செவ்வாய், 17 மார்ச், 2009

எது மெய்ஞானம்?

எம்.பி.ரஃபீக் அஹ்மத்

[ திருகுர்ஆன் இந்த உலகிற்கு அருளப்படுவதற்கு முன்புவரை உலகமே மாயம் - வாழ்வே மாயம் - எல்லாமே மாயம் - அனைத்தும் பொய் என்ற நம்பிக்கை எங்கும் வியாபித்திருந்தது.

திருகுர்ஆன் வந்தது - சாக்ரடீஸ், அரிஸ்டாட்டலின் (
Aristotle 350 BC) இந்த வேதாந்தத்தை தவிடு பொடியாக்கியது. இந்த வலையில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த மனித குலத்திற்கு இந்த வசனத்தின் மூலம் அறைகூவல் விட்டது. அந்த வசனம் இதுதான்.

"மேலும், வானத்தையும், பூமியையும், இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (வீணென்பது) காஃபிர்களின் எண்ணமாகும்; காஃபிர்களுக்கு (நரக) நெருப்பின் கேடுதான் உண்டு." அல்குர்ஆன் 38:27 ]

அறிவுலகில் கிரேக்க அறிஞர்களுக்கு தனி இடம் இருந்து வருகின்றது. சரித்திரத்தின் பக்கங்களை புரட்டிப் பார்ப்போமேயேனால் முதலில் அறிவு, ஞானம் ஆகியவற்றின் நீரூற்று, கிரேக்கிலிருந்துதான் தொடங்கியது என்று பலர் நினைக்கின்றார்கள். இங்கே பிறந்த 'சாக்ரடீஸ்' (Socrates Athens in 469 BC) அறிவுலக தந்தை என்றும் 'பிளாட்டோ' (Plato)வை அறிவுலக மேதை என்றும் அழைக்கின்றார்கள்.

சாக்ரடீஸின் பார்வையில் மனிதன் தான் ஆராயவேண்டிய பொருளே தவிர இந்த வையகம் அல்ல. உன்னையே நீ அறிந்துகொள் என்ற கோட்பாட்டை சாக்ரடீஸ்தான் உலகத்திற்கு அறிமுகப்படுத்தினான். நாம் காணும் அல்லது அனுபவிக்கும் இந்த உலகம் உண்மையில் இல்லாத ஒன்றாகும், என்பது அவனுடைய தத்துவமாகும். நாம் காணும் உலகம் ஒரு கற்பனை உலகம் - இது நிஜமல்ல. உண்மையான ஒரு நிஜ உலகின் ஒரு நிழல் உலகமாகும். உணர்வு பூர்வமாக பெறப்படும் அறிவு நம்பத்தகுந்த அறிவே அல்ல. காதுகளை அடைத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு நம் கற்பனை உலகில் மூழ்கிப் பெறப்படும் அறிவே உண்மையான அறிவாகும் என்பது சாக்ரடீஸின் கொள்கையாகும். இந்த தத்துவம் தான் இந்தியாவிற்குள் புகுந்து இந்து வேதங்களில் இடம்பெற்று 'வேதாந்தம்' என்று அழைக்கப்படுகிறது.

ஆக இந்து மதத்தின் கண்ணோட்டத்தில் நாம் வாழும் இந்த உலகம் (பிராக்கரதி) மாயையாகும். இது பிரம்மா காணும் கனவாகும். இது ஈஸ்வரனின் லீலையாகும். இங்கு நடைபெறும் எல்லாமே நாடகமாகும். எதுவுமே இங்கு உண்மையில்லை. மாறாக உண்மையின் மாதிரியாகும். இங்கு யாரும் ஆண்டானுமில்லை, அடிமையுமில்லை. கடலும் இல்லை, மலையும் இல்லை. எல்லாமே அகப்பார்வையின் கோளாராகும். இந்தப்பார்வைதான் நம் நாட்டில் ஒருவித சோம்பேறித்தனம் நிலவுவதற்கு இந்தப் பார்வைதான் அடிப்படைக் காரணமாகும்.

உலகை வெறுத்தல் - இவ்வுலகத்தை துறத்தல் தான் உண்மையான தெய்வ பக்திக்கு அடையாளம் - போதிமதிகளும் - துரவிகளும் மனித குலத்தில் உயர்ந்தவர்கள் என்ற உணர்வு உண்டானதற்கு இந்த நம்பிக்கைதான் அடிப்படை காரணமாகும். இதே கருத்துதான் 'ஈரானிய தஸவ்வுஃப்' என்ற போர்வையில் நம் நாட்டு முஸ்லிம்களிடமும் புகுந்து தொற்றிக்கொண்டது. ஆன்மீக பாடல்கள் முனாஜாத் கீர்த்தனைகள் என்ற பெயரால் முஸ்லிம்களை எல்லாவிதத்திலும் வியாபித்துக்கொண்டது. ஆக உலகம் என்பது ஒரு அருவெறுக்கத்தக்க பொருள் என்ற எண்ணம் முஸ்லிம்களிடமும் பரவி விட்டது.

திருகுர்ஆன் இந்த உலகிற்கு அருளப்படுவதற்கு முன்புவரை உலகமே மாயம் - வாழ்வே மாயம் - எல்லாமே மாயம் - அனைத்தும் பொய் என்ற நம்பிக்கை எங்கும் வியாபித்திருந்தது.

திருகுர்ஆன் வந்தது - சாக்ரடீஸ், அரிஸ்டாட்டலின் (Aristotle 350 BC)இந்த வேதாந்தத்தை தவிடு பொடியாக்கியது. இந்த வலையில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த மனித குலத்திற்கு இந்த வசனத்தின் மூலம் அறைகூவல் விட்டது. அந்த வசனம் இதுதான்.

"மேலும், வானத்தையும், பூமியையும், இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (வீணென்பது) காஃபிர்களின் எண்ணமாகும்; காஃபிர்களுக்கு (நரக) நெருப்பின் கேடுதான் உண்டு." அல்குர்ஆன் 38:27

இந்த வசனத்தின் மூலம் இந்த அகிலத்தை இந்த உலகத்தை மாயை என்றும் வீணானது என்றும் எண்ணுபவர்களை திருகுர்ஆன் காபிர்கள் மறுப்பவர்கள் என்று பிரகடனம் செய்கிறது. மனிதனை தனிமைப்படுத்தும் மூலையில் முடங்கச் செய்யும் முடவராக்கும் சன்னிதானங்களின் மடங்களையும் அவர்களின் வேதியியல் நம்பிக்கைகளையும் தஸவ்வுஃபின் அஸ்திவாரங்களயும் இந்த ஒரு ஆயத்தின் மூலம் இறைவன் நிர்மூலமாக்கி விட்டான்.

இது ஒரு சாதாரண வசனமல்ல. இந்த உலகை மாயை என்று பிரச்சாரம் செய்பவர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட போர் பிரகடனமாகும். இதை உறுதிப்படுத்தும் வகையில் இறைவன் இன்னொரு வசனத்தில் மூலம் இந்த உண்மைக்கு மெருகூட்டுகின்றான்.

"வானங்களையும், பூமியையும் அல்லாஹ் உண்மையைக் கொண்டே படைத்துள்ளான் - நிச்சயமாக இதில் முஃமின்களுக்கு அத்தாட்சி இருக்கிறது." அல்குர்ஆன் 29:44

அல்லாஹ் இவ்வுலகை உண்மையைக் கொண்டே படைத்துள்ளான். கற்பனையைக் கொண்டல்ல. இந்த வையகம் போலியானதோ பொய்யானதோ அல்ல. அறிவுள்ள மக்களுக்கு இவ்வ்வசனத்தில் சிறந்த ஒரு அத்தாட்சியுள்ளதாக இறைவன் சுட்டிக்காட்டுகிறான். இவ்வுலகை உண்மை என்று நம்புவர்களை இறைவன் இவ்வசனத்தில் விசுவாசிகள் என்று அழைக்கிறான். இவ்வுலகை போலியானது - வீணானது என்பதை ஆணித்தரமாக மறுக்கும் வகையில் மேலும் ஒரு வசனத்தை அருளியுள்ளான். அந்த வசனம்:

"மேலும், வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை. இவ்விரண்டையும், சத்தியத்தைக் கொண்டேயன்றி நாம் படைக்கவில்லை. எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்." அல்குர்ஆன் 44:38,39

இந்த உலகை மாயை என்று நினைக்காமல் உண்மை என்று நம்பி அதில் உள்ள ஒவ்வொரு பொருளையும் ஆழமாக ஆராய இறைவன் கட்டளையிடுகின்றான். இனி வரும் வசனங்களில் இறைவன் அறிவிற்கும் ஆராய்சிக்கும் முக்கியத்துவம் தரவேண்டும் என்று வலியுறுத்துகின்றான்.

"வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உாியது. இன்னும் அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்." அல்குர்ஆன் 3:189

"நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன"அல்குர்ஆன் 3:190

"அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்;. வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, ''எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை, நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!" (என்றும் பிரார்த்திப்பார்கள்)" அல்குர்ஆன் 3:191

இப்பொழுது சொல்லுங்கள் சகோதரர்களே! உலகமே மாயம் என்று நம்பும் வேதாந்தத்தால் எப்படி இறைவனை அடைய முடியும். இப்படிப்பட்ட நம்பிக்கைகளிலிருந்து அல்லாஹ் காப்பற்றுவனாக!


thanks to :www.readislam.net

கருத்துகள் இல்லை: