புதன், 4 மார்ச், 2009

6 தொகுதிகளில் மனித நேய மக்கள் கட்சி போட்டி



கோவை: தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் கட்சியான மனித நேய மக்கள் கட்சி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் ஹைதர்அலி, மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமத், பொருளாளர் ஹாரூண் ரஷீத் ஆகியோர் இது குறித்து கோவையில் நிருபர்களிடம் கூறுகையில்,

மனித நேய மக்கள் கட்சிக்கு இன்னும் ஓரிரு நாட்களில் 32 மாவட்டங்களுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்படுவர்.

வரும் மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை, வேலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தஞ்சை, திருநெல்வேலி அல்லது தென்காசி ஆகிய தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.

ஏதேனும் அரசியல் கட்சிகள் சிறுபான்மை, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளித்தால் அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம்.

இன்னும் ஓரிரு தினங்களில் கூட்டணி நிலவரம் மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

சென்னை உயர்நீதிமன்றம் மோதல் சம்பவம் துர்பாக்கியமான செயல். அப்பாவி மக்கள், காவல்துறையையும், நீதித்துறையையும் நம்பித்தான் இருக்கிறார்கள். அவர்களே பகிங்கரமாக மோதிக் கொள்வது வேதனையானது.

இலங்கைத் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ராணுவ நடவடிக்கையின் மூலம், இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது என்றனர்.

பேட்டியின்போது மாநிலச் செயலாளர் கோவை உம்மர், மாவட்டத் தலைவர் பஷீர், மாவட்டச் செயலாளர் அமீர், மாவட்ட பொருளாளர் கபீர் ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை: