செவ்வாய், 24 மார்ச், 2009

தேர்தல் கூட்டணி; மக்களை குழப்பும் அரசியல்வாதிகள்!

. முகவை அப்பாஸ்

தமிழகத்தில் தேர்தல் கச்சேரி தொடங்கவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் 'பக்கவாத்தியத்திற்கு' அணிசேர்க்கும் வேளையில் மும்முரமாக இருக்கின்றனர். பிரதான கட்சிகளான பா.ம.க. தே.மு.தி.க ஆகியவைகள் இன்னும் கூட்டணி விசயத்தில் தங்களின் இறுதி முடிவை அறிவிக்காமல் இருப்பதால் பெரிய கட்சிகளான அதிமுகவும், தி.மு.க.வும் கூட்டணியை இறுதி செய்யமுடியாமலும், வேட்பாளர்களை அறிவிக்கமுடியாமலும் 'பேச்சுவார்த்தை' என்று காலம் கடத்திவரும் நிலையில், கூட்டணி விசயத்தில் மக்களை குழப்பும் வகையில் அவ்வப்போது அறிவிப்புகளையும் இந்த அரசியல்வாதிகள் வெளியிட தயங்கவில்லை.Image

தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், பா.ம.க. எங்கள் கூட்டணியில்தான் இருக்கிறது என்று கூறுகிறது. காங்கிரசுக்கு பிடிக்காத விடுதலை சிறுத்தைகள் எங்கள் கூட்டணியில்தான் இருக்கிறது என்று தி.மு.க. கூறுகிறது. சிறுத்தைகளை தோற்கடிப்போம் என்று காங்கிரஸ் கூறுகிறது. காங்கிரசை ஒழிப்போம் என்று சிறுத்தை கூறுகிறது. இப்படி ஒரே கூட்டணி என்று சொல்லிக்கொண்டு ஒருவரை ஒருவர் தோற்கடிப்போம் என்று ஒருபுறம் சொல்லி மக்களை குழப்புகிறார்கள். மேலும் பா.ம.க. ஒருபுறம் ஸ்டாலினை சந்திக்கிறது மறுபுறம் அதிமுகவுடனும் பேசுவதாகவும் கூறப்படுகிறது.


இது ஒருபுறமிருக்க, கூட்டணியா? தனித்துப்போட்டியா? என்று தெளிவாக அறிவிக்காமல், பிரச்சாரத்திற்கு கிளம்பிவிட்டார் விஜயகாந்த். முதல் தேர்தல் பிரச்சார கூட்டத்திலேயே தானும் குழம்பி மக்களையும் குழப்பிவிட்டு வந்திருக்கிறார். அவரது பேச்சின் சில துளிகள்;

'நான் அன்றுமுதல் சொல்லிவருகிறேன். மக்களுடனும் தெய்வத்துடனும்தான் கூட்டணி என்று கூறி வருகிறேன்!

கேப்டன் தனித்து போட்டியிடப்போகிறார் என்று நீங்கள் கணக்கு போட்டால் தப்புக்கணக்காகும். ஏனெனில் அடுத்து சொல்கிறார்;

'இந்த தடவை தே.மு.தி.க.வுக்கு ஓட்டுப்போடுங்கள். அப்படியில்லை என்றால் நான் யாரை அடையாளம் காட்டுகிறேனோ, அவர்களுக்கு ஓட்டுப்போடுங்கள். நான் அடையாளம் காட்டுபவர்களுக்கு ஓட்டுப்போடுங்கள் என்று நான் சொல்வதிலும் ஒரு பொருள் இருக்கிறது.'

தனித்து போட்டி என்றால், தே.மு.தி.க-வுக்கு ஓட்டுபோடுங்கள் என்று கூறியதோடு நிறுத்தியிருக்கவேண்டும். அதையும் தாண்டி 'அடையாளம்' காட்டுபவர்களுக்கு ஓட்டுப்போடுங்கள் என்று கூறியதோடு, இவ்வாறு தான் கூறுவதில் ஒரு 'பொருள்' உள்ளது என்று விஜயகாந்த் கூறி குழப்பியுள்ளார்.

ஒருபுறம் மக்களுடனும் தெய்வத்துடனும் கூட்டணி, மறுபுறம் தன்கட்சி வேட்பாளர்கள் அல்லது தான் அடையாளம் காட்டுபவருக்கு வாக்களிக்க வேண்டுதல் என்ற அவரின் பேச்சு அவரும் குழம்பியுள்ளார். மக்களையும் குழப்புகிறார் என்பது திண்ணம்.

கூட்டணி விசயத்தில்தான் இப்படி என்றால், இன்னொரு நகைப்பிற்குரிய இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை எந்த அரசியல் தலைவரும் சொல்லாத ஒரு 'காமெடியும்' சொல்லியிருக்கிறார்;

'எனது தேர்தல் அறிக்கையைத்தான் கருணாநிதி பின்பற்றிவருகிறார். எனவே, வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நான் தேர்தல் அறிக்கை வெளியிடமாட்டேன்!

வடிவேலு கூட இப்படி நகைச்சுவை செய்யமுடியாது. ஒரு வாதத்திற்கு கருணாநிதி, இவரது தேர்தல் அறிக்கையைத்தான் பின்பற்றினாலும் மக்களுக்கு நன்மை கிடைத்தால் அது போதும் என்ற எண்ணம் 'மக்களுக்காகவே கட்சி ஆரம்பித்துள்ளேன்' என்று முழங்கும் கேப்டனுக்கு வராதது ஏன்?

எது எப்படியோ தேர்தல் முடியும்வரை இதுபோன்ற நகைச்சுவைகளையும், அரசியல் கூத்துக்களையும் இலவசமாக கண்டுகளிக்கலாம்.

கருத்துகள் இல்லை: