அபூசாலிஹ்
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியக் குடியரசின் 14வது நாடாளுமன்றம் ஒரு வழியாக முற்று பெற்றிருக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
2004ஆம் ஆண்டு மே17 ஆம் தேதி கூட்டப்பட்ட அந்த நாடாளு மன்ற புதிய அவை நன்னம்பிக்கைகளை விதைத்தது. உற்சாகத்தை ஊட்டியது. 1991லிருந்து 1999 வரை இருந்த அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலை, 1999ருந்து 2004 வரை நிகழ்ந்த, மதவாத, பிற்போக்கு கொள்கை கொண்ட, பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் முனை மழுங்கிய, முதுகெலும்பில்லாத, ராணுவத் துறையில் கூட வரலாறு காணாத ஊழல் செய்து சாதனை படைத்த பாஜக என்ற திறமையற்ற ஆட்சி மக்களுக்கு வழங்கிய தொடர் வேதனைகளுக்கு ஒத்தடம் கொடுக்கும் விதமாக 2004ல் அமைந்த காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமையும் என நாட்டு மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் நடைபெற்றதோ காங்கிரஸ், தோல்(!) போர்த்திய பாஜக ஆட்சியாகவே முடிவு பெற்றிருப்பதை எண்ணி அனைவரும் வேதனை அடைந்திருக்கிறார்கள்.
எவ்வித அரசியல் பின்னணியும் இல்லாதவர், எப்போதும் சட்டைப் பையில் ராஜினாமா கடிதத்தை வைத்துக் கொண்டே நடமாடுபவர், மனதுக்கு நியாயமில்லாத ஒன்றை செய்யுமாறு கட்சி மேடம் நிர்பந்தம் செய்தால் ராஜினாமா செய்யத் தயங்காதவர் என்றெல்லாம் பெருமை யோடு பேசப்பட்ட பொருளியல் மேதை டாக்டர் மன்மோகன்சிங் தன் மீது நாட்டு மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை மட்டுமின்றி தன்னை தலைமை அமைச்சராக்கிய காங்கிரஸ் மீதான நம்பிக்கையையும் தவிடுபொடியாக்கி னார்.
அரசியல் பின்னணி இல்லாதவர் என்று பேசப்பட்ட அவர் அமெரிக்க பின்னணி கொண்டவராக விளங்கியது குரூரமான நகைச்சுவை.
விடுதலைப் பெற்ற காலத்திருந்தே இந்நாட்டில் முஸ்லிம்கள் அனைத்துத் துறைகளிலும் அடைந்த பின்னடைவு தன்னை மிகவும் வேதனையடையச் செய்வதாக மன்மோகன்சிங் தனது ஆட்சிக் காலத்தின் துவக்கத்தில் கூறினார். வளர்ச்சியின் கனிகள் அதன் பலன்கள் முஸ்ம்களை சென்றடைய வேண்டும் என வயுறுத்தினார். சச்சார் கமிட்டியின் பரிந்துரைகள் வெளியிடப் பட்டபோது இவை வெறும் வசனங்கள் தான் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டனர்.
சச்சார் கமிட்டியின் பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைபடுத்தப்பட்டு கொண்டே.......யிருக்கின்றன என்ற நேர்முக வர்ணனை, ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் அறிக்கை அரசாங்க அலமாரியில் தூசுபடிந்து தூங்கிக் கொண்டிருக்கிறது. பாபர் மஸ்ஜித் தகர்ப்பு சதி குறித்து விசாரணை செய்துவரும் லிபர்ஹான் ஆணையத்தை அடுத்து எத்தனை முறை ஒத்தி வைக்கலாம் என ஆலோசனை செய்து வருகிறது.
லிபர்ஹான் ஆணையத்தை ஒத்தி வைக்கலாம், ரங்கநாத் கமிஷன் அறிக்கையை ஒளித்து வைக்கலாம். நாடாளுமன்ற தேர்தலை ஒத்தி வைக்கவும் முடியாது. மக்களின் தீர்ப்பை ஒளித்து வைக்கவும் முடியாது. இதோ நாடாளுமன்றத் தேர்தல் வந்தே வந்து விட்டது. மக்கள் இவர்களின் பரீட்சை பேப்பர்களை திருத்தத் தயாராகிறார்கள்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் முதல் இரண்டு ஆண்டுகளில் மட்டும் நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான பாஜக முக்கல் முனகலுடன் அவை அலுவல்களை முடக்க முயன்றது. அதன் பிறகு எவ்வளவோ எம்பி எம்பி பறந்தும் அந்த ஊர்க் குருவியால் பருந்தாக முடிய வில்லை. சங்பரிவார் தலைமைப் பீடத்திற்கு மீண்டும் விருந்தாக மட்டுமே முடிந்தது. விளைவு மீண்டும் ராமர் கோவில், நாமபூஜை, சுண்டல் பஜனை, பொரி, சர்க்கரைப் பொங்கல் என்கிற ரீதியில் அவர்களது தேர்தல் பிரச்சார வியூகம்(!) வகுக்கப்பட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியின் பணியை ஒரளவு சரியாகச் செய்தவர்கள் இடதுசாரி கள்தான். தாராளமயக் கொள்கையில் உள்ள குளறுபடிகளை எதிர்த்த இடதுசாரிகள் இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து சண்டமாருதம் புரிந்தனர். நிஜமான எதிர்க் கட்சிகளாக கடமையாற்றி யவர்கள் இடதுசாரிகள்.
2008ல் நாடாளுமன்றம் வெறும் 40 நாட்கள் மட்டுமே நடந்தது. இந்த ஐந்து வருடத்தில் ஆயிரத்து எழுநூற்றி முப்பத்தெட்டு மணி 45 நிமிடங்களும், நாடாளுமன்றம் செயல்பட்டுள்ளது.
இதில் 423 மணி நேரம் வீணடிக்கப் பட்டுள்ளது. அவையில், கேள்வி கேட்ப தற்கு கையூட்டு வாங்கிய 10 பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். தொகுதி மேம்பாட்டு நிதியில் முறைகேடு செய்த நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவை அனைத்திலும் கணிசமாக இடம் பெற்றவர்கள் பாஜகவினரே. மனைவியை அழைத்து செல்வதாக வேறொரு பெண்னை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்ற மோசடியிலும் பாஜக எம்.பி ஒருவர் ஈடுபட்டார்.
கட்சி தாவல்கள் அதிகமாக நிகழ்ந்ததும் 14வது மக்களவையில்தான். இதற்காகவே 39 பேரின் பதவி பறிக்கப் பட்டது. பெரும்பான்மையை நிரூபிக்க கையூட்டு கொடுக்கப்பட்டதும் கையூட் டாக கொடுக்கப்பட்ட பணம் நாடாளு மன்றத்தில் கட்டுகட்டாக காட்டப் பட்டதும் நாடாளுமன்ற மாண்பினை குலைத்தன.
காங்கிரஸைப் பொறுத்தவரை வெறும் காகிதப்புயாகவே இருந்துவிட்டு தேர்தல் களத்தை சந்திக்க வருகிறது.
இடதுசாரிகளோ சந்தர்ப்பவாத கட்சிகளை அழைத்து கூட்டணி அமைத்து வருகின்றன. மக்கள் வாக்கு உரிமை என்ற வலுவான ஆயுதத்தோடு காத்திருக்கிறார்கள். அந்த ஆயுதம் காங்கிரஸை மட்டுமல்ல அதனை தூக்கி சுமப்பவர்களையும் சந்திக்க தயாராகிறது.
thanks to : tmmk.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக