செவ்வாய், 6 ஜூலை, 2010

ஈரான் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப பிரிட்டன், ஜெர்மனி விமான நிலையங்கள் மறுப்பு

Iran Air
லண்டன்: ஈரான் நாட்டு விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப பிரிட்டன், ஜெர்மன், குவைத் நாட்டு விமான நிலையங்கள் மறுத்துள்ளன.

அதே போல ஐக்கிய அரபு நாட்டு விமான நிலையங்களிலும் ஈரான் நாட்டு விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதை யுஏஇ மறுத்துள்ளது.

இஸ்ரேலுக்குப் போட்டியாக அணு குண்டு தயாரிப்பில் ஈடுபடும் ஈரானை முடக்க அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் பல வழிகளில் முயன்று வருகின்றன. பொருளாதார, தொழில்நுட்ப, பாதுகாப்பு, வர்த்தகத் தடைகள் விதித்தாலும் ஈரானின் அணு ஆராய்ச்சிப் பணிகள் தொடர்ந்து வருகின்றன.

இந் நிலையில் ஈரான் விமானங்களுக்கு எரிபொருள் இல்லை என்று கூறி அடுத்த ஆயுதத்தை பிரயோகம் செய்துள்ளன இந்த நாடுகள். இதன்மூலம் ஈரான் நாட்டு விமானத்துறையை சீர்குலைக்கவும், அதன் வருவாயைத் தடுக்கவும் முயற்சி செய்யப்படுவதாகத் தெரிகிறது.

ஈரான் மீதான இந்த விமான எரிபொருள் தடைக்கு மேலும் பல நாடுகளின் ஆதரவைப் பெறவும் முயற்சி நடக்கிறது. அந்த வகையில் ஐக்கிய அரபு நாடுகளிலும் ஈரான் விமானங்களுக்கு எரிபொருள் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வருகின்றன.

அதே போல ஈரான் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப வேண்டாம் என்று ஐரோப்பாவில் உள்ள தனது பெட்ரோலிய பங்குகளுக்கு பிரிட்டிஷ் பெட்ரோலியம் மற்றும் ஷெல் நிறுவனம் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளன. அமெரிக்க காங்கிரஸ் ஈரான் மீது விதித்த புதிய தடைகள் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பிரிட்டிஷ் பெட்ரோலியம் அறிவித்துள்ளது. மேலும் ஈரான் விமானத்துறையுடனான எரிபொருள் சப்ளை காண்ட்ராக்டை புதுப்பிக்கவும் பிரிட்டிஷ் பெட்ரேலியம் மறுத்துள்ளது.

தங்களது விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப மறுப்பது சர்வதேச விதிமுறைகளுக்கு எதிராது என்று ஈரான் ஏர்லைன்ஸ் யூனியனின் செயலாளர் மெஹ்தி அலியாரி கூறியுள்ளார்.

இதற்கிடையே தங்கள் விமானங்களுக்கு தடை விதித்த நாடுகளின் விமானங்கள், கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்ப மாட்டோம் என்று ஈரான் நாட்டு மூத்த அரசியல் தலைவரான ஹெஸ்மதுல்லா பலாஹத்பிசே தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் ஈரான் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பவில்லை என்ற செய்தியை ஐக்கிய அரபு நாடுகள் மறுத்துள்ளது. இது குறித்து அபுதாபி விமான நிலைய செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஈரான் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப நாங்கள் உடன்பாடு செய்துள்ளோம். அதன்படி தொடர்ந்து எரிபொருள் நிரப்பப்படும் என்றார்.

அதே போல துபாய் விமான நிலைய ஆணையமும் ஈரான் விமானங்களுக்கு தொடர்ந்து எரிபொருள் நிரப்பப்படுவதாகக் கூறியுள்ளது.

கடந்த வாரம் ஈரான் மீது அமெரிக்க காங்கிரஸ் கொண்டு வந்த மிகக் கடுமையான தீர்மானத்தில் அதிபர் பராக் ஒபாமா கையெழுத்திட்டார். அதன்படி, ஈரான் விமானங்களுக்கு எரிபொருள் வழங்கும் நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் அபராதம் விதிக்கலாம்.

எரிபொருளை எந்த நாடும் நிறுத்தவில்லை-ஈரான்:

இதற்கிடையே ஈரான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ராமின் மெஹ்மன்பரஸ்த் கூறுகையில், ஈரான் நாட்டு விமானங்களுக்கு சில நாடுகளில் எரிபொருள் நிரப்ப அனுமதி தரப்படவில்லை என்பது தவறான செய்தி. ஈரான் விமானத்துறையை சீர்குலைக்கவே இந்த பொய்ப் பிரச்சாரம் நடக்கிறது என்றார்.

ஆனால், தங்களது விமானங்களை பயணிகள் தவிர்க்க ஆரம்பித்துவிடக் கூடாது என்பதற்காக ஈரான் இவ்வாறு கூறுவதாகத் தெரிகிறது.

இந் நிலையில் ஜெர்மனியி்ன் ஹேம்பர்க் விமான நிலையத்தில் ஈரான் விமானத்துக்கு எரிபொருள் நிரப்ப அனுமதி மறுக்கப்பட்டதால் அந்த விமானம் வியன்னாவில் தரையிறங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை: