புதன், 7 ஜூலை, 2010

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் தாமதம் வேண்டாம்

இந்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு இவ்வாண்டு நடைபெற்று வருகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரியாக பதிவு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை காலகாலமாக எழுப்பப்பட்டு வருகிறது.

1931&ல் சாதிவாரி கணக்கெடுப்பு கடைசியாக நடத்தப்பட்டது. அதன் பிறகு அது கைவிடப்பட்டது. நாடு விடுதலையடைந்த பிறகு 60 ஆண்டுகளுக்கு மேலாக சமூகநீதி தளத்தில் அவசியமான இந்தக் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் இந்தியாவில் ஒவ்வொரு சமூக அமைப்பின் பின்புலம் அவர்களது வளர்ச்சி, பின்னடைவு, அவர்களது வளர்ச்சிக்கான அத்தியாவசிய இலக்கு போன்றவை குறித்து ஆய்வு செய்ய முடியும்.

ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கோரிக்கை குறித்து சிறிதும், அக்கறையின்றி அனைத்துக்கட்சிகளுமே செயல்பட்டன. துல்லியமான சாதிக் கணக்கெடுப்புகள் அரசு ஆவணங்களில் இல்லாததால் நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்ட அழுத்தப்பட்ட மக்களின் அவலநிலை குறித்து நிரந்தரத்தீர்வு என்ன-? உடனடி தீர்வு கூட எட்ட முடியவில்லை.

தலித் மக்கள் குறித்து கணக்கெடுப்பு இதுவரை தொய்வில்லாமல் பதிவு செய்யப்பட்டு வருவது மட்டுமே ஒரு ஆறுதல்.

சாதி அடிப்படையில் கணக்கெடுப்பா? இது அடுக்குமா? முறையா? சரியாகுமா? என வழக்கம்போல பிற்போக்குத் தனத்தை தூக்கிப்பிடிக்கும் ஆதிக்க சக்திகள் கண்டனம் தெரிவித்தன.

ஒரு புறம் கண்டனம் தெரிவித்துக் கொண்டே மறுபுறத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிரான நீதிமன்றங்களில் தங்களது சித்து விளையாட்டினை தொடருகிறார்கள்.

பிற்படுத்தப்பட்ட சாதிகளின் துல்லியப் பட்டியல் இல்லாதபோது எந்த அடிப்படையில் அவர்களுக்கு குறிப்பிட்ட சதவீத இட ஒதுக்கீட்டினை வேலைவாய்ப்பிலும், கல்வியிலும் வழங்க திட்ட மிடுகிறீர்கள்? என நயவஞ்சகத்துடன் வாதப்போரை தொடுக்கிறார்கள்.

கடந்த அரை நூற்றாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கைகள் புறம் தள்ளப்பட்டது போல் இனியும் அனுமதிக்கக்கூடாது என சமூகநீதிகோரும் இயக்கங்கள் வெகுண்டு எழுந்தன.

சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் தேவை என முழக்கங்கள் எழுந்ததைக் கண்ட மத்திய அரசு அது ஆலோசனைகளை மேற் கொள்ள மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.

அந்தக்குழு அனைத்துக் கட்சிகளிடமும் ஆலோசனை கேட்கப் போவதாக அறிவித்துள்ளது. அறிவித்ததோடு நில்லாமல் அடுத்து அந்த குழு செய்த ஒரு செயல் அந்தக் குழுவின் வேகம்(!) குறித்த ஒரு தீர்மானமான கணிப்பை நோக்கி நாட்டிலுள்ள நடுநிலையாளர்களை இழுத்துச் சென்றுள்ளது.

அதாவது அனைத்துக் கட்சிகளின் கருத்தினை கேட்க கடிதங்கள் வரையப்போவதாக பிரணாப் முகர்ஜி தெரிவித்திருக்கிறார். தமிழக முதல் அமைச்சர் கருணாநிதியை சந்தித்த பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்திருப்பது அனைவரின் சந்தேகத்தை அதிகரித் திருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பினால் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் சமூக நிலை குறித்து துல்லிய தகவல்கள் பதிவு செய்யப்படுமானால் சமூகங்களுக்கு இடையே நலம் நாடு திட்ட ங்களை செயல்படுத்த முடியும் என்ற நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பினை தாமதப்படுத்த நினைப்பது நிச்சயம் நாட்டு மக்களால் பொறுத்துக் கொள்ள முடியாதது. இதனை தவிர்க்க வேண்டியது மத்திய அரசின் கடமை.

-அபுசாலிஹ்


கருத்துகள் இல்லை: