பிலிபித் (உ.பி.): மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார். இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் தலையை வெட்ட வேண்டும் என்று அவர் பேசியதால் தேர்தல் ஆணையம் அவரிடம் விளக்கம் கேட்டுள்ளது. வருண் காந்தி பேச்சால் பாஜகவுக்கு பெரும் தலைவலியாகியுள்ளது.
மேனகா காந்தியின் மகனான வருண் காந்தி, பாஜக சார்பில் பிலிபித் தொகுதியில் போட்டியிடுகிறார். லோக்சபா தேர்தலில் அவர் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும். தனது மகனுக்காக தான் வழக்கமாக போட்டியிட்டு வெல்லும் பிலிபித்தை விட்டுக் கொடுத்துள்ளார் மேனகா காந்தி.
இந்த நிலையில் பிலிபித் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட வருண் காந்தி அங்கு பேசுகையில், இது கை (காங்கிரஸ் சின்னத்தைக் குறிப்பிட்டு) அல்ல. தாமரையின் சக்தி. இது இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் தலைகளை வெட்டி எறியும், ஜெயம் ஸ்ரீராம் என்று பேசினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், இந்துக்கள் அனைவரும் பாஜகவுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். மற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்.
ஒரு இந்துவுக்கு எதிராக யாராவது கையை உயர்த்தினால், அவரது கையை இந்த வருண் காந்தி வெட்டுவான்.
வருண் காந்தி ஒரு புயலைப் போல. அடுத்த சஞ்சய் காந்திதான் இந்த வருண் காந்தி என்றார் வருண் காந்தி.
வருண் காந்தி புயலோ என்னவோ அவரது பேச்சு பெரும் புயலைக் கிளப்பி விட்டு விட்டது.
முஸ்லீம்கள் குறித்து அவர் பேசியது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர் பேசியிருப்பது உண்மையாக இருந்தால் அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிலிபித் தொகுதியில் மேனகா காந்தி ஐந்து முறை எம்.பியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரித்து விட்டனர்-வருண் காந்தி:
இதற்கிடையே தான் பேசியது வேறு, அதைத் திரித்து செய்திகள் வெளியாகி விட்டன என்று வருண் காந்தி கூறியுள்ளார். வருண் காந்தி விவகாரம் குறித்து பாஜக கருத்து ஏதும் கூறவில்லை.
காங்கிஸ் பாய்ச்சல்:
வருண் காந்தியின் பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது மோசமான பேச்சு மட்டுமல்ல, சட்டவிரோதமானதும் கூட. ஆனால் இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது. அந்தக் கட்சியின் கொள்கையே இதுதான். அந்தக் கட்சியைச் சேர்ந்தவர் வருண் காந்தி. அவரது பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது, கடும் கண்டனத்துக்குரியது இது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக