அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அறிவித்தார்கள்: -
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, ‘நீர் இரவெல்லாம் நின்று வணங்குவதாகவும் பகலெல்லாம் நோன்பு நோற்பதாகவும் எனக்குத் தெரிவிக்கப்பட்டதே! (அது உண்மைதானா?) என்று கேட்டார்கள்.
நான், ‘ஆம்’ என்று பதிலளித்தேன்.
(அதற்கு) நபி (ஸல்) அவர்கள், ‘அவ்வாறு செய்யாதீர்! (சிறிது நேரம்) தொழுவிராக! (சிறிது நேரம்) உறங்குவீராக! (சில நாள்கள்) நோன்பு நோற்பீராக! (சில நாள்கள் நோன்பை விட்டு விடுவீராக!
ஏனெனில், உம்முடைய உடலுக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு;
உம்முடைய கண்ணிற்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு;
உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு;
உம் துணைவிக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு.
உம்முடைய வயது நீளக்கூடும். (அப்போது உம்மால் தொடர் நோன்பும் தொடர் வழிபாடும் சாத்தியப் படாமல் போகலாம். (எனவே) ஒவ்வொரு மாதமும் (ஏதேனும்) மூன்று நாள்கள் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும். ஏனெனில், ஒவ்வொரு நற்செயலுக்கும் பிரதியாக அது போன்ற பத்து மடங்கு (நற்பலன்)கள் உண்டு. (இதன்படி மாதத்தில்) மூன்று நாள்கள் நோன்பு நோற்பது மாதம் முழுவதும் நோற்றதற்குச் சமமாகும்.) எனவே, இது காலமெல்லாம் நோற்றதாக அமையும்’ என்று கூறினார்கள்.
ஆனால், நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக் கொண்டேன்; அதனால் என் மீது சிரமம் சுமத்தப்பட்டது. நான் ‘(இறைத்தூதர் அவர்களே!) இதற்கு மேலும் என்னால் முடியும்’ என்றேன்.
நபி (ஸல்) அவர்கள், ‘அவ்வாறாயின் வாரத்திற்கு மூன்று நோன்பு நோற்றுக் கொள்க’ என்றார்கள்.
நான் (மறுபடியும்) சிரமத்தை வலிந்து ஏற்றுக் கொண்டேன். அதனால் என் மீது சிரமம் சுமத்தப்பட்டது. ‘இதற்கு மேலும் என்னால் முடியும் (இறைத்தூதர் அவர்களே!)’ என்றேன்.
நபி(ஸல்) அவர்கள், ‘அவ்வாறாயின் இறைத்தூதர் தாவூத் அவர்கள் நோற்றவாறு நோன்பு நோற்றுக் கொள்வீராக’ என்றார்கள்.
‘இறைத் தூதர் தாவூத் அவர்களின் நோன்பு எது?’ என்று கேட்டேன்.
‘(ஒரு நாள்விட்டு ஒரு நாள் நோற்பதால்) ஆண்டில் பாதி நாள்கள் நோற்பதாகும்’ என்று பதிலளித்தார்கள். ஆதாரம் : புகாரி.
அபூ ஜுஹைஃபா (ரலி) அறிவித்தார்கள்: -
சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்களையும் அபுத்தர்தா (ரலி) அவர்களையும் நபி (ஸல்) அவர்கள் (ஒப்பந்தச்) சகோதரர்களாக ஆக்கினார்கள். எனவே, சல்மான் (ரலி) அவர்கள் அபுதர்தா (ரலி) அவர்களை (அவரின் இல்லத்திற்குச் சென்று) சந்தித்தார்கள். அப்போது (அபுத்தர்தாவின் துணைவியார்) உம்முத் தர்தா (ரலி) அவர்களை அழுக்கடைந்த ஆடையுடன் சல்மான் கண்டார்கள்.
அப்போது சல்மான் (ரலி) அவர்கள், ‘உங்களுக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள்.
அதற்கு உம்முத் தர்தா (ரலி), ‘உங்கள் சகோதரர் அபுத்தர்தாவிற்கு உலகமே தேவையில்லை போலும்’ என்றார்.
பிறகு, அபுத்தர்தா (ரலி) அவர்கள் வந்து சல்மான் (ரலி) அவர்களுக்காக உணவு தயார் செய்தார்கள்.
பிறகு ‘சல்மானே! நீங்கள் சாப்பிடுங்கள்! நான் (நஃபில்) நோன்பு நோற்றுள்ளேன்’ என்றார்கள்.
அபுத்தர்தா அதற்கு சல்மான் (ரலி) அவர்கள், ‘நீங்கள் சாப்பிடாத வரை நான் சாப்பிடமாட்டேன்’ என்றார்கள். எனவே, (சல்மானுடன்) அபுத்தர்தா (ரலி) அவர்கள் (இரவுத் தொழுகைக்காக) நிற்கப் போனார்கள்.
அப்போது சல்மான் (ரலி) அவர்கள், ‘தூங்குங்கள்’ என்றார்கள்.
எனவே, அபுத்தர்தா(ரலி) அவர்கள் தூங்கிவிட்டார்கள். பிறகு, தொழுவதற்காக எழுந்தார்கள்.
அப்போதும் சல்மான் (ரலி) அவர்கள், ‘தூங்குங்கள்’ என்றார்கள்.
இரவின் கடைசி நேரம் ஆனதும் சல்மான் (ரலி) அவர்கள் ‘இப்போது எழுங்கள்’ என்றார்கள். பிறகு அவர்கள் இருவரும் தொழுதார்கள்.
அப்போது சல்மான் (ரலி) அவர்கள் அபுத்தர்தா (ரலி) அவர்களிடம்,
‘உங்களுடைய இறைவனுக்காகச் செய்ய வேண்டிய கடமைகள் உங்களுக்கு உள்ளன.
மேலும், உங்கள் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உங்களுக்கு உள்ளன.
உங்கள் குடும்பத்தாருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உங்களுக்கு உள்ளன.
எனவே, ஒவ்வொருவருக்கும் அவரவருக்குச் சேர வேண்டிய உரிமைகளை வழங்குங்கள்’ என்று கூறினார்கள்.
பின்னர் அபுத்தர்தா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் சென்று (சல்மான் அவர்கள் தமக்குச் சொன்னதை கூறினார்கள். அதற்கு) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், ‘சல்மான் உண்மையே சொன்னார்’ என்றார்கள். ஆதாரம் : புகாரி.
மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நாம் பெறும் படிப்பினைகள் : -
1) முஃமினான ஒருவர் தம் இல்லறத்தை துறந்து நான் பகல் முழுவதும் நோன்பு நோற்று இரவு முழுவதும் நின்று வணங்கப் போகிறேன் என்று செல்ல இயலாது
2) ஒரு முஃமின் தன்னுடைய உடலுறுப்புகளுக்கு பொறுப்புதாரியாவார். அவற்றிற்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய அவர் கடமை பட்டுள்ளார்.
3) முஃமினான ஒருவர் தம் மனைவியர், குடும்பத்தார்களுக்கு மற்றும் விருந்தினருக்கு செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து விலகி துறவறம் பூண அனுமதியில்லை.
4) ஒவ்வொரு நற்செயலுக்கும் பிரதியாக அது போன்ற பத்து மடங்கு நற்பலன்கள் உண்டு
5) மாதத்தில் மூன்று நாள்கள் நோன்பு நோற்பது மாதம் முழுவதும் நோற்றதற்குச் சமமாகும்.எனவே, இது வருடம் முழுவதும் நோன்பு நோற்றதாக அமையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக