்ட்டால் அடிக்க, மற்ற இருவரும் என் உடம்பு முழுக்க அடித்துத் துவைத்தனர். வலியோ தாங்கவே முடியாததாக இருந்தது. முடிவில் நான் மயக்கமடைந்து விழுந்துவிட்டேன்.


மறுநாள் காலையில் கண்விழித்தவுடன், என்னை மற்றொரு அறைக்கு இழுத்துச் சென்றனர். அங்கே ஒருவர் பூட்ஸ் காலால் என் உடல் முழுவதும் ஏறி மிதித்தார், எட்டி உதைத்தார், எனது கை, கால் விரல்களை நசுக்கினார்; எனது உடலில் இரத்த ஓட்டமே நின்றுவிட்டதைப் போன்று மரத்துப் போனது. மிகக் கடுமையான வலியால் நான் துடித்துப் போனேன். மெக்கா மசூதி, லும்பினி பூங்கா, மற்றும் கோகுல் சாட் சென்டர் ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் எனது பங்கு என்ன என்று கேட்டுத் தொடர்ந்து என்னைச் சித்திரவதை செய்தனர். நான் குற்றமற்றவன் என்றும் என் மீது இரக்கம் காட்டும்படியும் அவர்களிடம் கெஞ்சினேன். ஆனால் அவர்கள், என்னை நம்ப மறுத்துவிட்டனர். நான் குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என அவர்கள் நினைத்தனர். ஆனால் ஒப்புக்கொள்வதற்கு என்னிடம் ஒன்றுமில்லை.


இது என்னை விசாரித்தவர்களுக்கு மேலும் எரிச்சலூட்டியது. சித்திரவதை அதிகமாகியது. எனது காது மடல்கள், மார்பு, உதடு, பிறப்புறுப்பு என எல்லா இடங்களிலும் மின்சாரத்தைப் பாய்ச்சினார்கள். காலையில் தொடங்கி இரவு வரை நீண்ட இத்தகைய சித்திரவதைகள் மூன்று நாட்களுக்குத் தொடர்ந்தன. பல நாட்களுக்கு சிறுநீருடன் இரத்தம் செல்லுமளவுக்கு எனது பிறப்புறுப்பு காயமடைந்திருந்தது. எனது உடலின் பல பகுதிகளில் அந்தக் காயங்களின் தழும்புகள் இன்னமும் உள்ளன.


மனித உரிமை ஆர்வலர்களும், மூத்த பத்திரிகையாளர்களும் தலையிட்ட பின்னர்தான், என்னை, செப்டம்பர் 8, 2007 அன்று, மாநகர நீதிபதியின் முன் நிறுத்தினர். என்னை செப்டம்பர் 3ஆம் தேதியே கைது செய்துவிட்டபோதும், செப்டம்பர் 8இல் தான் கைது செய்தது போல் காட்டினார்கள்.


நான் ஏன் இதற்குப் பலியானேன்? மே 18, 2007, மெக்கா மசூதியில் குண்டு வெடித்த அன்று நான் அங்கே தொழுவதற்காகச் சென்றிருந்தேன். பின்னர், குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உதவ, நான் மசூதிக்குத் திரும்பவும் சென்றேன். இதுதான் நான் செய்த குற்றம். அதேவேளையில் இந்த விசாரணைகள் எனக்கு ஒன்றை உணர்த்தின. போலீசாருக்கு வழக்கில் ஏதாவதொரு முன்னேற்றத்தைக் காட்டவேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. இந்த சமுதாயத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் தவறுதலாக வழிகாட்டப்பட்டு ஜிகாத்துக்குத் திருப்படுகிறார்கள் என்ற வரையறைக்குப் பொருந்துவது போல, நான் வேறு படித்த முஸ்லீமாக இருந்தேன். எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த துரதிருஷ்ட நாளன்று நான் அந்த மசூதியில் வேறு இருந்தேன்.''


இக்கொடுமை மோடியின் இந்துவெறி பயங்கரவாத ஆட்சி நடக்கும் குஜராத்தில் நிகழவில்லை. மதச்சார்பின்மை பேசும் காங்கிரஸ் ஆளும் ஆந்திராவில் தான் நடந்துள்ளது. மசூதிகள் முஸ்லீம் குடியிருப்புப் பகுதிகளில் குண்டு வைப்புகளை நடத்திவரும் இந்துவெறி பயங்கரவாதிகள் ஒருபுறம்; இக்குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியதாக அப்பாவி முஸ்லிம்கள் மீது பழிபோட்டு வதைக்கும் அரச பயங்கரவாதம் மறுபுறம் என இருவகை பயங்கரவாதிகளிடம் சிக்கி நாடெங்கிலுமுள்ள முஸ்லீம்கள் வதைபடுகிறார்கள். சாமாமானிய முஸ்லீம்கள் மட்டுமல்ல அல்லாவின் பெயரால் புனிதப்போர் தொடுப்பதற்காக படித்த இளைஞர்களை இஸ்லாமிய பயங்கரவாதிகள் அணிதிரட்டி வருகிறார்கள் என்ற ஊகத்தின் அடிப்படையில், படித்த நடுத்தர வர்க்க இஸ்லாமிய இளைஞர்களையும் அரசபயங்கரவாதம் மிருகத்தனமாக வதைக்கிறது. இதற்கு இன்னுமொரு சாட்சியம்தான், இப்ராஹிம் அலி ஜுனாயத்.


• அழகு

கருத்துகள் இல்லை: