வியாழன், 26 மார்ச், 2009

கார் : 'பயங்கர' மலிவு !


சில ஆண்டுகளுக்கு முன்னர் சீனியர் அம்பானி மண்டையைப் போட்ட பிறகு பந்தாவாக அறிமுகப்படுத்தப்பட்ட ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் விளம்பரத்திற்கு எல்லா மொழி தினசரிகளிலும் ஒரு பக்க விளம்பரம், "ஒரு தபால் கார்டுக்கு ஆகும் செலவைவிட இந்தியாவில் செல்பேசிக் கட்டணம் குறைவாக இருக்க வேண்டும்" என்ற திருபாய் அம்பானியின் கனவை நிறைவேற்றுகிறோம் என்று பீற்றினார்கள். உண்மையில் ரிலையன்சு செல்பேசி மலிவு விலையில் கூறுகட்டி விற்கப்படும் காய்கறிபோல அள்ளி இறைத்தார்கள். மக்களுக்கும் அப்படி அம்பானியின் கனவை ஜூனியர் அம்பானிகள் நிறைவேற்றி விட்டார்களோ என ஒரு மயக்கம் இருந்தது.

அப்புறம்தான் அம்பானி சகோதரர்களின் பிக்பாக்கட் இரகசியம் வெளிப்பட்டது. தொலைபேசித் துறையில் அவர்கள் செய்த ஊழல், வெளிநாடு அழைப்புக்களை உள்ளுர் அழைப்புக்களாக மாற்றி பொய் எண் கொடுத்து பல நூறு கோடி ரூபாயை ஏப்பம் விட்டது, அரசியல் செல்வாக்கினால் அந்தத் திருட்டுத்தனத்திற்கு ஜூஜூபி அபராதம் கட்டி ஆட்டையைப் போட்டது எல்லாம் வெளிவந்த பிறகு திருபாய் அம்பானியல்ல, செத்த பின்னும் திருடும் "திருட்டுபாய் அம்பானி" என்பது சந்திக்கு வந்தது. அம்பானியின் ஆதாரப்பூர்வமான வம்பு-தும்புகளையெல்லாம் கிழக்குப் பதிப்பகம் போட்டிருக்கும் அம்பானி பற்றிய பக்திப் பரவசமான வரலாற்று இலக்கியத்தில் இருக்காது என்பதை முன்னரே சொல்லிக் கொள்கிறோம். பின்னர் "இதெல்லாம் கிழக்கு பதிப்பகத்தில் இல்லையே" என்று அசடு போல அதிர்ச்சியடையக்கூடாது.

திருபாய் அம்பானியின் கனவைப் போல ரத்தன் டாடாவும் ஒரு கனவு கண்டார். மும்பையின் மழைக்கால நாள் ஒன்றில் காரில் பயணம் செய்த ரத்தன் டாடா, ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பம் மழையில் நனைந்து கொண்டு ஸ்கூட்டரில் செல்வதைப் பார்த்து பரிதவித்துப் போனாராம். உடனே ஸ்கூட்டர் விலையில் அல்லது சற்று அதிகமாக ஒரு இலட்சத்தில் கார் தயாரித்து நடுத்தர வர்க்கத்தைக் கடைத்தேற்றுவது என்று முடிவு செய்தாராம். இதைக் கேள்விப்பட்ட மக்களும், அவர்களுக்கு முன்னரே டாடாவின் அருளுள்ளத்தை ஊதிவிட்ட ஊடகங்களும் இந்த ஒரு இலட்ச ரூபாய் மதிப்புள்ள கார் சாத்தியம்தானா என்று கொஞ்சம் சந்தேகத்துடனும், நிறைய சந்தோஷத்துடனும் காத்திருந்தார்கள்.

டாடாவின் கனவை நனவாக்குவதற்கு மேற்கு வங்கத்தின் "டாடா கம்யூனிஸ்டுகள்" ஓடோடி வந்தார்கள். சிங்கூரில் இருபோகம் விளையக்கூடிய விவசாய நிலங்கள் சுமார் 950 ஏக்கர் நிலங்களை விவசாயிகளிடமிருந்து வம்படியாகப் பிடுங்கி, பேருக்கு நிவாரணத்தொகை கொடுத்துவிட்டு மலிவு விலைக்கு டாடாவுக்கு விற்றார்கள். இதுபோக டாடாவுக்கு சில ஆயிரம் கோடி கடன், மற்ற சலுகைகள் என தீபாராதனை திவ்யமாக நடந்தது. என்ன-ஏது எனத் தெரியாமல் தமது நிலங்களை மார்க்சிஸ்டு அரசு பிடுங்கியதைக் கண்ட விவசாயிகள் அதை எதிர்த்துப் போர்க்குணத்துடன் போராடினார்கள். அதையைம் மீறி டாடா, தமது பங்காளி புத்ததேவுடன் இணைந்து ஆலையை நிறுவினார். இடையில் நந்திகிராமில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அடாவடியாக நிறுவிய மேற்கு வங்க அரசைக் கண்டித்து விவசாயிகள் போர்க்குணத்துடன் போராட, மார்க்சிஸ்டு அரசு போலீசு மூலம் பலரைச்சுட்டுக் கொன்றது. இதன் மூலம் சிங்கூருக்கும் இதுதான் பாடமென்று எச்சரிக்கையும் விடுத்தது.

ஆனால் சிங்கூர் விவசாயிகள், எதிர்க்கட்சிகள் உதவியுடன் எதிர்ப்பைத் தீவிரப்படுத்தி, தொழிற்சாலையை முற்றுகையிட்டுப் போராடினார்கள். பலநாள் நீடித்த இந்தப் போராட்டத்தைப் பார்த்து டாடாவுக்கு பெருங்கோபம் வந்தது. உடனே தொழிற்சாலையை வேறு மாநிலத்திற்கு மாற்றுவதாகவும் "அறிவிக்கப்பட்ட தேதியில் நானோ கார் வெளிவரும்" எனவும் சபதம் செய்தார். அதுவரை உத்தரகண்டில் இருக்கும் டாடா மோட்டார் தொழிற்சாலையில் தற்காலிகமாக நானோ கார் தயாரிக்கப்படும் எனவும் அறிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த போலிக் கம்யூனிஸ்டு அரசு, ரத்தன் டாடாவிடம் மண்டியிட்டு, "போகாதே, போகாதே என் கணவா" என்று சென்டிமெண்டாகவும் புலம்பிப் பார்த்தது. விவசாயிகளை நந்திகிராம் போல அடக்குவதற்குத் துப்பில்லையென முறைத்துக் கொண்ட டாடா 'டூ' விட்டுவிட்டு நடையைக் கட்டினார். அப்போதும் டாடாயிஸ்டு கம்யூனிஸ்டுகள் மேல் எந்தத் தவறுமில்லையென பாராட்டுப் பத்திரம் அளித்துவிட்டுத்தான் சென்றார்.

ரத்தன் டாடவுக்கும், புத்ததேவ் பட்டாசார்யாவுக்கும் எந்த அளவு தோழமை உறவு இருந்ததோ அதற்குக் கடுகளவும் குறையாமல் டாடாவுக்கு மோடியுடனும் நட்பிருந்தது. மேற்கு வங்கம் கைவிட்டால் என்ன குஜராத் காத்திருக்கிறது என்று மோடி கம்பளம் விரித்தார். இமைப்பொழுதில் டாடா என்ற முதலாளிக்கும், மோடி எனும் பாசிஸ்டுக்கும் பேச்சுவார்த்தை நடந்து சடுதியில் ஒப்பந்தம் போடப்பட்டது.

இனிமேல்தான் இலட்ச ரூபாய்க்கு விற்கப்படும் நானோ கார் மக்களுக்கு பட்டை நாமம் போட்ட கதை வருகிறது. நானோ காரின் மலிவு விலைக்கும், அதை சாத்தியமாக்கிய டாடாவின் அளப்பரிய ‘சமூக’ சேவைக்கும் மயங்கிப்போன நடுத்தர வர்க்கம் தங்களிடமிருந்து பிடுங்கப்பட்ட பணம் டாடாவின் மலிவு விலை காருக்கு எப்படி போய்ச் சேருகிறது என்பதை தெரிந்து கொள்ளட்டும்.

10.8.2008 அன்று குஜராத் அரசுக்கும் டாடா நிறுவனத்திற்கும் போடப்பட்ட இந்த இரகசிய ஒப்பந்தம், யார், யாருக்குச் சேவை செய்கிறார்கள் என்பதைப் போட்டுடைக்கிறது.

குஜராத்தின் சதானந்த் இடத்தில் அமைய இருக்கும் டாடாவின் நானோ தொழிற்சாலைக்கு 1100 ஏக்கர் விவசாய நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. விவசாய நிலங்களை விவசாயமற்ற நடவடிக்கைகளுக்கு விற்கக்கூடாது என்ற விதி மீறப்பட்டு அதுவும் மலிவான விலையில் 400 கோடி ரூபாய்க்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பணமும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு எட்டு தவணைகளில் டாடா நிறுவனம் கட்டினால் போதும். விவசாய நிலங்களை இப்படி தொழிற்சாலைக்கு கொடுக்கும் பட்சத்தில் அதற்கென தனியாக பணம் கட்ட வேண்டுமென்ற விதியும் டாடவுக்காக ரத்து செய்யப் பட்டது.

2000 முசூலீம் மக்களை கொன்ற கும்பலுக்கு தலைமை தாங்கியிருக்கும் மோடிக்கு அப்பாவி விவசாயிகளை மிரட்டத் தெரியாதா என்ன? மேலும் மேற்கு வங்கம் போல அரசியல் ரீதியாக அணி திரள இயலாத அந்த அப்பாவிகள் தமது நிலத்தை கொடுத்துவிட்டு இன்றும் புழுங்குகின்றனர். அடுத்து இந்த நில விற்பனைக்கான பத்திரப்பதிவுக்கான 20 கோடி ரூபாயை மாநில அரசு ரத்து செய்து இலவசமாகப் பதிவு செய்து கொடுத்திருக்கிறது.

டாடா நிறுவனம் தொழிற்சாலையை அமைப்பதற்கு 9570 கோடி ரூபாயை குஜராத் அரசு 0.1% வட்டிக்குக் கொடுத்திருக்கிறது. இதில் சிங்கூரிலிருந்து, சதானந்த் பகுதிக்கு தொழிற்சாலையை மாற்றுவதற்கான செலவுப் பணம் 2330 கோடிரூபாயும் அடக்கம். இந்த 9570 கோடிப் பணம் இருபது வருடங்களுக்குப் பிறகு டாடா நிறுவனம் அதுவும் பல தவணைகளில் திருப்புமாம். தொழிற்சாலை அமைய இருக்கும் இடத்தில் தரமான சாலை, 14,000 கனமீட்டர் நீர், மின்வசதி இன்னபிற அடிப்படைக் கட்டுமான வசதிகளை 700 கோடி ரூபாயில் குஜராத் அரசே செய்து கொடுக்கும். மின் தீர்வை கட்டுவதற்கும் டாடாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு டாடாவின் நானோ கார் தொழிற்சாலைக்கு குஜராத் அரசு செலவு செய்யப்போகும் அல்லது இழக்கப்போகும் பணத்தின் மதிப்பு 30,000 கோடி ரூபாய்.

ஆக ஊரைக் கொள்ளையடித்து ஆடம்பரத் திருமணத்தில் கிடா வெட்டி மக்களுக்கு இலவச விருந்து அளிக்கும் கதைதான் இங்கும் நடந்திருக்கிறது. இவ்வளவு சலுகைகள், கடன் தொகை, இலவசமான அடிப்படை வசதிகள் எல்லாம் இருந்தால் நானோ காரை ஒரு இலட்சத்திற்குப்பதில் இலவசமாகவே அளிக்கலாமே? ஆம்! நானோ காருக்கு நாம் கொடுக்கும் ஒரு இலட்சத்திற்கும் பின்னால் நமது பணம் இரண்டு இலட்சம் ஏற்கனவே பிடுங்கப்பட்டிருக்கிறது.

இன்னும் எட்டு மாதங்களில் உற்பத்தியை ஆரம்பிக்கப் போகும் தொழிற்சாலையில் முதலில் ஆண்டுக்கு 2.50 இலட்சம் கார்களும், பின்னர் அது 5 இலட்சமாக உயர்த்தி உற்பத்தி செய்யப்படுமாம். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் திட்டமும் உண்டு.

விவசாயிகளுக்கும், சிறு தொழில் செய்யும் முதலாளிகளுக்கும், கல்விக்காக மாணவர்களும் கடனுக்காக வங்கி சென்றால் ஆயிரம் கேள்விகளையும், அலைக்கழிப்புக்களையும் சந்திக்கும் மக்கள் இருக்கும் நாட்டில் ஒரு முதலாளிக்கு மின்னல் வேகத்தில் எவ்வளவு பெரிய சலுகைகள், கடன்கள்?

மற்றபடி டாடாவுக்கும், குஜராத் அரசுக்கும் போடப்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தம் இரகசியமாகும். இதை எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரசு தனது அரசியலுக்காக வெளிக் கொணர்ந்திருக்கிறது. இப்படி அரசு இரகசியம் எப்படி வெளியே போனது என மோடியின் அரசு விசாரிக்கிறதாம். இந்த விவரங்கள் அனைத்தும் 12.11.2008 தேதியிட்ட இந்து பேப்பரில் வந்திருக்கிறது.

நானோவின் பின்னே இப்படி அப்பட்டமான கொள்ளையும், சுரண்டலும் இருப்பதுதான் அதன் மலிவு விலைக்குக் காரணம். பொதுத் துறைகளை தனியார் முதலாளிகளுக்காக நசிய விட்டு, பின்னர் தவிட்டு ரேட்டில் விற்பனை செய்யும் நாட்டில் ஒரு முதலாளிக்கு முப்பதாயிரம் கோடி இனாமென்றால் இந்த நாட்டை ஆள்வது யார்? தரகு முதலாளிகளா, இல்லை ‘மக்களால்’ தேர்ந்தெடுக்கப்பட்ட அரசா?

தனது விளம்பரத்தில் பல வசதிகள் இருப்பதாக புனைந்துரைக்கும் டாடாவின் நானோ கார் crash test எனப்படும் விபத்துச் சோதனையை மட்டும் செய்து சான்றிதழ் வாங்கவில்லையாம். இதன் பல உறுப்புக்கள், இணைப்புக் கருவிகள் மலிவான பிளாஸ்டிக்கில் செய்யப்பட்டிருப்பதால் டாடா இந்த சோதனைக்கு தயாராக இல்லை. அதாவது இந்தக் காரை ஒரு டூ வீலர் கூட மோதி பொடிப்படியாக நொறுக்கி விடலாம். நடுத்தர வர்க்கம் சுலபமான வழியில் பரலோகம் செல்லும் வசதியை நானோ ஏற்படுத்தித் தருகிறது.

உலகமெங்கும் பொருளாதார வீழ்ச்சிக்காக ஆட்டோமொபைல் தொழில் நசிந்து வரும் வேளையில் டாடாவின் நானோ கார் அறிமுகம் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம். மேலும் இந்தக் காரை ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யும் திட்டமும் டாடாவிற்கு இருக்கிறதாம்.

வெள்ளைக்காரனது உயிருக்கு மட்டும் அவ்வளவு எச்சரிக்கைகள்! அதைப் பரிசோதிப்பற்கு இந்தியனின் உயிர்!

2011 ஆம் ஆண்டு விபத்து சோதனை உட்பட எல்லா சோதனைகளிலும் வென்று ஐரோப்பாவின் மலிவான கார் என நானோ விற்கப்பட இருக்கிறதாம். வெள்ளைக்காரனது உயிருக்கு மட்டும் அவ்வளவு எச்சரிக்கைகள்! அதைப் பரிசோதிப்பற்கு இந்தியனின் உயிர்! பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் தங்களது சோதனைகளுக்கு இந்திய மக்களை எலிகளைப் போலப் பயன்படுத்துவது போல டாடாவும் செய்கிறது.

இந்தியாவின் பொதுப்போக்குவரத்திற்கு பயன்படும் வாகனங்கள் மொத்த வாகனங்களில் ஐந்து சதவீதமென்றால் இதைப் பயன்படுத்தும் மக்களின் சதவீதம் 70. ஆனால் மொத்த வாகனங்களில் 70 சதவீதத்தைப் பிடித்திருக்கும் தனியார் வாகனங்கள் அல்லது கார்கள் மக்களில் 5 சதவீதம் பேருக்குத்தான் பயன்படுகிறது. எனில் நானோவால் ஏமாறப்போவது பெரும்பான்மை மக்கள்தான்.

அமெரிக்காவின் போர்டு முதலாளிக்காக அங்கே பொதுப் போக்குவரத்து திட்டமிட்டே ஒழிக்கப்பட்டு கார் என்பது அத்தியாவசியப் பொருளாக மாற்றப்பட்டது. அப்போதும் திவால் நிலைக்கு வந்திருக்கும் போர்டு கம்பெனிக்கு அமெரிக்க அரசு நிவாரணத் தொகை வழங்கி காப்பாற்றுகிறது. இந்தியாவில் தொழிலை ஆரம்பிப்பதற்கே அரசு போட்டி போட்டுக்கொண்டு பணத்தை வழங்குகிறது. இரண்டிற்கும் பெரிய வேறுபாடில்லை.

இறுதியாக நானோ கார் மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்ட 24.3.08 திங்கட்கிழமை மேற்கு வங்கத்திற்கு ஒரு சோகமான நாளென்று சி.பி.எம்.டாடாயிஸ்டு அரசின் தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் நிருபம்சென் வருத்தப்பட்டுப் பேசியிருக்கிறார். மேற்கு வங்கம் சிங்கூரில் உற்பத்தி செய்யப்பட வேண்டிய நானோ கார் மோடியின் மண்ணிற்கு சென்றது குறித்துத்தான் இந்த வருத்தம். குஜராத் அரசு செலவிடப்போகும் முப்பதாயிரம் கோடி ரூபாயை டாடா என்ற முதலாளிக்காக மேற்கு வங்கம் செலவிட முடியவில்லையே என பாட்டாளிகளின் தோழன் - இல்லையில்லை - டாட்டாக்களின் தோழன் வருத்தப்படுகிறார். ஆனால் டாட்டாக்களை கைவிடாமல் இந்துக்களின் தோழன் உதவியிருப்பதால், டாட்டாக்களின் தோழன் அடுத்த தேர்தலில் இந்துக்களின் தோழனோடு கூட்டணி வைத்துக்கொண்டால் யாரும் வருத்தப்படத் தேவையில்லை.

கூட்டிக்கழித்துப் பார்த்தால் நானோ காரின் மலிவும், அரசியலும், திரைமறைவுச்சதிகளும், ஒன்றை வெளிப்படையாக தெரிவிக்கின்றன. அது இந்திய மக்களை அவர்களுக்கே தெரியாமல் சுரண்டுவதில் வலதும் இடதும் சேர்ந்து தரும் ஆதரவில் முதலாளிகளின் ஆட்சிதான் இங்கு நடக்கிறதென உணர்த்துகின்றது.

ஒரு இலட்ச ரூபாய்க்கு காரா என வாய் பிளப்பவர்களின் மூளைக்கு இந்த விளம்பரத்தையும் கட்டுரையையும் கொண்டு செல்லுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

டாடாவின் நானோ காருக்கு வினவின் இலவச ‘விளம்பரம்’!

நன்றி: வினவு

கருத்துகள் இல்லை: