செவ்வாய், 24 மார்ச், 2009

தேசிய அவமானம் என்றால் என்ன?

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் மக்களவைத் தேர்தலை உலகமே ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது. 10 ஆயிரம் கோடி ரூபாய்களுக்கும் மேலாகச் செலவளித்து ஐந்து கட்டங்களாக நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலில், நாட்டின் முக்கியமான நிகழ்வுகளும் எதிர்காலத் திட்டங்களும் பொதிந்துள்ளன.

காங்கிரஸ் கூட்டணி அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக அல்லது ஆதரவாக, எதிர்க்கட்சியான பாஜகவின் மதவாத அரசியலை நிர்ணயிக்கும் அளவுகோளாக விளங்கப்போகும் மக்களவைத் தேர்தல் முடிவுகளைப் பொருத்தே உலகப் பொருளாதார மந்தநிலையின் எதிர்விளைவுகள், அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், சேதுக்கால்வாய் திட்டம், பாபர் மசூதி, சிறுபான்மையினர் இடஒதுக்கீடு, பாகிஸ்தானுடனான அயலுறவுக் கொள்கை போன்ற அதிமுக்கியப் பிரச்சினைகளை எதிர்கொண்டு 2020 இல் வல்லரசு ஆவதற்கு நடைபோட்டுவரும் இந்தியாவின் எதிர்காலம் அடங்கியுள்ளது.

இவை எதையும் முக்கியப் படுத்தாமல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் நடத்துவது குறித்த விவாதங்கள் தற்போது நடந்து வருகின்றன. நமது வாழ்க்கைப் பிரச்சினையுடன் தொடர்புடைய தேர்தலைக் கணக்கில் கொள்ளாமல் பணக்கொழுப்பெடுத்த முதலாளிகளும் அவர்களின் எச்சில் துண்டுகளுக்காக நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு அலையும் ஊடகங்களும்கூட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைக் குறித்துக் கவலையாக செய்தி வெளியிட்டு வருகிறார்கள்.


"ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நம்நாட்டில் தேர்தல் நேரத்தில் நடத்த முடியாமல் போனதற்கு காங்கிரஸ் மற்றும் மாநில அரசுகளே காரணம்" என்று கூறி பாஜக தனது தேசபக்தியைக் காட்டியுள்ளது. குஜராத்தில் நடந்த முஸ்லிம் இனப்படுகொலையில் 3000க்கும் அதிகமான முஸ்லிம் விக்கெட்களை வீழ்த்தியும், இலட்சக் கணக்காணோரை சொந்த பெவிலியனுக்குத் திரும்ப முடியாமல் செய்த குஜராத் இனப்படுகொலை ஆல்ரவுண்டரும் கேப்டனுமான நரேந்திர மோடி, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மாற்றப்பட்டதை "தேசிய அவமானம்" என்று சொன்னதுதான் உலக மகா காமெடி!

"தேசிய அவமானம் என்பது குஜராத்தில் நடந்ததுதான்" என்பது மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு இப்போதுதான் நினைவுக்கே வந்திருக்கிறது. இது தேர்தல் நேரமல்லவா?
சினிமாவையும் கிரிக்கெட்டையும் பாராளுமன்றத்தில் விவாதித்து, பாராட்டுத் தெரிவிக்கும் கேடுகெட்ட நிலை நமது நாட்டைத் தவிர உலகிலேயே எங்கும் சாத்தியமில்லை. நாட்டின் இளைஞர்களோடு தொடர்புடைய துறைகள் என்றாலும் கிரிக்கெட்டைவிட போற்றுதலுக்குரிய விளையாட்டுக்கள் நிறையவே உள்ளன. அதெற்கெல்லாம் இல்லாத அக்கரை/கரிசனம் கிரிக்கெட் விளையாட்டின்மீது மட்டும் இருக்கிறதென்றால் அதில் பெரும் பணமுதலைகளுக்குத் தொடர்புள்ளது என்பதைத் தவிர வேறென்ன?

இலங்கையில் ஈழத்தமிழர்களை சிங்கள அரசு கொன்றொழிக்கும்போது, தமிழகத்தில் ஈழத்தமிழர் ஆதரவு கொளுந்து விட்டு எரிந்தது! அரசியல் கட்சிகளின் பேரணிகளில் இளைஞர்களின் பங்களிப்பு அரசியல்வாதிகளின் வயிற்றில் புளியைக் கரைத்தது! இது மத்திய-மாநில ஆட்சியாளர்களுக்கு எதிராகத் திரும்பி விடக்கூடாது என்பதற்காக இலங்கையில் 20x20 மேட்சுகளை நடத்தி இளைஞர்களின் கவனத்தைத் திசைதிருப்பியதும் இந்தக் கேடுகெட்ட கிரிக்கெட்தான்!

மன்னர்களுக்கு எதிராக இளைஞர்கள் சிந்திக்கக்கூடாது என்பதற்காக ஒலிம்பிக் போன்ற விளையாட்டுக்களை நடத்தி இளைஞர்களின் கவனம் விளையாட்டில் மட்டும் வியாபித்திருக்கும்படி சதி செய்து ரோமானிய மன்னர்கள் ஆட்சி சுகம் கண்டார்கள். அரசியல்வாதிகளின் கிரிக்கெட்டின் மீதான அதீத அக்கரையின் பின்னணியும் இதுவாகத்தான் இருக்கும்.

நாட்டின் தலைமையையும் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கப்போகும் தேசியக் கடமையான தேர்தலைவிட கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களைப் பார்க்கும்போது அறிஞர் பெர்னாட்ஷா சொன்ன "11பேர் சேர்ந்து 11000 பேரை முட்டாளாக்கும் விளையாட்டே கிரிக்கெட்" என்பது நினைவில் வருகிறது.

பாரத மாதகீ ஹேட்ஸ் அப்!

கருத்துகள் இல்லை: