சனி, 31 ஜூலை, 2010

நஷ்டஈடு வழங்க 30 பில்லியன் டாலர் சொத்துக்களை விற்கும் பிரிட்டிஷ் பெட்ரோலியம்!

லண்டன்,ஜுலை31:அமெரிக்கா அருகே மெக்சிகோ வளைகுடாவில் ஏற்பட்ட கச்சா எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நஷ்டஈடு வழங்கவும் பல ஆயிரம் சதுர கி.மீ. பரப்பில் கடலில் சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் சுமார் 30 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை விற்க பிரிட்டிஷ் பெட்ரோலியம் முடிவு செய்துள்ளது.

இந்த நிறுவனத்தின் கடலடி எண்ணெய் கிணற்றின் வாய்பகுதியில் கருவியில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் அமெரிக்கா அருகே 1,50,000 சதுர கி.மீ. கடல் பரப்பில் பெட்ரோலியம் விரவி நிற்கிறது. இதனால் லட்சக்கணக்கான கடல் வாழ் உயிரினங்கள் பலியாகியுள்ளன.அமெரிக்காவின் தென் பகுதிகளில் சுமார் 950 சதுர கி.மீ பரப்பில் மீன்பிடித் தொழிலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அந்நாட்டின் 4 மாகாணங்களில் சுற்றுலாத் தொழிலும் முடங்கிப் போய் பல ஆயிரம் பில்லியன் டாலர்கள் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு நஷ்டஈடு தர வேண்டியது பிரிட்டிஷ் பெட்ரோலியம் தான் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறிவிட்டார்.

மேலும் கடல் பகுதியில் உள்ள எண்ணெய்யை நீக்க வேண்டிய பொறுப்பும் இந்த நிறுவனத்தையே சாரும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.

மேலும் பிரிட்டிஷ் பெட்ரோலியத்திடம் நஷ்டஈடு கோரி அமெரிக்கா உள்பட பல நாடுகளில் ஆயிரக்கணக்கான வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.

அடுத்த 7 ஆண்டுகளுக்கு இந்த நிறுவனத்துக்கு கடலில் எண்ணெய் எடுக்க தடை விதிக்கும் புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் பல அமெரிக்க காங்கிரஸ் நாடாளுமன்ற எம்பிக்கள் கோர ஆரம்பித்துள்ளனர்.

இதனால் ஏற்படு்ம் எதிர்கால இழப்பைக் கருத்தில் கொண்டு முடிந்தவரை மிக வேகாக நஷ்டஈட்டை தந்துவிட இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதற்கு சுமார் ரூ. 1,50,000 கோடி அளவுக்கு பணம் தேவைப்படும் என்பதால் பிரிட்டிஷ் பெட்ரோலியம் உலகின் பல பகுதிகளில் உள்ள தனது கிளைகளை, கச்சா எண்ணெய் கிணறுகளை, சொத்துக்களை விற்க முடிவு செய்துள்ளது.

வியட்நாமின் உள்ள நாம் கான் சோன் எரிவாயு நிறுவனத்தில் உள்ள தனது முதலீடான சுமார் ரூ.5,000 கோடியைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. இதில் உள்ள தனது பங்குகளை வேறு நிறுவனத்திடம் விற்க எச்எஸ்பிசி வங்கியின் உதவியை பிரிட்டிஷ் பெட்ரோலியம் நாடியுள்ளது.

இதை வாங்க இந்திய பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி, பெட்ரோ வியட்நாம், மலேசியாவின் பெட்ரோனாஸ், தாய்லாந்தின் பிடிடிஇபி ஆகிய நிறுவனங்கள் போட்டி போட ஆரம்பித்துள்ளன.

மேலும் அபாச்சி கார்பரேசன் நிறுவனத்தில் உள்ள தனது ரூ. 35,000 கோடி மதிப்புள்ள பங்குகளையும் பிரிட்டிஷ் பெட்ராலியம் விற்கிறது.

அதே போல கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான போட்ஸ்வானா, தான்சானியா, நமீபியா, மலாவி, ஜாம்பியா ஆகியவற்றில் உள்ள தனது ஆயிரக்கணக்கான பெட்ரோலிய விற்பனை நிலையங்களையும் விற்க பிரிட்டிஷ் பெட்ரோலியம் முடிவு செய்துள்ளது.

இதை வாங்க இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனமும் எஸ்ஸார் ஆயில் நிறுவனமும் முயன்று வருகின்றன. ரிலையன்ஸ் சுமார் ரூ.2,000 கோடிக்கு இதை வாங்கத் தயாராக உள்ளதாகத் தெரிகிறது. ஆனால், எஸ்ஸார் ஆயில் நிறுவனம் ரூ2,500 கோடி தர முன் வந்துள்ளது.

அதே போல வெனிசுவேலாவில் இரு எண்ணெய் நிறுவனங்களில் உள்ள தனது முதலீட்டை ரஷ்யாவின் டிஎன்கே நிறுவனத்திடம் விற்கவும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் பேச்சு நடத்தி வருகிறது.

மேலும் அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள மாபெரும் புருதோயி பே எணணெய் கிணறுகள், அர்ஜென்டினாவில் உள்ள பான் அமெரிக்கன் எனர்ஜி நிறுவனம், பாகிஸ்தான், கொலம்பியா, எகிப்தில் உள்ள முதலீடுகளையும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் விற்கலாம் என்று தெரிகிறது.

இதற்கிடையே இதுவரை சுமார் ரூ.1,300 கோடியளவுக்கு இந்த நிறுவனம் நஷ்டஈடு வழங்கிவிட்டது. மேலும் வரும் ஆகஸ்ட் மாதத்தில் மேலும் ரூ. 300 கோடியை நஷ்டஈடாகத் தரப் போவதாகவும் அறிவித்துள்ளது.

நஷ்டஈடுகள், கசிவால் ஏற்பட்ட நஷ்டம், எண்ணெய்க் கசிவைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றால் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு சுமார் ரூ. 1,60,000 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதை சமாளிக்கவே உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் உள்ள தனது 30 பில்லியன் டாலர் அதாவது ரூ.1,50,000 கோடி மதிப்புள்ள தனது பங்குகளை இந்த நிறுவனம் வி்ற்கவுள்ளது.

இதற்கிடையே எண்ணெய் கசிவு பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. கசிவு ஏற்பட்ட எண்ணெய் கிணறை நிரந்தரமாகவே மூடிவிடவும் முடிவு செய்துள்ளது.

இந்த எண்ணெய் கசிவைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் பங்குகளின் மதிப்பு 40 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உலக பெட்ரோலிய வரலாற்றிலேயே மாபெரும் நஷ்டத்தை உருவாக்கிய இந்தக் கசிவு,பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத் தலைவர் டோனி ஹேவர்டின் பதவியையும் காவு வாங்கிவிட்டது. அவருக்குப் பதிலாக பாப் டட்லியை அந்த நிறுவனம் புதிய தலைவராக நியமித்துள்ளது.

கருத்துகள் இல்லை: