செவ்வாய், 17 மார்ச், 2009

உங்களைப் பார்த்து நான் முஸ்லிமாக முடியுமா?

பசுமைப் பூத்த நினைவுகள்

உங்களைப் பார்த்து நான் முஸ்லிமாக முடியுமா? கேப்டன் அமீருத்தீன்

தேங்க்ஸ் டு : அந்நஜாத்

கொடிக்கால் பாளையம் மீலாத் விழாவில் நடந்த அந்த “தாடி” விவகாரம் அந்த ஊரையும் தாண்டி சுற்று வட்டாரத்தில் பரபரப்பாக சிறிது காலம் பேசப்பட்டது. அது ஒரு சர்ச்சையை கிளப்பியது என்றே சொல்ல வேண்டும். ஒரு விவாதப் பொருளாக ஆக்கப்பட்டு பலதரப்பிலும் பேசப்பட்டது. அது தொடர்பாக அப்போது “மறுமலர்ச்சி” “முஸ்லிம் முரசு” போன்ற பத்திரிகைகளில் கேள்விகள் கேட்கப்பட்டன். அதனால் அந்த விவகாரம் பல ஊர் மக்களும் அறிந்திட வாய்ப்பேற்பட்டது.

அந்த சூழ்நிலையில் திருத்துரைப்பூண்டியை அடுத்த “கட்டிமேடு” என்ற முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமத்தில் ஒரு மீலாத் விழா நடைபெற்றது. அந்த விழாவின் சிறப்புப் பேச்சாளர்கள் பட்டியலில் “அப்துல் ஹாதீ” என்ற பெயர் முதலிடம் பெற்றிருந்தது. அந்த சிறப்பு பேச்சாளரின் சிறப்பு என்னவென்றால், அவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர். அவரும், அவரது குடும்பத்தினரும் சில காலத்துக்கு முன் இஸ்லாத்தை தழுவி இருந்தனர். அவர் வேறு யாருமல்ல. தமிழக சட்டசபையில் அப்போது திமுக எம்.எல்.ஏ.வாக இருந்த ஒருவரின் மாமனார். அப்போது திருவாரூர் சட்டசபை தொகுதி தலித் சமூகத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி (Reserved constituency)யாக இருந்தது. அந்த தொகுதியிலிருந்து அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டவர் தாழை மு.கருணாநிதிஆவார். அதற்குமுன் நாகை ஒதுக்கப்ட்ட தொகுதியிலிருந்தும் திமுக எம்.பி.யாக அவர் பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அத்தகைய அரசியல் செல்வாக்கு மிக்கவரின் மாமனாரே நமது கதாநாயகர் அப்துல் ஹாதி அவர்கள்.

தாழை அவர்களே இஸ்லாத்தில் சேர்ந்துவிட்டதாக பத்திரிகைகளில் அப்போது செய்தி அடிபட்டது. கட்சி மேலிடம் அவரை அழைத்து விசாரித்ததாகவும். அதற்கு அவர் “இல்லை” என்று கூறியதாகவும் கூட அந்த பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன். ஆனால் அதுபற்றி தாழை அவர்கள் மறுப்பு அறிக்கை ஏதும் வெளியிடவில்லை. மெளனமே சாதித்தார். பெண்கள் விஷயத்தில் மெளனம் சம்மதத்திற்கு அறிகுறி என்பார்கள். ஆனால், பதவியிலிருக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் விஷயத்திலும் கூட - அவர்கள் ஆண்களாக இருந்தாலும் - அது உண்மையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. இறைவனே நன்கறிவான்.

ஆனால் தாழையின் மாமனார் ஒளிவு மறைவின்றி பகிரங்கமாக தனது மனமாற்றத்தை அறிவித்தார். “அப்துல் ஹாதி” என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார். “மனமாற்றத்துக்கு பெயர் மாற்றம் அவசியமா? என்று கேட்கப்பட்டபோது ஆம். என்னை பொறுத்தவரையில் அது அவசியமே. நான் யாருக்கும் அடிமையாக இருக்க விரும்பவில்லை. அந்த ஏக இறைவன் ஒருவனைத் தவிர. அதுவே இப்போது என் பெயர் என்று முழங்கினார். இஸ்லாமிய மாண்புகளைப் பேணி கடைபிடித்தார். ஹஜ் பயணமும் செய்து விட்டு அப்போது அவர் திரும்பி இருந்தார் என்றுமு் சொல்லப்பட்டது. ஆகவே, அந்த மகத்தான மனிதரை நேரில் காண்பதற்கும், அவரது பேச்சை கேட்பதற்கும், முடிந்தால் அவருடன் அளவலாவுவதற்கும் ஆசைக் கொண்டவனாய் நான் கட்டிமேடு மீலாத் விழாவிற்கு போனேன்.

தமிழகத்தில் அப்போது எம்.ஜி.ஆர். ஆட்சி நடந்துக் கொண்டிருந்தது. மத்தியில் மொராஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சியின் ஆட்சி நடந்துக் கொண்டிருந்தது. அவரது மந்திரி சபையில் வாஜ்பாய் உள்பட இன்றைய பா.ஜ.க. தலைவர்கள் பலர் இடம் பெற்றிருந்தனர். அந்த தருணத்தில்தான் தென்காசியை அடுத்த மீனாட்சிபுரம் என்ற கிராமத்தில் ஒரு சமூகப் புரட்சி ஏற்பட்டது. அது மொத்த இந்தியாவையும் தன்பால் ஈர்த்தது. அந்த கிராமத்தில் இருந்த தலித் மக்கள் அனைவரும் இஸ்லாத்தை தழுவியிருந்தனர். அது நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த மனமாற்றத்தை தடுப்பதற்கு அரசு இயந்திரங்கள் வெட்கமின்றி பகிரங்கமாய் செயல்பட்டன. மனம் மாறிய மக்கள் மீண்டும் மனம் மாறி திரும்பவும் பழைய ஜாதிக்கு திரும்பாவிட்டால் பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு முதலியவற்றில் அவர்களுக்கு அதுவரை அளிக்கப்பட்டு வந்த சலுகைகள் நிறுத்தப்படும் என்று அச்சுறுத்தப்பட்டனர். பழைய நிலைக்கு திரும்பிவிட்டால் கூடுதல் சலுகைகள் உண்டு என்றும் கூசாமல் கூறப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள், அதிகாரிகள் - ஏன் சில மந்திரிகள் உள்பட அந்த கிராமத்துக்கு விரைந்தனர். சங்கராச்சாரியார் உள்பட பல காவியுடை சாமியார்கள் அங்கு முகாமிட்டனர். இருப்பினும் அம்மக்கள் கொள்கையில் உறுதிக்காட்டினர். பத்திரிக்கையாளர்களை சந்தித்து தங்களின் நிலையை விளக்கினர். பேட்டி அளித்தனர். பட்டம் பதவிகளோ அல்லது பணம் காசோ எங்களை விலை பேச முடியாது என்று உணர்வு பூர்வமாய் உரக்க கூறினர். காவியுஐட ஊழியர்களை சந்திக்கவே அவர்கள் மறுத்தார்கள்.

அதனால் புண்பட்டு ஏமாற்றமடைந்தவர்கள் மீனாட்சிபுர மக்களின் மனமாற்றத்துக்கு தமிழக முஸ்லிம்களை குற்றம் பிடித்தார்கள். “பெட்ரோல் டாலரே” காரணம் என்றனர். கருப்பு பணம் அங்கு சரளமாக விளையாடியதாகவும் வீண்பழி சுமத்தினர். முஸ்லிம்களோ அதை மறுத்தனர். தலித் மக்கள் இஸ்லாத்தில் இணைந்ததில் தங்களுக்கு பங்கு இல்லை என்றனர். எங்களின் பொருளாதார நிலையே பரிதாபகரமாக இருக்கும் போது நாங்கள் எப்படி அவர்களுக்கு பணம் கொடுத்து மதமாற்றம் செய்ய முடியும் என்று மன்றாடினர். இஸ்லாத்தில் இணைந்த அந்த மக்களை எங்கள் சகோதர கூட்டுறவான ஜமாஅத்தில் சேர்த்துக் கொண்டோம். மார்க்க கடமைகளை அவர்கள் கற்றுக் கொள்வதற்கே அவர்களுக்கு உதவுகிறோம். அதை தவிர நாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என்று தமிழக முஸ்லிம் சமுதாயமும் அப்போதிருந்த அதன் தலைவர்களும் பாடம் படித்தனர். மார்க்கத்தை மாற்றாருக்கு துணிந்து கொல்லும் ஆற்றுலும், அதனால் ஏற்படும் எதிர்ப்பையும், இழப்பையும் ஏற்று செயலாற்றும் பக்குவமும், 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பஞ்சாப் மாநிலம் லாகூரை அடுத்துள்ள பட்டிகர்ஷி கிராமத்தைச் சேர்ந்த அப்துல் மஜீது என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட பித்அத்தான மீலாது விழா கூடாது என்ற நற்சிந்தனையும் தமிழக முஸ்லிம்களுக்கு தெளஹீது எழுச்சிக்கு பின்னரே விளைந்தது என்பதை இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆகவே, அன்றைய தினம் முஸ்லிம் சமுதாயமும், அதன் அன்றைய தலைவர்களும் அப்படி நடந்துக் கொணடதில் வியப்பேதுமில்லை.

இந்த சூழலில் நடந்த ஒரு மீலாத் விழாவில் உரையாற்ற வந்த முன்னால் தலித் சமூகத்தை சேர்ந்தவரும் இன்று இஸ்லாமிய சகோதரத்துவ பந்தத்தில் இணைந்துவிட்டவருமான “அப்துல் ஹாதீ” அவர்களின் சொற்பொழிவை கேட்பதற்கென்றே சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும் நெடும் தொலைவுகளிலிருந்தும் மக்கள் கட்டிமேட்டில் திரளாய் கூடியிருந்தனர். பள்ளிவாசலை அடுத்திருந்த திடலில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திடல் முழுதும் தட்டுப்பந்தல் போடப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. உட்காருவதற்கு “பென்ச்”சுகளும். நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன. பெண்களுக்கு தனி இட வசதியுமு் செய்யப்பட்டிருந்தது. அலங்கார வளைவுகளாலும் கலர் காகித தோரண்களாலும் கிராமமே அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டு விளங்கியது. நான் பந்தலின் நடுவில் ஒரு ஓரமாய் அமர்ந்திருந்தேன். என்னை அறிந்திருந்த ஊர்வாசிகள் சிலர் என்னை முன்னால் வந்து அமரும்படி கேட்டுக் கொண்டார்கள். அவர்களின் வேண்டுகோளை நிராகரித்தவனாய் நான் அங்கேயே அமர்ந்து இருந்தேன். போலீஸ் வேன் ஒன்று பிரதான வீதியில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தது எனக்கு வியப்பைத் தந்தது.

விழா காலை 10.30 மணியளவில் முறையாகத் துவங்கியது. தலைமை உரைக்குப் பின் சிலரின் சொற்பொழிவுகள் நிகழ்ந்தன. 12 மணியளவில் அப்துல் ஹாதி அவர்களை அறிமுகம் செய்து வைத்து அவரை பேசுவதற்கு தலைவர் அழைத்தார். அப்துல் ஹாதி அவர்களுக்கு அப்போது 55 வயதிருக்கும்.

நடுத்தர உயரம், கூர்மையான பார்வை, உழைப்பில் திரண்ட உருக்குலையாத மேனி. கறுமை நிறம், கறுமையும், வெண்மையும் கலந்து அழகிய தாடி. தூய வெள்ளை ஜிப்பாவும், வேஷ்டியும் அணிந்திருந்தார். துணியில் செய்யப்பட்ட தொப்பியும் போட்டிருந்தார். கூட்டத்தின் முன் அவர் வந்து நின்றதும் அங்கு ஒருவிதமான ஆர்வமும், சலசலப்பும் நிலவியது. சற்று நேரத்தில் அது அடங்கி காதுகளை தீட்டிக்கொண்டு மக்கள் நிசப்தமாயினர்.

ஆரம்பத்தில் அப்துல் ஹாதி அவர்கள் தமது இளமைக் காலத்தில் அனுபவித்த தீண்டாமை கொடுமைப் பற்றியும் விளக்கி பேசினார். கல்வி கற்பதால் ஜாதி ஒழியுமென்றும். பதவி வகிப்பதால் தீண்டாமை ஒழியுமென்றும் சொல்வதெல்லாம் கற்பனை; பகல் கனவு என்று கூறினார். சமூகப் புரட்சி ஒன்றே அந்த தடைகளை உடைக்கும். அந்த புரட்சியை நடத்திக் காட்டுவதற்கு இஸ்லாத்திற்கு மட்டுமே தெம்பும். பலமும் உண்டு என்று கூறினார். அதற்கு எடுத்துக்காட்டாக சில நாட்களுக்குமுன் மீனாட்சி புரத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நெகிழ்ச்கியுடன் எடுத்துரைத்தார்.

சில நாட்களுக்கு முன் மீனாட்சிபுரத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒரு தலித் மூதாட்டி இறந்துவிட்டார். அவருகு்கு அந்த ஊரில் உறவினர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் யாரும் இல்லை. வெளியூரிலிருந்து தூரத்து உறவனிர் சிலருக்கு செய்தி அனுப்பப்பட்டது. அவர்கள் வந்த மூதாட்டியின் உடலை அவர்களிடம் ஒப்படைத்தால் அவர்கள் ஊருக்கு எடுத்துப் போய் அவர்கள் ஜாதிமத சம்பிரதாயப் படி சடங்கு செய்து சுடுகாட்டில் எரிப்பதாகக் கூறினார்கள். முஸ்லிமாக மரித்த மூதாட்டியின் உடலை மாற்றாரிடம் கொடுக்க சம்மதிக்காத அவ்வூர் மக்கள், புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருப்பதால் இறந்தவர் உடலை என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தபோது செய்தி கேள்விப்பட்டு தென்காசி முஸ்லிம்கள் திரளாய் வந்தார்கள். அவர்கள் வீட்டுப் பெண்களே அங்கு வந்து அந்த மூதாட்டியின் உடலை குளிப்பாட்டி வாசனை திரவியங்கள் பூசி சடங்குகள் செய்ய, பின்னர் ஆண்கள் அந்த உடலை தென்காசி பள்ளிவாசலுக்கு கூட்டமாய் எடுத்துச் சென்று தொழுகை நடத்தி அங்குள்ள மைய வாடியில் அடக்கவும் செய்தனர். இறந்துபோன தாயின் உடலை தொடுவது தீட்டு என்று மகன் ஒதுங்கும் ஒரு சமூகத்தில் தென்காசி முஸ்லிம்களின் செயல் நிச்சயமாக சமூகப் புரட்சியை ஏற்படுத்தும் என்றார்.

தொடர்ந்து பேசிய அப்துல் ஹாதி அவர்கள் இப்படி ஒரு சமூகப்புரட்சி ஏற்பட முஸ்லிம்கள் கூட்டாக ஒரு காரணமாக இருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் தனிப்பட்ட வாழ்வில் அவர்கள் முஸ்லிம்களாக இல்லை என்பதும் உண்மை. சமூகப்புரட்சியை ஏற்படுத்தும் நீங்கள்தான் மீனாட்சிபுரம் வாழ் தலித்களும். ஏன் நானும் மனம் மாற காரணம் என்று இந்த அரசு கூறுகிறது. அப்படி சொல்லி உங்களுக்கு கவுரவமும். மரியாதையும் செய்கிறது. ஆனால் நீங்களோ அப்படி இல்லை என்று மறுக்கிறீர்கள். நானும், மீனாட்சிபுர தலித் மக்களும் மனம் மாறியதற்கு நாங்கள் காரணம் இல்லை என்று சத்தியம் செய்கிறீர்கள். ஆனால், இந்த அரசு உங்களை விட மறுக்கிறது. உங்களை நம்ப மறுக்கிறது. இல்லாத தகுதியை உங்களுக்கு அளிக்கிறது. நீங்களோ அதை ஏற்க மறுக்கிறீர்கள். உண்மையில் நீங்கள் சொல்லுவதுதான் சரி. நீங்கள் உண்மையைத்தான் பேசுகறீர்கள். நான் இந்த மேடையிலிருந்து இந்த அரசுக்கு சொல்லிக் கொள்கிறேன். இவர்களைப் பார்த்து நான் இஸ்லாத்திற்கு போகவில்லை. இவர்கள் உண்மையே பேசுகிறார்கள். இவர்களை விட்டுவிடுங்கள். நான்தான் கேட்கிறேன்; உங்களைப் பார்த்து நான் முஸ்லிமாக முடியுமா?

பின்னர் எப்படி, யாரால் முஸ்லிமானேன்? என்று கேட்கிறீர்களா? தெரிந்துக் கொள்ளுங்கள். நான் நபியவர்களின் வாழ்க்கை சரிதையைப் படித்தேன். சகாபா பெருமக்களின் வாழ்வை அறிந்தேன். குர்ஆனை பொருள் அறிந்து ஓதினேன்.

அதுதான் நான் முஸ்லிமாக மனம் மாறியதற்கு காரணம். இதோ என் முன்னால் உட்கார்ந்திருக்கும் இவர்களல்ல. முடிந்தால் நபியையும் சகாபா பெருமக்களையும் கைது செய்யுங்களேன். அப்படி கைது செய்யப் போனவர்களும் கூட வழியில் மனம் மாறி மதம் மாறினார்கள் என்றுதான் சரித்திரம் சொல்லுகிறது. வேண்டுமானால் முயற்சி செய்யுங்கள். பாவம் இந்த அப்பாவிகளை விட்டுவிடுங்கள்.

கரகொஸமும் தக்பீர் முழக்கமும் விண்ணைப் பிளந்தது. எதிரே இருந்த மக்கள் தலைக் கவிழ்ந்து காணப்பட்டார்கள். மேடையில் இருந்தவர்களுக்கும் அது சாட்டை அடியாக விழுந்தது. சிறிது நேரத்தில் முஹர் தொழுகைக்காகவும். மதிய உணவுக்காகவும் கூட்டம் கலைந்தது. முஹர் தொழுகைக்குப் பின் நான் பள்ளியிலேயே அப்துல் ஹாதியை சந்தித்தேன். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். அவரின் பேச்சு நியாயமானதுதான் என்றும் இளைஞர்களை அது உசுப்பும் என்றும் கூறினேன். அப்போது என்னை சற்று உற்று நொக்கிய அப்துல் ஹாதி அவர்கள் அன்புடன் எனது முதுகை தடவியவர்களாக மகனே. நீங்கள் தாடி வைத்தால் நன்றாக இருக்குமே! என்று கூறினார். அது என் மனதை “சுருக்” என்று தைத்தது. கொடிக்கால்பாளையத்தில் ஏற்படாத “குற்றவுணர்வு” ஏற்பட்டது. கட்டிமேட்டில் பட்ட அந்த குட்டுடன் ஊர் திரும்பினேன்.

நேர்வழியும், உயர்வும் அல்லாஹ் கொடுப்பதே!

(நபியே! பிரார்த்தித்து) நீங்கள் கூறுங்கள்; எங்கள் அல்லாஹ்வே! எல்லா தேசங்களுக்கும் அதிபதியே! நீ விரும்பியவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். நீ விரும்பியவர்களிடமிருந்து ஆட்சியை நீக்கி விடுகின்றாய். நீ விரும்பியவர்களை கண்ணியப்படுத்துகின்றாய். நீ விரும்பியவர்களை இழிவுபடுத்துகின்றாய். நன்மைகள் அனைத்தும் உன் கையில் இருக்கின்றன. நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன். (3:26)

(நபியே!) இவ்விஷயத்தில் உங்களுக்கு யாதொரு அதிகாரமுமில்லை. (அல்லாஹ்)அவர்களை (இஸ்லாமைத் தழுவும்படிச் செய்து) மன்னித்து விடலாம். அல்லது அவர்கள் அநியாயக்காரர்களாக இருப்பதனால் அவர்களை வேதனையுமு் செய்யலாம். (3:128)


கருத்துகள் இல்லை: