புதன், 18 மார்ச், 2009

நாகர்கோவிலில் நடைபெற்ற "எளிய முறையில் குர்ஆன் மற்றும் தொழுகை புரிந்துகொள்ளல்" நிகழ்ச்சி!


இறையருளால் எளிய முறையில் குர்ஆன் மற்றும் தொழுகை புரிந்துகொள்ளல்(UNDERSTAND QURAN AND SALAH - The Easy Way) என்ற பயனுள்ள இஸ்லாமியத் தமிழ் நிகழ்ச்சி நாகர்கோவில் IRG ட்ரஸ்ட் அரங்கத்தில் சென்ற வெள்ளியன்று (13,மார்ச் 09) மிகச் சிறப்பாக நடைபெற்றது. சமூக நல அமைதி அறக்கட்டளையும் IRG அறக்கட்டளையும் இணைந்து இந்நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

சென்னையிலிருந்து வந்த சகோதரர் ஜனாப். ஷேக். M.F. அலி அவர்கள் அனைவருக்கும் எளிதாக விளங்கும் விதத்தில் மல்டி மீடியா படக்காட்சிகளின் மூலம் பாடங்களை விளக்கினார். பயிற்சியின் போது, பயிலவந்தவர்களைச் சைகைகள் மூலமும் உரக்க உச்சரிக்கச் செய்வதன் மூலமும் பங்கெடுக்கச் செய்து பாடங்களை நடத்தியது பயனுள்ளதாக இருந்தது.

இந்தப் பாடத்திட்டத்தின் சிறப்பு அம்சமாக, ஒவ்வொரு பாடங்களுக்கு இடையிலும் பயில்பவர்களை உற்சாகமூட்ட மூச்சுப் பயிற்சியளித்தார். இது பங்கெடுத்தவர்களின் கவனத்தில் தொய்வு ஏற்படா வண்ணம், நிகழ்ச்சி முடியும்வரை அவர்களைச் சுறுசுறுப்பாக வைத்திருந்தது.

குர்ஆனிலுள்ள முக்கிய 50 சொற்களை இப்பயிற்சி மூலம் தெரிந்து கொள்வதால் அதிலுள்ள சுமார் 27000 சொற்களைப் புரிந்து ஓத இயலும். குரானிலுள்ள சுமார் 78000 மொத்த சொற்களில் இது 35 சதவீதமாகும்.

மாலை நாலரை மணி முதல் இரவு சுமார் 8 மணி வரை நிகழ்ச்சி நடைபெற்றது. 3 மணி நேரத்தில் 8 பாடங்கள் வாயிலாக இந்த வகுப்பு நடத்தப்பட்டது. மஃக்ரிப் தொழுகைக்காக அரை மணி நேரம் தேனீருடன் இடைவேளை அளிக்கப்பட்டது. ஆண்களும் பெண்களுமாக ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வழக்கறிஞர் அஸீம் அனைவரையும் வரவேற்றார். இறுதியில் பேசிய IRG அறக்கட்டளையின் சேர்மன் அல்ஹாஜ். செய்யது முஹம்மது மத
னீ நிகழ்ச்சியின் சிறப்பு அம்சங்களைப் பாராட்டிப் பேசியதோடு, மேலும் இது போன்ற நல்ல பலனுள்ள நிகழ்ச்சிகளை நடத்த IRGT வளாகத்தின் கதவுகள் திறந்திருக்குமென உறுதியளித்தார். சமூக நல அமைதி அறக்கட்டளையின் செயலர், பொறியாளர். பிஜிலி ஸாஹிப் நன்றியுரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சி சிறப்புற அமைய தொடக்கம் முதலே முழு முயற்சியுடன் எல்லா ஏற்பாடுகளையும் வெற்றிகரமாகச் செயல்படுத்திய சமூக நல அமைதி அறக்கட்டளையின் தலைவர் ஜனாப். கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் அவர்களை இங்கு நினைவு கூறுவது இன்றியமையாததாகும்.

மேலும் இந்த நிகழ்சியைப் பல்வேறு இடங்களில் சிறப்புற நடத்த பக்க பலமாக இருந்து வரும் ஜனாப். கஸ்ஸாலி அவர்களும் நிகழ்ச்சிக்கான தொழில் நுட்ப அமைப்புகளைப் பொறுப்பாகச் செய்துவரும் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ஷேக் மஸ்தான் அவர்களும் நிகழ்ச்சி சிறப்புற உதவினர்.

பயனுள்ள இந்த நிகழ்ச்சியினை தமிழ் முஸ்லிம்கள் வாழும் அனைத்துப் பகுதிகளிலும் நடத்திப் பயன்பெறச் செய்யவேண்டும் என்பது அனைவரின் விருப்பம்.

வல்ல நாயன் அதற்கு அருள்புரிவானாக. ஆமீன்.

தகவல்: அபூ அய்னு.

கருத்துகள் இல்லை: