அகமதாபாத்: சோராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் டிஐஜி டிஜி வன்ஸாரா, இன்னொரு போலி என்கவுன்டர் வழக்கில் சிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
சோராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் முக்கியக் குற்றவாளியான வன்ஸாரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் டிஐஜி பதவியிலிருந்தும் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்னொரு போலி என்கவுன்டர் வழக்கில் அவர்சிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
வன்ஸாரா அகமதாபாத் நகர குற்றப் புலனாய்வுப் பிரிவு துணை ஆணையராக இருந்தபோது 2003ம் ஆண்டு சாதிக் ஜமால் மேத்தர் என்பவர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது போலி என்கவுன்டர் என தற்போது சலசலப்பு எழுந்துள்ளது.
பவநகரைச் சேர்ந்த சாதிக், 2003ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி அகமதாபாத்தின் நரோடா பகுதியில் உள்ள காலக்ஸி சினிமா தியேட்டருக்கு அருகே குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அப்போது இதுகுறித்து பேட்டி அளித்த வன்ஸாரா, சாதிக் ஒரு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி. முதல்வர் நரேந்திர மோடி மற்றும் விஎச்பி தலைவர் பிரவீன் டொகாடியா ஆகியோரைக் கொல்ல திட்டமிட்டிருந்தார். இதுகுறித்துத் தகவல் கிடைத்தவுடன் அவரைப் பிடிக்க போலீஸார் விரைந்தபோது தாக்க முயன்றார். இதையடுத்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் இறந்தார் என்று கூறியிருந்தார்.
பின்னர் சாதிக்கின் கூட்டாளிகளைப் பிடிக்க முடியவில்லை என்று கூறி இந்த வழக்கை மூடி விட்டனர்.
இந்த நிலையில் தனது சகோதரரை போலி என்கவுன்டர் மூலம் கொன்று விட்டதாக கூறி குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
கடந்த 2007ம் ஆண்டு மே மாதம் இந்த வழக்கை அவர் தொடர்ந்தார். இந்த வழக்கில் தற்போது நீதிபதி அகில் குரேஷி முன்னிலையில் இறுதிக் கட்ட விசாரணை தொடங்கியுள்ளது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கு தொடர்பாக மீடியாக்கள் செய்தி வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரி ஒருவரின் சார்பில் அவரது வக்கீல் வேண்டுகோள் வைத்தார். ஆனால் அதை நீதிபதி ஏற்கவில்லை. ஆகஸ்ட் 6ம் தேதிக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கையும் சிபிஐக்கு விட குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால் வன்ஸாரா வசமாக சிக்குவார் என கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக