சனி, 28 மார்ச், 2009

ரூபாயின் வீழ்ச்சியும் அதன் விளைவுகளும்!

[பண வீக்கம் குறைந்து வரும் அதே வேளையில் ரூபாயின் வீழ்ச்சிக்குக் காரணம் என்ன? என்பது பலரது கேள்வியாக இருக்கிறது.

இந்தியா போன்ற வளரும் நாடுகளின் வருங்காலம் குறித்து சந்தேகம் நிலவுவதால், அன்னிய முதலீடுகள் அந்தந்த நாடுகளுக்கு திரும்பச் செல்லத் தொடங்கிவிட்டன. குறிப்பாக டாலர் மிக அதிக அளவில் அமெரிக்காவுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது.

இதனால் மற்ற உலக கரன்சிகளுக்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகமாகிறது.]

சர்வதேசச் சந்தையில் ஒருநாட்டின் மதிப்பு அந்நாட்டு பணத்தின் மதிப்பைப் பொருத்தே அமைகிறது. அமெரிக்க டாலருக்கு எதிராக ஒரு நாட்டின் பணம் எந்த அளவுக்கு மதிப்புடையது என்பதைக் கொண்டே பெரும்பாலும் சர்வதேச வர்த்தகங்கள் நடைபெறுகின்றன. பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைவது நாட்டின் பொருளாதாரத்தில் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

சமீபகாலமாக இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவது பெரும் கவலையளிப்பதாக உள்ளது. சிலமாதங்களுக்குமுன், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 50-க்கு மேல் சரிந்தது.

இதனை திடீரென ஒரேநாளில் ஏற்பட்ட வீழ்ச்சியாகக் கருதி விட முடியாது. சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் பொருளாதார நடவடிக்கைகளில் படிப்படியாக ஏற்பட்ட பின்னடைவுதான் இதற்கு முக்கியக் காரணம்.

உலகமெங்கும் பங்குச் சந்தைகள் வீழ்ந்ததன் தொடர்ச்சியாக இந்தியப் பங்குச் சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்கள் தாம் வைத்திருந்த இந்திய நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்தன.

மேலும் இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்களின் நேரடி முதலீடுகள் குறைந்து போனது. இவைபோன்ற காரணங்களால் இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு பெருமளவில் குறைந்தது.

கடன் சந்தையில் நிலவி வரும் அச்சம் காரணமாக இந்திய நிறுவனங்களால், வெளிநாடுகளில் கடன் வாங்க முடியாமல் போனது. இதனால் பணவரத்தும் குறைந்தது.

அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி இந்த விஷயத்தில் இந்திய நிறுவனங்களுக்குப் பல சலுகைகள் அளித்தாலும் நிலைமை எதிர்பார்த்த அளவுக்கு மேம்படவில்லை.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார தேக்கத்தின் விளைவாக இந்தியப் பொருள்களின் ஏற்றுமதியும் பெருமளவு குறைந்தது.

அதேசமயம், இறக்குமதியின் அளவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. இதனால் அன்னியச் செலாவணி வரத்து குறைவதுடன் இந்தியாவில் இருக்கும் அன்னிய முதலீடுகள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்பும் அதிகரித்துள்ளது.

உலகெங்கும் நிலவிவரும் பொருளாதார நிச்சயமற்ற நிலை காரணமாக அன்னியச் செலாவணி வைத்திருப்போர் பலரும் அதன் பாதுகாப்புக் கருதி அமெரிக்காவுக்கு (யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்பதற்கு ஏற்ப) எடுத்துச் செல்கின்றனர்.

அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் இந்த ஆண்டில் மட்டும் இதுவரையில் ரூ. 11,000 கோடியை பங்குச் சந்தையிலிருந்து திரும்பப் பெற்றுள்ளன.

இதுதவிர,
இந்தியா போன்ற வளரும் நாடுகளின் வருங்காலம் குறித்து சந்தேகம் நிலவுவதால், அன்னிய முதலீடுகள் அந்தந்த நாடுகளுக்கு திரும்பச் செல்லத் தொடங்கிவிட்டன. குறிப்பாக டாலர் மிக அதிக அளவில் அமெரிக்காவுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது.

இதனால் மற்ற உலக கரன்சிகளுக்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகமாகிறது.

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதால் ஏற்றுமதியாளர்களுக்கு நன்மை என்றாலும் ஏற்றுமதி அளவு குறைவதால் அவர்களும் மகிழ்ச்சியடைய முடியாது. இந்தியாவுக்குப் பணம் அனுப்பும் வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு இதனால் ஓரளவு நன்மை ஏற்படலாம். ஆனால் பொருளாதாரத் தேக்கநிலை காரணமாக ஊதியக் குறைப்பு, ஆள்குறைப்பு என்ற அச்சத்தில் உள்ளவர்களுக்கு இதனால் பெரிய பயன் இருக்க முடியாது.

அதேநேரத்தில் இந்தியாவில் இறக்குமதியாகும் பொருள்களின் விலைகள் இன்னும் அதிகரித்து விலைவாசி மேலும் உயரும்.

ஒருநாட்டின் கரன்சி மதிப்பு எந்த அளவுக்கு வலுவாக உள்ளது என்பதன் அடிப்படையில்தான் வெளிநாட்டு நிறுவனங்கள் அங்கு முதலீடு செய்ய முன்வரும். அந்தவகையில் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு வருவதும் குறைந்து விடும். இதனால் உள்நாட்டில் பொருளாதார ரீதியாகப் பல்வேறு நெருக்கடிகள் ஏற்படும்.

ஏற்கெனவே வெளிநாடுகளில் அதிக அளவு கடன் வாங்கியுள்ள இந்திய நிறுவனங்கள் கடன், வட்டியைத் திரும்பச் செலுத்த சிரமப்படும். ஆக மொத்தத்தில் ரூபாயின் மதிப்புக் குறைவு, நாட்டின் பொருளாதார நலனுக்கு ஏற்புடையதல்ல என்பது மட்டும் உண்மை.

மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை, சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி போன்றவை இந்தியாவில் இப்போது பொருளாதார தேக்கநிலையாகத் தலைகாட்டத் தொடங்கியுள்ளது. இது பொருளாதார வீழ்ச்சியாக உருவெடுக்கக் கூடிய ஆபத்தும் உள்ளது.

பட்ஜெட் பற்றாக்குறை 6 சதவீதமென இடைக்கால பட்ஜெட்டில் நிதி அமைச்சர் மதிப்பிட்டுள்ளார். கடன் பத்திரங்கள், உர மானியங்களும் இதில் சேர்க்கப்படவில்லை. அவ்விதம் சேர்த்தால் பற்றாக்குறை 11 சதவீதத்துக்கு மேல் உயரும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தேர்தலை மையமாக வைத்து வரிச்சலுகை, கூடுதல் வரிவிதிப்பு ஏதுமில்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அடுத்து வரும் புதிய அரசுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது என்பது நிச்சயம்.

நன்றி: சு. வெங்கடேஸ்வரன், தினமணி

கருத்துகள் இல்லை: