வியாழன், 12 மார்ச், 2009

அமெரிக்கா:வீடு விலை 10 மடங்கு சரிவு

நம் நாட்டில் ஐம்பது ரூபாய்க்கு ஒரு சதுர அடி காலி மனை கூட வாங்க முடியாது. ஆனால் அமெரிக்காவில் 50 ரூபாய்க்கு ஒரு குடியிருப்பையே வாங்கிவிடலாம். ஆம் நிதிநெருக்கடி காரணமாக, டெட்ராய்ட் நகரில் குடியிருப்புகளின் விலை வரலாறு காணாத வகையில் சரிவடைந்துள்ளது.


நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக, அடமானமாக உள்ள குடியிருப்புகளை விற்று நிலுவையில் உள்ள வீட்டுக் கடனை செலுத்த அமெரிக்கர்கள் முன்வந்துள்ளனர். கிடைத்தவரை லாபம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் குடியிருப்புகளின் விலை கடுமையாக சரிந்துள்ளது.

டெட்ராய்ட் நகரில் 1,800 குடியிருப்புகளை விற்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் விலை ரூ.5 லட்சத்துக்குள் தான். ஒரு காலத்தில் இதன் மதிப்பு ரூ.50 லட்சமாக இருந்தன. அதாவது 10 மடங்கு சரிவடைந்துள்ளது.

ஒரு சில குடியிருப்புகள் ரூ.50க்கும் கீழான விலையிலும் கிடைக்கிறதாம்.

ஆனால் இது உரிமை யாளருக்கு செலுத்தும் தொகை மட்டுமே. வங்கிக்கான கடனை வாங்குபவரே செலுத்த வேண்டும்.

“வீடு விலை சரிந்துள்ளதால் பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட அயல்நாடுகளைச் சேர்ந்தவர்களும் அமெரிக்காவில் முதலீட்டு நோக்கத்துக்காக குடியிருப்பு வாங்குவதில் அதிக அக்கறை செலுத்தி வருகின்றனர்.


அதுவும் இவர்கள் ஒன்றல்ல இரண்டல்ல, 50, 100, 1000 என மொத்தமாக குடியிருப்பு வேண்டும் என்று கேட்கிறார்கள். அண்மையில் ஒரு வாடிக்கையாளருக்கு ஒரே நாளில் 30 குடியிருப்புகளை வாங்கிக் கொடுத்தேன்’’ என ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள மைக் ஷன்னான் தெரிவித்துள்ளார்.

டெட்ராய்ட் நகரில் குடியிருப்புகளின் சராசரி விற்பனை மதிப்பு கடந்த 2003ம் ஆண்டில் ரூ.24.28 லட்சமாக இருந்தது. கடந்த ஆண்டில் ரூ.4.5 லட்சமாக சரிந்த இது, இந்த ஆண்டு ரூ.3.13 லட்சமாகக் குறைந்துள்ளது.

கருத்துகள் இல்லை: