வியாழன், 29 ஜூலை, 2010

போஸ்னியா 'ஸ்ரெப்ரெனிக்கா' இனப்படுகொலை: 15 வது வருட நினைவு தினம்

போஸ்னியா ஸ்ரெப்ரெனிக்கா முஸ்லிம்கள் இனப்படுகொலை நடந்து
15 வருடம் முடிந்ததையடுத்து போஸ்னியாவில் கடந்த ஜூலை 15 அன்று நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் நடந்த மிகப் பெரிய இனப்படுகொலை போஸ்னியா முஸ்லிம்கள் இனப்படுகொலையாகும்.

ஏறத்தாழ 8000 போஸ்னிய முஸ்லிம்கள் செர்பியர்களால் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டனர்.

ஸ்ரெப்ரெனிக்காவிலிருந்து 6 கி.மீ அருகில் உள்ள போடோகேரி என்ற கிராமத்தில் நடைப்பெற்ற நினைவு தின நிகழ்சிகளில் 60,000 பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 775 பேரின் உடல்கள், இதற்கு முன்னர் அடக்கம் செய்யப்பட்ட 3,749 பேரின் உடல்களுடன் சேர்த்து அடக்கம் செய்யப்பட்டது. இதில் இறந்தவர்களின் உறவினர்கள், நண்பர்கள், மற்றும் ஆதரவாளர்கள் அடக்கஸ்தலத்தில் குழுமி இறந்தவர்களுக்காக கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்தனர்.

ஐக்கிய நாடுகளின் இராணுவத்தின் பாதுகாப்பில் இருந்த முஸ்லிம்கள் பகுதிகளில் செர்பிய இராணுவத்தினர் நுழைந்து இந்த இனப்படுகொலையை நடத்தினர்.

நகர்புற முஸ்லிம் ஆண்களும்,சிறுவர்களும் மலைப்பகுதிகளில் தப்பி ஓடி ஒழிந்தனர். ஆனாலும், அவர்களை செர்பிய இராணுவத்தினர் தேடிக் கண்டுபிடித்து சுட்டுக் கொன்றனர். இறந்தவர்களின் உடல்களை பெரிய குழிகளில் போட்டு ஒன்றாக புதைத்தனர். இந்த மிகப் பெரிய படுகொலையை மூடி மறைக்கும் முயற்சியாக கூட்டாக புதைக்கப்பட்ட உடல்களை மீண்டும் தோண்டி எடுத்து சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் 70 க்கும் மேற்பட்ட வெவ்வேறான இடங்களில் புதைத்தனர்.

இனப்படுகொலை குற்றச்சாட்டு
இந்தக் கூட்டுப் படுகொலையை ஐக்கிய நாடுகளின் போர்கால
குற்ற நீதிமன்றமும் உலக நீதிமன்றமும் இனப்படுகொலை என முடிவு செய்துள்ளது. யுகோஸ்லாவியாவின் இருண்ட நாட்களாக இந்நிகழ்வு நினைவு கூறப்படுகிறது.

இந்த இனப்படுகொலை சம்பவத்தில் இழந்த இரண்டு தலைமுறை ஆண்கள் மற்றும் சிறுவர்களை இழந்து தவிக்கும் சோகத்திலிருந்து மீள கஷ்டப்படும் போராடும் மக்களது ஒரு உணர்ச்சிப் பூர்வமான நிகழ்ச்சியாக இருந்தது ஞயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்ரெப்ரெனிக்கா நினைவு நிகழ்ச்சி.

கதீஜா மேச்டோவிக் என்ற 68 வயது நிறைந்த பெண்மணி, தன் கணவன் மற்றும் இரண்டு மகன்களின் உடல்களை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அடக்கம் செய்தார். "அவர்கள் உயிருடன் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தேன். இவ்வளவு கொடூரமான படுகொலைகள் நிகழ்ந்திருக்கும் என்பதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இன்று என் நம்பிக்கையும் இறந்து விட்டது." என அவர் கூறினார்.

மேலும் "என்னுடைய மகன்கள் மட்டும் கொல்லப்படவில்லை , இதைப் போல் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம், இந்த பகுதியில் முஸ்லிம்களே வாழ கூடாது அல்லது இல்லாமல் ஆக்கவேண்டும் என்பதை உறுதி படுத்துவதாக இருந்தது. என்னைப் போன்ற ஒரு நிலை உலகில் வேறு எந்த தாய்க்கும் நிகழக் கூடாது என பிரார்த்தனை செய்கிறேன்" என்றும் அவர் கூறினார்.

கிட்டத்தட்ட இறந்தவர்களில் 6500 பேர்களின் உடல்கள் கண்டறியப் பட்டுள்ளது, இருந்தாலும் கண்டுபிடிக்கப்படாத நபர்களின் உடல்களின் உறவினர்களோ, நகரை சுற்றியுள்ள அடர்த்தியான காட்டுப் பகுதிகளில் மேலும் உடல்கள் கிடைக்கலாம் என நம்புகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் செர்பியாவின் பிரதமர் போரிஸ் டாடிக் கலந்து கொண்ட முக்கியமான் நபர்களில் முதல் நபராக இருந்தார்.

நட்புணர்வு மற்றும் அமைதியை உண்டாக்கும் விதமாக இந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக அவர் கூறினார்.

மேலும் டாடிக் கூறும்போது; "இதில் பங்கு கொள்வதன் மூலம் நாட்டு மக்களிடையே நட்புணர்விக்கான பாலத்தை உருவாக முடியும்" என தான் நம்புவதாக அவர் கூறினார். இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் ஒரு சிலர் செர்பியாவின் பிரதமரை பேச விடாமல் வழி மறித்தனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜிமாளுடீன் லாடிக் என்ற முஸ்லிம் அரசியல் தலைவர் அல்-ஜசீராவிடம் கூறுகையில் "போஸ்னியாவில் இனப்படுகொலை சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்கத் தயாராக இல்லாத செர்பியத் தலைவர்கள் இருக்கும் நிலையில் டாடிக் உளப் பூர்வமாக இணக்கம் ஏற்ப்படுத்த விரும்புகிறார்" என கூறினார்.

இனப்படுகொலை குற்றச்சாட்டு மறுப்பு
செர்பிய தேசியவாத அரசியல் தலைவர்களால் வழி நடத்தப்படும் செர்பியா,இந்த இனப்படுகொலை கொடூரத்தின் அளவினை பல வ்ருடங்களாக மறுத்து வருகிறது. இந்த இனப்படுகொலை சம்பவம் மிகைப்படுத்திக் காட்டப்படுவது தங்கள் நாட்டிற்கு எதிராக உலக நாடுகள் செய்யும் அரசியல் சதி என்று நம்புகின்றனர்.

ஆனால் மார்ச் மாதம் செர்பிய நாடாளுமன்றம் இந்த இனப்படுகொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இறந்தவர்கள் மற்றும் அவர்களும் குடும்பதினர்களிடம் மன்னிப்பு கேட்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.

ஜெனரல் ராட்கோ மலாடிக் இந்த இனப்படுகொலைக்கு சூத்திரதாரியகவும்,முக்கியமான காரணகர்தாவாகவும் குற்றம் சுமத்தப் பட்டுள்ளான். இவன் இன்னும் செர்பியாவில் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக நம்பபடுகிறது. செர்பிய மக்கள் இவனை ஒரு ஹீரோ போன்று காண்கின்றனர்.

மற்றொரு குற்றவாளியான ராடோவன் கராட்சிட் 2008ம் ஆண்டு பெல்கிராத் என்ற இடத்தில கைது செய்யப்பட்டான். தற்போது இனப்படுகொலை, போர்க்குற்றம் மற்றும் மனித இனத்திற்கு எதிரான குற்றம் ஆகிய வழக்குகளில் குற்றம் சாடடப்பட்டு இண்டர்நேஷனல் கிரிமினல் ட்ரிபியூனல் ஃபார் தி ஃபார்மர் யுகோஸ்லாவிய (ICTY ) நீதிமன்றத்தில் வழக்குகளை சந்தித்து வருகிறான். அவன் தோற்றுவித்த அரசியல் கட்சியான செர்பிய டெமோக்ரடிக் பார்ட்டி அவனை கவுரவிக்கும் விதமாக பதக்கம் கொடுக்க முடிவு செய்துள்ளது.

மேலும் அக்கட்சி கடந்த கால நிகழ்சிகளுக்காக பற்றி தான் வெட்கப் படவில்லை என்றும் கூறுகிறது.

இந்த இனப்படுகொலையை அனுமதித்தற்காக ஐக்கிய நாடுகளின் அமைதிக் காப்பாளர்கள், பெரிய அளவில் தீவிரமான கண்டனத்திற்கு உள்ளானர்.

டச்சுப் படைகள் 'ஸ்ரெப்ரெனிக்கா' முஸ்லிம்கள் பகுதியை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றிருந்தது ஆனால் அதற்கான தயாரிப்புகள் இயந்திரங்கள் மற்றும் எந்த விதமான கட்டளைகளும் இல்லை.

போஸ்னிய முஸ்லிம்களை ஒன்றும் செய்ய மாட்டோம் என்று செர்பிய இராணுவ வீரர்கள் உறுதி அளித்த பின்புதான் போஸ்னிய முஸ்லிம் ஆண்களையும் சிறுவர்களையும் அழைத்துச் செல்ல அனுமதித்ததாக டச்சுப் படைகள் தெரிவித்துள்ளது.

source:Aljazeera

கருத்துகள் இல்லை: