சனி, 10 ஜூலை, 2010

சி.பி.ஐ விசாரணைக் கோரும் ஸாதிக் ஜமால் போலி என்கவுண்டர் வழக்கு

அஹ்மதாபாத்:2003 குஜராத்தில் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின் இதுவரை சுமார் 24 போலி என்கவுண்டர்கள் நடத்தப்பட்டுள்ளன.

ஷொராஹ்ப்தீன், அவர் மனைவி கவுசர் பீவி, இஸ்ரத் ஜகான், துளசிராம் ஆகிய பிரபல போலி என்கவுண்டர் மட்டும் தான் பெரும்பாலானோருக்கு தெரியும்.

2003ம் ஆண்டு குஜராத் போலீசாரால் நடத்தப்பட்ட ஸாதிக் ஜமால் என்கவுண்டரை மிக குறைவானோரே அறிவர்.

கடந்த செவ்வாய்கிழமையன்று, இவ்வழக்கைத் துரிதப்படுத்துமாறும், சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கக் கோரியும் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஸாதிக் ஜமாலின் அண்ணன் ஷபீர் ஜமால் மேஹ்தா என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட இம்மனுவில், செப்டம்பர் 2009 க்குப் பிறகு இவ்வழக்கு முகவரியே இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், ஆதலால் இவ்வழக்கை சி.பி.ஐ. வசம் மாற்றப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இவ்வழக்கை துரிதப்படுத்தக் கோரியுள்ள அவர், 2008ல் சி.பி.ஐ. விசாரணைக்கு உயர்நீதிமன்றம் ஒப்புக்கொண்டும், இதுவரை இவ்வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் கூறியிருந்தார்.

முன்னதாக,ஜனவரி 2003ல் ஸாதிக் ஜமால்(25) போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டார். இவருக்கு தாவூத் இப்ராஹிமுடனும், சோட்டா ஷகீலுடனும் தொடர்பு இருப்பதாகவும், மோடி, அத்வானி, தொகாடியா உள்ளிட்ட பல தலைவர்களை ஜமால் கொலை செய்ய திட்டமிட்டதாகவும் வழக்கம் போல காரணங்கள் கூறப்பட்டன.

மனுதாரரின் கூற்றுப்படி, தன் தம்பி ஸாதிக் ஜமால் தீவிரவாதியில்லை என்றும், கொல்லப்படுவதற்கு முன் ஏற்கனவே போலீசாரின் பாதுகாப்பில் தான் அவர் இருந்துள்ளதாகவும்,ஷொராஹ்ப்தீன் போலி என்கவுண்டரில் தற்போது சிறையில் இருக்கும் டி.ஜி. வன்சாரா மற்றும் குஜாராத் கலவரத்தில் கலவரக்காரர்களை ஏவிவிட்ட பாண்டே ஆகிய அதிகாரிகளின் சதிச் செயல்களினால் தான் ஜமால் கொல்லப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இவ்வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
TOI

கருத்துகள் இல்லை: