தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை
"தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு இடஒதுக்கீடு இன்னும் ஓர் ஆண்டுக்கு செல்லும் என்றும் இந்த ஒரு ஆண்டுக்குள் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட ஆணையத்திடம் முறையிட்டு மண்டல் அறிக்கையின் அடிப்படையில் இடஒதுக்கீட்டின் அளவை தமிழக அரசு நியாயப்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்றும் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வரவேற்கிறது.தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தினர் என 88 விழுக்காடு மக்கள் வாழும் நிலையில் தற்போது நடைமுறையில் உள்ள 69 சதவிகித இடஒதுக்கீடு போதுமானதாக இல்லை. உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பில் வழங்கியுள்ள தீர்ப்பை பயன்படுத்தி தமிழகத்தில் சிறுபான்மை முஸ்லிம்கள் உட்பட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உள்ள இடஒதுக்கீடு வரம்பை உயர்த்த தேவையான ஆவணங்களை சமர்பித்து உரிய உத்தரவை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் தமிழக அரசு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோருகின்றது.
இடஒதுக்கீடு 50 சதவிகிதத்தை மிகைக்கக் கூடாது என்பது நிரந்தரமானது அல்ல என்பதையும் தேவையிருப்பின் அது 50 விழுக்காட்டை விட அதிகமாக இருக்கலாம் என்பதையும் உணர்ந்து உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான பிரிவு அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. சமூக நீதியை சரியான முறையில் நிலைநிறுத்த இந்தத் தீர்ப்பு பெரிதும் உதவும் என்று நம்புகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக