செவ்வாய், 13 ஜூலை, 2010

தோப்புத்துறையில் கட்டப்பட்டிருக்கும் புதிய ஜாமியா பள்ளிவாசலுக்கு தமுமுக தலைவர் வாழ்த்துரை

பேரன்புக்குரிய தோப்புத்துறை சகோதர சகோதரிகளுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

தோப்புத்துறையில் கட்டப்பட்டிருக்கும் புதிய ஜாமியா பள்ளிவாசலின் திறப்பு விழா செய்தியறிந்து பெரிதும் மகிழ்கிறேன். கடந்த 1999 முதல் நான் தோப்புத்துறைக்குப் பலமுறை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்திருக்கிறேன். எனவே தோப்புத்துறை மக்களுக்கும், எனக்கும் இடையில் அறிமுகம் தேவையில்லை. அந்த நெருக்கத்தினால்தான் தோப்புத்துறை மக்கள் என்னிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தார்கள்.

தோப்புத்துறையில் பழம்பெரும் பள்ளிவாசலை இடித்து, புதிய பள்ளிவாசல் கட்டிட முயற்சிக்கும் போது ஏற்பட்ட சிக்கல்களை மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி என்னிடம் எடுத்துக் கூறினார்.

2008ஆம் ஆண்டு முஹம்மதியா அறக்கட்டளையின் நிகழ்ச்சியில் பங்கெடுப்பதற்காக நான் தோப்புத்துறை வந்தபோது, ஜமாஅத் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, புதிய பள்ளிவாசல் கட்டுவதில் ஏற்பட்ட சிக்கல்களை வக்ஃபு வாரியத்தின் மூலம் சீர்செய்து புதிய பள்ளிவாசல் கட்ட உதவிட வேண்டும் என்று ஜமாஅத்தினர் என்னிடம் கேட்டுக் கொண்டார்கள்.

நான் சென்னை வந்ததும் அப்போதைய வக்ஃபு வாரிய தலைவரும், தமுமுகவின் பொதுச்செயலாளருமான சகோ. எஸ். ஹைதர் அலி அவர்களிடம் இதுகுறித்து பேசினேன். அவரும் இடையூறு இன்றி புதிய பள்ளிவாசல் நிர்மாணித்திட உடனடியாக அனுமதி வழங்கினார் என்பது தோப்புத்துறை மக்கள் அனைவரும் அறிந்த ஒன்று.

இப்போது கம்பீரமாக, அழகிய தோற்றத்தோடு கட்டப்பட்டிருக்கும் புதிய ஜாமியா பள்ளிவாசல், தோப்புத்துறைக்கு புதிய வரலாற்றை உருவாக்கியிருக்கிறது.

தோப்புத்துறையைப் பற்றி சொல்வதற்கு நிறைய செய்திகள் உண்டு.

சோழர் காலத்திலேயே முஸ்லிம்கள் வாழத்தொடங்கிய ஊர்களில் வங்கக் கடலோரம் அமைந்திருக்கும் தோப்புத்துறையும் ஒன்று.

முற்காலத்தில் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் தோப்புத்துறை மக்கள் தொழில் மற்றும் வேலை நிமித்தமாக பயணம் மேற்கொண்டு சிறந்த வணிகர்களாக திகழ்ந்திருக்கிறார்கள். இன்றும் சிங்கப்பூரில் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் என்ற பெயரில் ஒருங்கிணைந்து, குடும்பம் குடும்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, கத்தார், குவைத் உள்ளிட்ட அரபு நாடுகளில் செல்வாக்கோடு இருக்கிறார்கள். துபையில் சங்கம் அமைத்து செயல்படும் அளவுக்கு ஒற்றுமையாக செயல்படுபவர்களில் தோப்புத்துறை மக்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

பல பள்ளிவாசல்கள், அன்னை பாத்திமா (ரலி) அரபிக் கல்லூரி, ஊராட்சி ஒன்றிய முஸ்-ம் தொடக்கப் பள்ளி, காயிதே மில்லத் மெட்ரிகுலேஷன் பள்ளி, அல்நூர் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகியன தோப்புத்துறையின் பெருமைமிகு அடையாளங்கள்.

மார்க்கம், கல்வி, அரசியல் என அனைத்துத் துறைகளிலும் தோப்புத்துறை மக்கள் சிறந்து விளங்குகிறார்கள்.

முஸ்-ம் பொதுநல பைத்து ஹலரா சங்கம் (MPBHS), இஸ்லாமிய இளைஞர் நற்பணி ஹலரா சங்கம் (IINHS), இஸ்லாமிய இளைஞர் சீர்திருத்த முன்னணி (IICM), அன்வாருல் இஸ்லாம் கலாச்சார சங்கம் (AIKS) ஆகியன தோப்புத்துறையின் பொதுநல சேவைகளில் முத்திரை பதித்தவை.

தோப்புத்துறையின் புதிய தலைமுறைக்கு வழிகாட்டியாக 1990 முதல் செயல்பட்டு வரும் முஸ்லிம் மாணவர் முன்னணி (MSF)யின் கல்விப் பணிகள் பாராட்டுக்குரியவை.

இவை அனைத்துக்கும் வழிகாட்டியாக தாய் அமைப்பாக கட்டுக்கோப்புடன் செயல்பட்டு வரும் தோப்புத்துறை முஸ்லிம் ஜமாஅத் மன்றத்தை இந்நேரத்தில் மனதார பாராட்டுகிறேன்.

தோப்புத்துறை ஜமாத்தில் ஏற்றத்தாழ்வு இன்றி அனைவருக்கும் நிர்வாகப் பொறுப்புகளை பகிர்ந்து கொடுக்கும் ஜனநாயகப் பண்புகளைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

புதிய ஜாமியா பள்ளிவாசலின் மிக முக்கிய சிறப்பு என்னவெனில், பெண்கள் தொழுவதற்காக விசாலமான தனிப்பகுதி ஒன்று ஒதுக்கப்பட்டிருப்பதுதான் என்பதை எண்ணி மகிழ்கிறேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அழகிய வழிகாட்டலை நடைமுறைப்படுத்திய தோப்புத்துறை ஜமாஅத்தார்களை பாராட்டுகிறேன். தமிழகத்தின் பிற ஊர்களில் செயல்படும் ஜமாஅத்துகளுக்கு இது ஒரு முன்மாதிரி என்பதில் ஐயமில்லை. இதன்மூலம் பெண்களுக்கு இறையச்சத்துடன் கூடிய ஒழுக்கம், கண்ணியம், அறிவு ஆகியவை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. (அல்ஹம்து-ல்லாஹ்)

இயற்கை அழகு சூழ தென்னை, மா, முந்திரி என காய்-கனி தோப்புகளோடு அமைந்திருக்கும் தோப்புத்துறையில் எல்லோரும் ஒரு தோப்பு குயில்களாக வாழ்வதும், பிற சமுதாய மக்களோடு நல்லுறவு பாராட்டி மகிழ்வதும் அழகிய பண்பாடாகவும், கலாச்சாரமாகவும் இருக்கிறது.

இவ்வூர் மக்கள் சிறந்த முஸ்லிம்களாக, சிறந்த இந்தியர்களாக எப்போது சீறும் சிறப்புமாக வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

யார் ஒருவர் இவ்வுலகில் இறைவனுக்காக ஒரு பள்ளிவாசலை கட்டுகிறார்களோ அவர்களுக்கு இறைவன் சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை கட்டுகிறான் என்ற நபிமொழிக்கேற்ப இவ்வழகிய பணியில் தங்களை இணைத்துக்கொண்ட அனைவருக்கும் இவ்வுலகிலும், மறுஉலகிலும் இறைவன் எல்லா வளத்தையும் நல்கட்டும் என பிரார்த்திக்கிறேன். உளமாற வாழ்த்துகிறேன்.

என்றும் அன்புடன்,

(எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்)

கருத்துகள் இல்லை: