செவ்வாய், 3 மார்ச், 2009

15வது பொதுத் தேர்தல் இந்திய ஜனநாயகத்திற்கு சோதனைக் களம்



உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.


71 கோடியே 40 லட்சம் மக்கள் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்த உள்ளனர். ஐந்து கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி முதல் மே 13ஆம் தேதி வரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.


545 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தல் ஏப்ரல் 16ல் முதல் கட்டமாக 124 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும். ஏப்ரல் 23ல் இரண்டாவது கட்டமாக 141 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், ஏப்ரல் 30ஆம் தேதி மூன்றாவது கட்டமாக 107 தொகுதிகளுக்கும் மே 7ஆம் தேதி நான்காவது கட்டமாக 85 தொகுதிகளுக்கும், மே 13ஆம் தேதி ஐந்தாவது கட்டமாக 86 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.


இந்தத் தேர்தல் இதுவரை இல்லாத அளவு 40 லட்சத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகளையும், 21 லட்சம் பாதுகாப்பு படை வீரர்களையும், 8 லட்சத்து 28 ஆயிரம் வாக்குச்சாவடிகளையும் அமைத்து தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகிறது.


அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் உள்ள மொத்த மக்கள் தொகையின் அளவைவிட நம் இந்தியத் திருநாட்டின் வாக்காளர்களின் எண்ணிக்கை அதைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்களாட்சியின் மாண்பு பேணப்பட்டு வருவதாக கூறப்படும் நம்நாட்டில் 13வது மற்றும் 14வது நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சில சம்பவங்கள் நாட்டு மக்களை வேதனையில் ஆழ்த்தின.


வன்முறைகளிலும் பொருளாதார முறைகேடு களிலும் நாளுக்கு நாள் முன்னிலை பெற்றுவரும் இந்திய அரசியல் அரங்கம் எதிர்வரும் காலத்திலாவது இழந்த மாண்பினை மீட்கும் முனைப்பில் இறங்க வேண்டும்.


தேர்தல் களத்தில் ஒழுக்க மாண்புகளைக் காக்க அரசியல் கட்சிகளும், அரசுகளும் சூளுரை ஏற்க வேண்டும்.


தேர்தல் களத்தில் காட்சிகளும் கோலங்களும் மாறி வருகின்றன. காங்கிரஸ் கட்சி தனது அரசியல் கூட்டணி வலுவுடையதாக அமைய என்ன விலை கொடுக்கவும் தயாராகி வருகிறது. தனது தீவிர வைரியாகவும், மேற்கு வங்காளத்தில் காங்கிரஸுக்கு தீராத தலைவயாக இருந்த மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க அந்தக் கட்சி முனைப்பு காட்டி வெற்றியும் பெற்றிருக்கிறது.


உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் காஙகிரஸ் செய்த துரோகத்தின் விளைவாக அக்கட்சி மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அது முலாயம் சிங்கை பற்றிப் பிடித்து கரையேறலாம் என கனவு காண்கிறது. காங்கிரஸ்கார அண்ணாச்சி பர்ஹான் கமிஷன் என்னாச்சி? என உத்தரப்பிரதேச மக்கள் கேட்கத்தான் போகிறார்கள். அந்த முழக்கம் இந்தியாவெங்கும் எதிரொக்கத்தான் போகிறது.


குஜராத்தின் மோடி திடீரென்று மகாராஷ்ட்ர அரசியல் அரங்கில் ஆர்வம் காட்டுகிறார். மகாராஷ்டிராவின் பவார், பிரதமர் பதவிக்கு தான் தயார் என குட்டையைக் குழப்புகிறார்.


ஒரிஸ்ஸாவின் நவீன் பட்நாயக்கும், ஆந்திராவின் சந்திரபாபு நாயுடுவும் பாஜகவுடன் கைகுலுக்க தயாராக இல்லை.


கூட்டணிகளால் கழற்றி விடப்பட்ட பாஜகவும், இருக்கின்ற கூட்டணியை இறுகப் பற்றிக் கொண்டு காங்கிரசும் தேர்தலை சந்திக்க உள்ளன. இடது சாரிகள் அரசியல் சந்தியில் நிற்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.


பாஜகவோ அரசியல் அநாதையாக மாறிவிட்டது. காங்கிரஸ் அரசியல் மறுவாழ்வுக்கு ஏங்கித் தவிக்கிறது. இந்நிலையில் இந்திய ஜனநாயக வரலாற்றில் இந்தத் தேர்தலுக்கு மிகுந்த முக்கியத் துவம் உண்டு.


ஜூலை 2ம் தேதி உதயமாகப் போகும் 15வது நாடாளுமன்றத்தையும் புதிய அரசையும் தேர்ந்தெடுக்க பாரம்பரிய பெருமைமிக்க இந்தியா தயாராகிறது. அது இந்திய ஜனநாயகத்திற்கு மீண்டுமொரு சோதனைக் களம்.

கருத்துகள் இல்லை: