திங்கள், 9 மார்ச், 2009

சிண்டுமுடியும் தினமலர்!

பதினொரு முட்டாள்கள் விளையாட பதினோராயிரம் முட்டாள்கள் வேடிக்கை பார்க்கிறார்கள்' என்று ஒரு அறிஞர் ஒரு காலத்தில் வர்ணித்த கிரிக்கெட் இன்று உலகின் பெரும்பாலோரை தன்வயப்படுத்தியுள்ளதை யாரும் மறுக்கமுடியாது. கிரிக்கெட் மட்டுமல்ல எந்த விளையாட்டாக இருந்தாலும் அதில் மதமும், அரசியலும் கலக்கக்கூடாது என்பதுதான் முஸ்லிம்களின் நிலையாகும். சில ஆண்டுகளுக்கு முன் மும்பையில் பாகிஸ்தான் அணி விளையாட அனுமதிக்க மாட்டோம் என்று சிவசேனா கொக்கரித்தும், மைதானத்தை சேதப்படுத்தியதும் நினைவிருக்கலாம். அப்போதெல்லாம் வாய்திறக்காத தினமலர், லாகூரில் இலங்கை அணி தாக்கப்பட்டதும் வாய்திறந்துள்ளது.

லாகூரில் இலங்கை அணி தாக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கதே! எந்த முஸ்லிமும், எந்த முஸ்லீம் அமைப்புகளும் இதை ஆதரிக்கவில்லை. அவ்வளவு ஏன் பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாராப் இதை வன்மையாக கண்டித்துள்ளார்.

லாகூரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள்மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் ஒட்டுமொத்த பாகிஸ்தானுக்கே வெட்கக்கேடான விஷயம். இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று முஷாரப் கூறியுள்ளார். இந்த செய்தியை வெளியிட்டுவிட்டு தனது'டவுட் தனபாலு' பகுதியில் தினமலர் பின்வருமாறு எழுதுகிறது;

டவுட் தனபாலு; ஓவரா துடிக்கிறதா பார்த்தா, 'ஏண்டா இந்திய வீரர்கள் வந்தபோதெல்லாம் சொம்மா இருந்துட்டு, இலங்கை வீரர்களை போய் அடிச்சீங்க'ன்னு கேக்குற மாதிரில்ல இருக்கு!

இப்படி எழுதி எதோ இந்திய வீரர்களை தாக்குவது முஷாரப் மற்றும் பாகிஸ்தானியர்களின் திட்டம்போல தினமலர் விஷம் கக்கியுள்ளது. இதுவரை எத்துணையோ மேட்ச்கள் இந்தியா அணி பாகிஸ்தானில் விளையாடியுள்ளது. அப்போதெல்லாம் அவர்கள்மீது சிறு துரும்பு பட்டிருக்குமா? மேலும், இலங்கை அணியினர் மீதான தாக்குதலை தடுக்கும் முயற்சியில் நான்கு காவலர்கள் கொல்லப்பட்டார்களே! அது ஏன் தினமலருக்கு தெரியவில்லை? தீவிரவாதிகளிடமிருந்து இலங்கை அணியினரை பத்திரமாக காப்பாற்றிய டிரைவரும் ஒரு முஸ்லிம்தான் என்பதும் தினமலரின் கழுகு கண்களுக்கு தெரியாதது ஏன்? உயிர் தப்பிய இலங்கை வீரர்கள் தங்களை காப்பாற்றிய டிரைவரை தங்கள் நாடுதிரும்பிய பின்னும் நன்றியோடு நினைவுகூர்ந்து பேட்டியளித்தது தினமலருக்கு ஏன் தெரியவில்லை? இலங்கை அணியினர் மீதான தாக்குதலுக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் சம்மந்தம் இல்லாததால்தான்,' பாகிஸ்தான் அரசு கேட்டுக்கொண்டால் எங்கள் வீரர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவோம்' என்று இலங்கை அமைச்சர் சொன்னது தினமலருக்கு ஏன் தெரியவில்லை?

எங்கோ ஒரு முஸ்லீம் தீவிரவாதத்தில் ஈடுபட்டால் ஒட்டுமொத்த முஸ்லீம் சமுதாயத்தையே குற்றப்பரம்பரையாக சித்தரிப்பதும், ஒருநாட்டிலுள்ளதீவிரவாதிகள் தாக்குதலுக்காக, ஒரு நாட்டையே தீவிரவாத நாடாக சித்தரிப்பதும் தினமலர் வகையறாக்களுக்கு கைவந்த கலைபோலும். இனியாவது தினமலர் நடுநிலை பேணி பத்திரிகை தர்மத்தை பேணட்டும்.

கருத்துகள் இல்லை: